1 இராஜாக்கள் 8:41-53

1 இராஜாக்கள் 8:41-53 TCV

“உம்முடைய மக்களான இஸ்ரயேலரைச் சேராதவனும், தூரதேசத்திலிருந்து வந்த அந்நியனும் உம்முடைய பெயரின் நிமித்தம் வரலாம். ஏனெனில் மனிதர் உமது பெரிதான பெயரையும், உமது வலிமைமிக்க கரத்தையும், நீட்டிய புயத்தையும் பற்றிக் கேள்விப்படுவார்கள். இவ்விதமாய் அந்நியர் வந்து இந்த ஆலயத்தை நோக்கி மன்றாடும்போது, நீர் உமது உறைவிடமாகிய பரலோகத்திலிருந்து அதைக்கேட்டு அந்த அந்நியன் உம்மிடம் கேட்பது எதுவானாலும் அதைச் செய்யும். அப்பொழுது பூமியில் எல்லா மக்களும் உமது பெயரை அறிந்து, உமது சொந்த மக்களாகிய இஸ்ரயேலர் நடப்பதுபோல் உமக்குப் பயந்து நடப்பார்கள். அத்துடன் நான் கட்டிய இந்த ஆலயத்தில் உமது பெயர் விளங்குகிறது என்றும் அறிவார்கள். “உம்முடைய மக்களை நீர் எங்கேயாகிலும் அவர்களுடைய பகைவர்களை எதிர்த்துப் போரிட அனுப்பினால், அவர்கள் யுத்தத்திற்குப் போவார்கள்; அவ்வேளையில் நீர் தெரிந்துகொண்ட பட்டணத்தையும், உமது பெயருக்காக நான் கட்டிய ஆலயத்தையும் நோக்கி யெகோவாவிடம் அவர்கள் மன்றாடும்போது, பரலோகத்திலிருந்து அவர்களுடைய மன்றாட்டையும், வேண்டுதலையும் கேட்டு அவர்களுடைய சார்பாய் செயலாற்றும். “பாவம் செய்யாதவன் எவனும் இல்லை. அதனால் அவர்கள் உமக்கெதிராகப் பாவம் செய்வார்கள்; அப்பொழுது நீர் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்களை அவர்களின் பகைவர்களிடம் ஒப்புக்கொடுத்தால், பகைவர்கள் அவர்களைத் தங்கள் சொந்த நாட்டிற்குத் தூரமாகவோ அருகிலோ சிறைபிடித்துக்கொண்டு போவார்கள். அவர்கள் தாங்கள் கைதிகளாய் இருக்கும் நாட்டில் உணர்ந்து மனந்திரும்பி, ‘நாங்கள் பாவஞ்செய்து, தீமையான செயல்களைச் செய்து, கொடுமையாய் நடந்தோம்’ என்று அவர்களை சிறைப்பிடித்தவரின் நாட்டிலே உம்மிடம் கெஞ்சி, அவர்கள் தங்களைச் சிறைப்பிடித்துக் கொண்டுபோன தங்கள் பகைவரின் நாட்டில், தங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, நீர் அவர்களுடைய முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டையும், நீர் தெரிந்துகொண்ட பட்டணத்தையும், நான் உமது பெயருக்கென கட்டிய ஆலயத்தையும் நோக்கி உம்மை நோக்கி அவர்கள் மன்றாடினால், நீர் குடியிருக்கும் இடமான பரலோகத்திலிருந்து அவர்கள் மன்றாட்டையும் கெஞ்சுதலையும் கேட்டு, அவர்கள் சார்பாய் செயலாற்றும். உமக்கெதிராகப் பாவஞ்செய்த உமது மக்களை மன்னியும்; உமக்கு எதிராகச் செய்த எல்லாக் குற்றங்களையும் அவர்களுக்கு மன்னித்து, அவர்களை வெற்றிகொண்டவர்கள் அவர்களுக்கு இரக்கம் காட்டும்படி செய்யும். ஏனெனில் அவர்கள், உம்முடைய மக்களும், உம்முடைய உரிமைச்சொத்துமாய் இருக்கிறார்கள். இரும்பு உருக்கும் சூளையாகிய அந்த எகிப்திலிருந்து நீரே அவர்களை வெளியே கொண்டுவந்தீர். “உமது அடியானுடைய விண்ணப்பத்திற்கும், உமது மக்களாகிய இஸ்ரயேலின் விண்ணப்பத்திற்கும் உமது கண்கள் திறந்திருப்பதாக. அவர்கள் உம்மை நோக்கிக் கதறும் போதெல்லாம் அவர்களுக்குச் செவிகொடுப்பீராக. ஆண்டவராகிய யெகோவாவே, நீர் எங்கள் முற்பிதாக்களை எகிப்திலிருந்து கொண்டுவந்தபோது, உமது அடியவன் மோசே மூலம் அறிவித்தபடியே நீர் உலகிலுள்ள எல்லா மக்களிலும் இஸ்ரயேலரை உமது உரிமைச்சொத்தாகத் தெரிந்துகொண்டீர்” என்றான்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 1 இராஜாக்கள் 8:41-53