1 இராஜாக்கள் 8:41-53

1 இராஜாக்கள் 8:41-53 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“உம்முடைய மக்களான இஸ்ரயேலரைச் சேராதவனும், தூரதேசத்திலிருந்து வந்த அந்நியனும் உம்முடைய பெயரின் நிமித்தம் வரலாம். ஏனெனில் மனிதர் உமது பெரிதான பெயரையும், உமது வலிமைமிக்க கரத்தையும், நீட்டிய புயத்தையும் பற்றிக் கேள்விப்படுவார்கள். இவ்விதமாய் அந்நியர் வந்து இந்த ஆலயத்தை நோக்கி மன்றாடும்போது, நீர் உமது உறைவிடமாகிய பரலோகத்திலிருந்து அதைக்கேட்டு அந்த அந்நியன் உம்மிடம் கேட்பது எதுவானாலும் அதைச் செய்யும். அப்பொழுது பூமியில் எல்லா மக்களும் உமது பெயரை அறிந்து, உமது சொந்த மக்களாகிய இஸ்ரயேலர் நடப்பதுபோல் உமக்குப் பயந்து நடப்பார்கள். அத்துடன் நான் கட்டிய இந்த ஆலயத்தில் உமது பெயர் விளங்குகிறது என்றும் அறிவார்கள். “உம்முடைய மக்களை நீர் எங்கேயாகிலும் அவர்களுடைய பகைவர்களை எதிர்த்துப் போரிட அனுப்பினால், அவர்கள் யுத்தத்திற்குப் போவார்கள்; அவ்வேளையில் நீர் தெரிந்துகொண்ட பட்டணத்தையும், உமது பெயருக்காக நான் கட்டிய ஆலயத்தையும் நோக்கி யெகோவாவிடம் அவர்கள் மன்றாடும்போது, பரலோகத்திலிருந்து அவர்களுடைய மன்றாட்டையும், வேண்டுதலையும் கேட்டு அவர்களுடைய சார்பாய் செயலாற்றும். “பாவம் செய்யாதவன் எவனும் இல்லை. அதனால் அவர்கள் உமக்கெதிராகப் பாவம் செய்வார்கள்; அப்பொழுது நீர் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்களை அவர்களின் பகைவர்களிடம் ஒப்புக்கொடுத்தால், பகைவர்கள் அவர்களைத் தங்கள் சொந்த நாட்டிற்குத் தூரமாகவோ அருகிலோ சிறைபிடித்துக்கொண்டு போவார்கள். அவர்கள் தாங்கள் கைதிகளாய் இருக்கும் நாட்டில் உணர்ந்து மனந்திரும்பி, ‘நாங்கள் பாவஞ்செய்து, தீமையான செயல்களைச் செய்து, கொடுமையாய் நடந்தோம்’ என்று அவர்களை சிறைப்பிடித்தவரின் நாட்டிலே உம்மிடம் கெஞ்சி, அவர்கள் தங்களைச் சிறைப்பிடித்துக் கொண்டுபோன தங்கள் பகைவரின் நாட்டில், தங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, நீர் அவர்களுடைய முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டையும், நீர் தெரிந்துகொண்ட பட்டணத்தையும், நான் உமது பெயருக்கென கட்டிய ஆலயத்தையும் நோக்கி உம்மை நோக்கி அவர்கள் மன்றாடினால், நீர் குடியிருக்கும் இடமான பரலோகத்திலிருந்து அவர்கள் மன்றாட்டையும் கெஞ்சுதலையும் கேட்டு, அவர்கள் சார்பாய் செயலாற்றும். உமக்கெதிராகப் பாவஞ்செய்த உமது மக்களை மன்னியும்; உமக்கு எதிராகச் செய்த எல்லாக் குற்றங்களையும் அவர்களுக்கு மன்னித்து, அவர்களை வெற்றிகொண்டவர்கள் அவர்களுக்கு இரக்கம் காட்டும்படி செய்யும். ஏனெனில் அவர்கள், உம்முடைய மக்களும், உம்முடைய உரிமைச்சொத்துமாய் இருக்கிறார்கள். இரும்பு உருக்கும் சூளையாகிய அந்த எகிப்திலிருந்து நீரே அவர்களை வெளியே கொண்டுவந்தீர். “உமது அடியானுடைய விண்ணப்பத்திற்கும், உமது மக்களாகிய இஸ்ரயேலின் விண்ணப்பத்திற்கும் உமது கண்கள் திறந்திருப்பதாக. அவர்கள் உம்மை நோக்கிக் கதறும் போதெல்லாம் அவர்களுக்குச் செவிகொடுப்பீராக. ஆண்டவராகிய யெகோவாவே, நீர் எங்கள் முற்பிதாக்களை எகிப்திலிருந்து கொண்டுவந்தபோது, உமது அடியவன் மோசே மூலம் அறிவித்தபடியே நீர் உலகிலுள்ள எல்லா மக்களிலும் இஸ்ரயேலரை உமது உரிமைச்சொத்தாகத் தெரிந்துகொண்டீர்” என்றான்.

1 இராஜாக்கள் 8:41-53 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலர்கள் அல்லாத அந்நியர்கள் உமது மகத்துவமான நாமத்தையும், உமது பலத்த கரத்தையும், உமது ஓங்கிய புயத்தையும் கேள்விப்படுவார்களே. அப்படிப்பட்ட அந்நியனும், உமது நாமத்தினிமித்தம் தூர தேசத்திலிருந்து வந்து, இந்த ஆலயத்திற்கு நேராக விண்ணப்பம் செய்தால், உமது தங்குமிடமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் மக்களெல்லோரும் உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலைப்போல உமக்குப் பயப்படும்படியும், நான் கட்டின இந்த ஆலயத்திற்கு உம்முடைய நாமம் வைக்கப்பட்டதென்று அறியும்படியும், உம்முடைய நாமத்தை அறிந்துகொள்வதற்காக, அந்த அந்நியன் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் செய்வீராக. நீர் உம்முடைய மக்களை அனுப்பும் வழியிலே அவர்கள் தங்கள் எதிரிகளோடு யுத்தம் செய்யப் புறப்படும்போது, நீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக யெகோவாவை நோக்கி விண்ணப்பம் செய்தால், பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்களுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்களுடைய நியாயத்தை விசாரிப்பீராக. பாவம் செய்யாத மனிதன் இல்லையே; ஆகையால், அவர்கள் உமக்கு விரோதமாகப் பாவம்செய்து, தேவரீர் அவர்கள்மேல் கோபம்கொண்டு, அவர்களுடைய எதிரிகளுடைய கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அந்த எதிரிகள் அவர்களைத் தூரத்திலோ அருகிலோ இருக்கிற தங்கள் தேசத்திற்குச் சிறைபிடித்துக் கொண்டுபோகும்போது, அவர்கள் சிறைப்பட்டுப் போயிருக்கிற தேசத்திலே தங்களில் உணர்வடைந்து, மனந்திரும்பி: நாங்கள் பாவம்செய்து, அக்கிரமம்செய்து, துன்மார்க்கமாக நடந்தோம் என்று தங்களுடைய சிறையிருப்பான தேசத்திலே உம்மை நோக்கி வேண்டுதல் செய்து, தங்களைச் சிறைபிடித்துக்கொண்ட தங்களுடைய எதிரிகளின் தேசத்திலே தங்களுடைய முழு இருதயத்தோடும் தங்களுடைய முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, தேவரீர் தங்களுடைய பிதாக்களுக்குக் கொடுத்த தங்களுடைய தேசத்திற்கும், தேவரீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக உம்மை நோக்கி விண்ணப்பம் செய்யும்போது, நீர் தங்குமிடமாகிய பரலோகத்திலே இருக்கிற தேவரீர் அவர்களுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்களுடைய நியாயத்தை விசாரித்து, உம்முடைய மக்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவத்தையும், அவர்கள் உம்முடைய கட்டளையை மீறிய அவர்களுடைய துரோகங்களை எல்லாம் மன்னித்து, அவர்களைச் சிறைபிடித்துக் கொண்டுபோகிறவர்கள் அவர்களுக்கு இரங்கத்தக்கதான இரக்கத்தை அவர்களுக்குக் கிடைக்கச் செய்வீராக. அவர்கள் எகிப்து என்கிற இரும்புச் சூளையின் நடுவிலிருந்து தேவரீர் புறப்படச்செய்த உம்முடைய மக்களும் உம்முடைய சுதந்திரமுமாக இருக்கிறார்களே. அவர்கள் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் அவர்களுக்குச் செய்யும்படி, உம்முடைய கண்கள் உமது அடியானின் வேண்டுதலுக்கும், உமது மக்களாகிய இஸ்ரவேலின் வேண்டுதலுக்கும் திறந்திருப்பதாக. கர்த்தராகிய ஆண்டவரே, நீர் எங்களுடைய பிதாக்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்யும்போது, உம்முடைய ஊழியக்காரனாகிய மோசேயைக்கொண்டு சொன்னபடியே, தேவரீர் பூமியின் எல்லா மக்களிலும் அவர்களை உமக்குச் சுதந்திரமாகப் பிரித்தெடுத்தீரே என்று விண்ணப்பம் செய்தான்.

1 இராஜாக்கள் 8:41-53 பரிசுத்த பைபிள் (TAERV)

“வெளி இடங்களில் உள்ள ஜனங்களும் உமது உயர்வையும் பலத்தையும் அறிவார்கள். இந்த ஆலயத்தில் ஜெபிப்பதற்காக அவர்கள் வெகு தூரத்திலிருந்து வருவார்கள். பரலோகத்திலிருந்து அவர்களது ஜெபங்களுக்குச் செவிசாயும். அவர்கள் கேட்பவற்றை தந்து உதவும். பிறகு அவர்களும் இஸ்ரவேல் ஜனங்களைப் போலவே உம்மிடம் பயமும் மரியாதையும் வைத்திருப்பார்கள். பின் எல்லா இடங்களிலும் உள்ள ஜனங்களும் உமது நாமத்தைத் தாங்கிய நான் கட்டியிருக்கிற இந்த ஆலயத்தை அறிவார்கள். “சில நேரங்களில் உமது ஜனங்களுக்கு அவர்களது எதிரிகளோடு சண்டையிடுமாறு நீர் ஆணையிடுவீர். பிறகு உமது ஜனங்கள் உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நகரத்திற்கும் நான் உம்மை மகிமைப்படுத்துவதற்குக் கட்டியிருக்கிற ஆலயத்திற்கும் திரும்பிவந்து அவர்கள் உம்மிடம் ஜெபம் செய்வார்கள். அப்போது, உம்முடைய பரலோகத்திலிருந்து அந்த ஜெபங்களுக்கு செவிசாய்த்து அவர்களுக்கு உதவும். “உமது ஜனங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்வார்கள். நான் இதனை அறிவேன். ஏனென்றால் ஒவ்வொருவரும் பாவம் செய்கின்றனர். உமது ஜனங்களின்மேல் கோபமாக இருப்பீர். பகைவர்களால் தோற்கடிக்கப்படச் செய்வீர். பகைவர்கள் அவர்களைக் கைது செய்து தூரநாடுகளுக்குக் கொண்டுப் போவார்கள். அங்கே உமது ஜனங்கள் நடந்தவற்றை நினைத்துப் பார்ப்பார்கள். தம் பாவங்களுக்காக வருந்தி உம்மிடம் ஜெபிப்பார்கள், ‘பாவம் செய்து உமக்கு தவறிழைத்துவிட்டோம்’ என்பார்கள். அவர்கள் தொலைவிலுள்ள அந்த நிலப்பகுதியில் இருப்பார்கள். அவர்களை அடிமைப்படுத்திய எதிரிகளின் நிலத்திலிருந்து முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் உம்மை நோக்கித் திரும்பினாலும் அவர்களது முற்பிதாக்களுக்கு நீர் கொடுத்த நிலத்தை நோக்கி உம்மிடம் ஜெபித்தாலும், நீர் தேர்ந்தெடுத்த நகரத்தை நோக்கித் திரும்பினாலும் நான் உமது நாமத்தால் கட்டியுள்ள ஆலயத்தை நோக்கித் திரும்பினாலும், நீர் அவர்களது ஜெபங்களுக்கு பரலோகத்திலிருந்து செவிசாய்த்து உதவும். உமது ஜனங்களின் பாவங்களை மன்னியும். அவர்கள் உமக்கு எதிராக திரும்பியதற்கு மன்னித்துவிடும். பகைவர்கள் அவர்களிடம் இரக்கத்துடன் இருக்கச் செய்யும். அவர்கள் உம்முடைய ஜனங்கள் என்பதை மறவாதீர். அவர்களை எகிப்திலிருந்து மீட்டு வந்ததை நினைவுகூரும். சூடான அடுப்பிலிருந்து அவர்களைக் காப்பாற்றியதைப் போன்ற செயல் அது! “தேவனாகிய கர்த்தாவே, என் ஜெபத்தையும் இஸ்ரவேல் ஜனங்களின் ஜெபங்களையும் கேளும். உதவி கேட்கும்போதெல்லாம் உதவும். நீர் அவர்களை உலகிலுள்ள அனைத்து ஜனங்களிடமிருந்தும் தேர்ந்தெடுத்தீர். உமது வேலையாள் மோசே மூலம் எங்கள் முற்பிதாக்களை எகிப்திற்கு வெளியே கொண்டுவந்தபோது நீர் அதை வெளிப்படுத்தினீர்” என்றான்.

1 இராஜாக்கள் 8:41-53 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் ஜாதியல்லாத அந்நிய ஜாதியார் உமது மகத்துவமான நாமத்தையும், உமது பலத்த கரத்தையும், உமது ஓங்கிய புயத்தையும் கேள்விப்படுவார்களே. அப்படிக்கொத்த அந்நிய ஜாதியானும், உமது நாமத்தினிமித்தம் தூர தேசத்திலிருந்து வந்து, இந்த ஆலயத்துக்கு நேராக விண்ணப்பம்பண்ணினால், உமது வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் ஜனங்களெல்லாரும் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலைப்போல உமக்குப் பயப்படும்படிக்கும், நான் கட்டின இந்த ஆலயத்துக்கு உம்முடைய நாமம் தரிக்கப்பட்டதென்று அறியும்படிக்கும், உம்முடைய நாமத்தை அறியத்தக்கதாக, அந்த அந்நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் செய்வீராக. நீர் உம்முடைய ஜனங்களை அனுப்பும் வழியிலே அவர்கள் தங்கள் சத்துருக்களோடு யுத்தம் பண்ணப் புறப்படும்போது, நீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்துக்கும், உம்முடைய நாமத்துக்கு நான் கட்டின இந்த ஆலயத்துக்கும் நேராக கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினால், பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரிப்பீராக. பாவஞ்செய்யாத மனுஷன் இல்லையே; ஆகையால், அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, தேவரீர் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்கள் சத்துருக்கள் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அந்தச் சத்துருக்கள் அவர்களைத் தூரத்திலாகிலும் சமீபத்திலாகிலும் இருக்கிற தங்கள் தேசத்திற்குச் சிறைபிடித்துக்கொண்டு போகும்போது, அவர்கள் சிறைப்பட்டுப் போயிருக்கிற தேசத்திலே தங்களில் உணர்வடைந்து, மனந்திரும்பி: நாங்கள் பாவஞ்செய்து, அக்கிரமம்பண்ணி, துன்மார்க்கமாய் நடந்தோம் என்று தங்கள் சிறையிருப்பான தேசத்திலே உம்மை நோக்கி வேண்டுதல் செய்து, தங்களைச் சிறைபிடித்துக்கொண்ட தங்கள் சத்துருக்களின் தேசத்திலே தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, தேவரீர் தங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தங்கள் தேசத்திற்கும், தேவரீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக உம்மை நோக்கி விண்ணப்பம்பண்ணும்போது, உமது வாசஸ்தலமாகிய பரலோகத்திலே இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரித்து, உம்முடைய ஜனங்கள் உமக்கு விரோதமாய்ச் செய்த பாவத்தையும், அவர்கள் உம்முடைய கட்டளையை மீறிய அவர்கள் துரோகங்களையும் எல்லாம் மன்னித்து, அவர்களைச் சிறைபிடித்துக் கொண்டுபோகிறவர்கள் அவர்களுக்கு இரங்கத்தக்கதான இரக்கத்தை அவர்களுக்குக் கிடைக்கப்பண்ணுவீராக. அவர்கள் எகிப்தென்கிற இரும்புக் காளவாயின் நடுவிலிருந்து தேவரீர் புறப்படப்பண்ணின உம்முடைய ஜனமும் உம்முடைய சுதந்தரமுமாய் இருக்கிறார்களே. அவர்கள் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் அவர்களுக்குச் செய்யும்படி, உம்முடைய கண்கள் உமது அடியானின் வேண்டுதலுக்கும், உமது ஜனமாகிய இஸ்ரவேலின் வேண்டுதலுக்கும் திறந்திருப்பதாக. கர்த்தராகிய ஆண்டவரே, நீர் எங்கள் பிதாக்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணும்போது, உம்முடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு சொன்னபடியே, தேவரீர் பூமியின் சகல ஜனங்களிலும் அவர்களை உமக்குச் சுதந்தரமாகப் பிரித்தெடுத்தீரே என்று விண்ணப்பம்பண்ணினான்.