சாமுவேலின் முதலாம் புத்தகம் 14:24-30

சாமுவேலின் முதலாம் புத்தகம் 14:24-30 TAERV

அன்று சவுல் ஒரு பெரிய தவறு செய்தான். இஸ்ரவேலர் களைப்பாகவும் பசியோடும் இருந்தனர். அவர்களிடம், “மாலைக்கு முன் யாராவது உண்டாலோ, பகைவரை வெல்லுமுன் யாராவது உண்டாலோ தண்டிக்கப்படுவார்கள்!” என்று ஆணையிட்டிருந்தான். எனவே யாரும் அன்று உண்ணாமல் இருந்தனர். சிலர் போர் செய்த வண்ணம் காட்டுப் பகுதிக்குப் போனபோது தேன் கூடுகளைக் கண்டும் ஆணைக்குப் பயந்து உண்ணவில்லை. ஆனால் யோனத்தானுக்கு அவற்றைப்பற்றி எந்த விஷயமும் தெரியாது. உண்ணாமலிருக்க ஜனங்கள் நிர்பந்திக்கப்பட்டதைப்பற்றி அவன் எதுவும் அறிந்திருக்கவில்லை. யோனத்தானின் கையில் ஒரு கோல் இருந்தது. கோலின் ஒரு முனையைத்தேன் கூட்டில் நுழைத்து வெளியே எடுத்து, அத்தேனைப் பருகினான். பருகி முடிந்ததும் மிகவும் தெம்பாக இருப்பதாக உணர்ந்தான். ஒரு வீரன், “உமது தந்தை ஒரு சிறப்பான ஆணைச் செய்யும்படி எல்லா வீரர்களையும் நிர்பந்தித்திருக்கிறார். யாரேனும் ஒருவர் இன்றைய தினம் உண்டால் தண்டிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்! எவரும் உண்ணவில்லை அதனால்தான் எல்லாரும் சோர்வாக உள்ளனர்” என்றான். யோனத்தானோ, “என் தந்தை ஏராளமான துன்பங்களை நாட்டுக்குத் தந்துள்ளார்! கொஞ்சம் தேன் உண்டதும் எனக்கு எவ்வளவு உற்சாகமாக இருக்கிறது என்பதை நீயே பார்! பகைவரிடமிருந்து எடுத்த உணவை உண்டிருந்தால் நாம் மேலும் உற்சாகமாக இருந்திருக்க முடியும். நாம் இன்னும் அதிக பெலிஸ்தர்களைக் கொன்றிருக்கலாம்!” என்றான்.