உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலர்கள் அல்லாத அந்நியர்கள் உமது மகத்துவமான நாமத்தையும், உமது பலத்த கரத்தையும், உமது ஓங்கிய புயத்தையும் கேள்விப்படுவார்களே. அப்படிப்பட்ட அந்நியனும், உமது நாமத்தினிமித்தம் தூர தேசத்திலிருந்து வந்து, இந்த ஆலயத்திற்கு நேராக விண்ணப்பம் செய்தால், உமது தங்குமிடமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் மக்களெல்லோரும் உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலைப்போல உமக்குப் பயப்படும்படியும், நான் கட்டின இந்த ஆலயத்திற்கு உம்முடைய நாமம் வைக்கப்பட்டதென்று அறியும்படியும், உம்முடைய நாமத்தை அறிந்துகொள்வதற்காக, அந்த அந்நியன் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் செய்வீராக. நீர் உம்முடைய மக்களை அனுப்பும் வழியிலே அவர்கள் தங்கள் எதிரிகளோடு யுத்தம் செய்யப் புறப்படும்போது, நீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக யெகோவாவை நோக்கி விண்ணப்பம் செய்தால், பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்களுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்களுடைய நியாயத்தை விசாரிப்பீராக. பாவம் செய்யாத மனிதன் இல்லையே; ஆகையால், அவர்கள் உமக்கு விரோதமாகப் பாவம்செய்து, தேவரீர் அவர்கள்மேல் கோபம்கொண்டு, அவர்களுடைய எதிரிகளுடைய கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அந்த எதிரிகள் அவர்களைத் தூரத்திலோ அருகிலோ இருக்கிற தங்கள் தேசத்திற்குச் சிறைபிடித்துக் கொண்டுபோகும்போது, அவர்கள் சிறைப்பட்டுப் போயிருக்கிற தேசத்திலே தங்களில் உணர்வடைந்து, மனந்திரும்பி: நாங்கள் பாவம்செய்து, அக்கிரமம்செய்து, துன்மார்க்கமாக நடந்தோம் என்று தங்களுடைய சிறையிருப்பான தேசத்திலே உம்மை நோக்கி வேண்டுதல் செய்து, தங்களைச் சிறைபிடித்துக்கொண்ட தங்களுடைய எதிரிகளின் தேசத்திலே தங்களுடைய முழு இருதயத்தோடும் தங்களுடைய முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, தேவரீர் தங்களுடைய பிதாக்களுக்குக் கொடுத்த தங்களுடைய தேசத்திற்கும், தேவரீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக உம்மை நோக்கி விண்ணப்பம் செய்யும்போது, நீர் தங்குமிடமாகிய பரலோகத்திலே இருக்கிற தேவரீர் அவர்களுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்களுடைய நியாயத்தை விசாரித்து, உம்முடைய மக்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவத்தையும், அவர்கள் உம்முடைய கட்டளையை மீறிய அவர்களுடைய துரோகங்களை எல்லாம் மன்னித்து, அவர்களைச் சிறைபிடித்துக் கொண்டுபோகிறவர்கள் அவர்களுக்கு இரங்கத்தக்கதான இரக்கத்தை அவர்களுக்குக் கிடைக்கச் செய்வீராக. அவர்கள் எகிப்து என்கிற இரும்புச் சூளையின் நடுவிலிருந்து தேவரீர் புறப்படச்செய்த உம்முடைய மக்களும் உம்முடைய சுதந்திரமுமாக இருக்கிறார்களே. அவர்கள் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் அவர்களுக்குச் செய்யும்படி, உம்முடைய கண்கள் உமது அடியானின் வேண்டுதலுக்கும், உமது மக்களாகிய இஸ்ரவேலின் வேண்டுதலுக்கும் திறந்திருப்பதாக. கர்த்தராகிய ஆண்டவரே, நீர் எங்களுடைய பிதாக்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்யும்போது, உம்முடைய ஊழியக்காரனாகிய மோசேயைக்கொண்டு சொன்னபடியே, தேவரீர் பூமியின் எல்லா மக்களிலும் அவர்களை உமக்குச் சுதந்திரமாகப் பிரித்தெடுத்தீரே என்று விண்ணப்பம் செய்தான்.