1 இராஜாக்கள் 18:25-46

1 இராஜாக்கள் 18:25-46 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் அநேகரானதால் நீங்களே முந்தி ஒரு காளையைத் தெரிந்துகொண்டு அதை ஆயத்தம்பண்ணி, நெருப்புப்போடாமல் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள் என்றான். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி, அதை ஆயத்தம்பண்ணி: பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலைதொடங்கி மத்தியானமட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை. அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள். மத்தியானவேளையிலே எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம் போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான். அவர்கள் உரத்தசத்தமாய்க் கூப்பிட்டு, தங்கள் வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள். மத்தியானவேளை சென்றபின்பு, அந்திப்பலிசெலுத்தும் நேரமட்டாகச் சன்னதம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை, கவனிப்பாரும் இல்லை. அப்பொழுது எலியா சகல ஜனங்களையும் நோக்கி: என் கிட்டே வாருங்கள் என்றான்; சகல ஜனங்களும் அவன் கிட்டே வந்தபோது, தகர்க்கப்பட்ட கர்த்தருடைய பலிபீடத்தை அவன் செப்பனிட்டு: உனக்கு இஸ்ரவேல் என்னும் பேர் இருப்பதாக என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையைப்பெற்ற யாக்கோபுடைய குமாரரால் உண்டான கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து, அந்தக் கற்களாலே கர்த்தருடைய நாமத்திற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி, பலிபீடத்தைச் சுற்றிலும் தானியம் அளக்கிற இரண்டுபடி விதை விதைக்கத்தக்க இடமான ஒரு வாய்க்காலை உண்டாக்கி, விறகுகளை அடுக்கி, ஒரு காளையைச் சந்துசந்தாகத் துண்டித்து விறகுகளின்மேல் வைத்தான். பிற்பாடு அவன்: நீங்கள் நாலு குடம் தண்ணீர் கொண்டுவந்து, சர்வாங்க தகனபலியின்மேலும், விறகுகளின்மேலும் ஊற்றுங்கள் என்றான்; பின்பு இரண்டாந்தரமும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; இரண்டாந்தரமும் ஊற்றினார்கள்; அதற்குப்பின்பு மூன்றாந்தரமும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; மூன்றாந்தரமும் ஊற்றினார்கள். அப்பொழுது தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடினது; வாய்க்காலையும் தண்ணீரால் நிரப்பினான். அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து; ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படி செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும். கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான். அப்பொழுது: கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது. ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்றார்கள். அப்பொழுது எலியா அவர்களை நோக்கி: நீங்கள் பாகாலின் தீர்க்கதரிசிகளில் ஒருவனும் தப்பிப்போகாதபடிக்கு அவர்களைப் பிடியுங்கள் என்றான்; அவர்களைப் பிடித்தபோது, எலியா அவர்களைக் கீழே கீசோன் ஆற்றங்கரையிலே கொண்டுபோய், அங்கே அவர்களை வெட்டிப்போட்டான். பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், போஜனபானம்பண்ணும், பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான். ஆகாப் போஜனபானம்பண்ணப்போனான்; பின்பு எலியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்காலில் பட குனிந்து, தன் ஊழியக்காரனை நோக்கி: நீ போய்ச் சமுத்திரமுகமாய்ப் பார் என்றான்; அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான்; நீ இன்னும் ஏழுதரம் போய்ப் பார் என்றான். ஏழாந்தரம் இவன்: இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அத்தனைச் சிறிய மேகம் எழும்புகிறது என்றான்; அப்பொழுது அவன் நீ போய், ஆகாபை நோக்கி: மழை உம்மைத் தடைசெய்யாதபடிக்கு இரதத்தைப் பூட்டி, போய்விடும் என்று சொல் என்றான். அதற்குள்ளாக வானம் மேகங்களினாலும் காற்றினாலும் கறுத்து பெருமழை உண்டாயிற்று; ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான். கர்த்தருடைய கை எலியாவின்மேல் இருந்ததினால், அவன் தன் அரையைக் கட்டிக்கொண்டு, யெஸ்ரயேலுக்கு வருமட்டாக ஆகாபுக்கு முன் ஓடினான்.

1 இராஜாக்கள் 18:25-46 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எலியா பாகாலின் இறைவாக்கினரைப் பார்த்து, “நீங்கள் அதிகம் பேராய் இருப்பதனால், முதலில் நீங்கள் ஒரு காளையைத் தெரிந்தெடுத்து, ஆயத்தப்படுத்தி, உங்கள் தெய்வத்தைக் கூப்பிடுங்கள். ஆனால் நெருப்புக் கொழுத்தக் கூடாது” என்றான். அப்படியே அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை எடுத்து, ஆயத்தப்படுத்தினார்கள். அதன்பின்பு காலையிலிருந்து நண்பகல்வரை, பாகாலின் பெயரைச்சொல்லிக் கூப்பிட்டார்கள். “பாகாலே எங்களுக்குப் பதில் கொடும்” என்று கத்தினார்கள். ஆனால் அதற்கு ஒரு பதிலும் கிடைக்கவில்லை. அப்பொழுது அவர்கள் தாங்கள் செய்த பலிமேடையைச் சுற்றி நடனமாடினார்கள். மத்தியானமானபோது எலியா அவர்களைக் கேலிசெய்யத் தொடங்கினான். “இன்னும் பலமாகச் சத்தமிடுங்கள். அவன் ஒரு தெய்வம்தான். ஒருவேளை அவன் ஆழமாக யோசித்துக்கொண்டிருப்பான் அல்லது வேலைகள் செய்துகொண்டிருப்பான் அல்லது தூரப்பயணம் போயிருப்பான் அல்லது நித்திரையாயிருந்தால் யாரும் அவனை எழுப்பவேண்டியதாயிருக்கும்” என்றான். இதனால் அவர்கள் இன்னும் பலமாகக் கத்தி, தாங்கள் வழக்கமாகச் செய்வதைப்போல் வாள்களாலும், ஈட்டிகளாலும் இரத்தம் வடியும்வரை தங்களை வெட்டிக் கொண்டிருந்தார்கள். நண்பகல் கடந்து மாலை பலிசெலுத்தும் நேரம் வரும்வரை அவர்கள் பொய்யாய் தீர்க்கதரிசனம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு மறுமொழி எதுவும் வரவுமில்லை, ஒருவரும் பதிலளிக்கவுமில்லை, ஒருவரும் கவனிக்கவுமில்லை. அதன்பின் எலியா எல்லா மக்களையும் பார்த்து, “இங்கு எனக்கு அருகே வாருங்கள்” என்றான். அவர்கள் அவனுக்கு அருகே போனார்கள். அப்பொழுது எலியா இடிக்கப்பட்டுக் கிடந்த யெகோவாவின் பலிபீடத்தைத் திருத்தி அமைத்தான். “உன் பெயர் இனி இஸ்ரயேல் என்று சொல்லப்படும்” என்று யெகோவா வாக்குக்கொடுத்த யாக்கோபின் மரபுவழியாக வந்த பன்னிரண்டு கோத்திரங்களுக்கும், ஒரு கோத்திரத்துக்கு ஒரு கல்லாக பன்னிரண்டு கற்களை எலியா எடுத்தான். அந்தக் கற்களினால் யெகோவாவின் பெயரில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதைச் சுற்றி இரண்டு மரக்கால் விதை கொள்ளத்தக்க ஒரு வாய்க்காலையும் வெட்டினான். அதன்பின் அவன் விறகுகளை அடுக்கி, காளையைத் துண்டுகளாக்கி, விறகுகளின்மேல் வைத்தான். “நான்கு ஜாடிகள் நிறைய தண்ணீர் நிரப்பி விறகுகளின்மேலும் பலியின்மேலும் ஊற்றுங்கள்” என்றான். அவர்கள் அதைச் செய்தார்கள். “இரண்டாம் முறையும் செய்யுங்கள்” என்றான். அவர்கள் இரண்டாம் முறையும் செய்தார்கள். “மூன்றாம் முறையும் செய்யுங்கள்” என்றான். அவர்கள் மூன்றாம் முறையும் செய்தார்கள். பலிபீடத்தைச் சுற்றித் தண்ணீர் ஓடி அந்த வாய்க்காலையும் நிரப்பியது. பலிசெலுத்தும் நேரத்தில் இறைவாக்கினன் எலியா முன்பாக அடியெடுத்துச் சென்று, “ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், இஸ்ரயேலுக்கும் இறைவனாகியிருக்கும் யெகோவாவே! இஸ்ரயேலில் நீர்தான் இறைவன் என்றும், நான் உம்முடைய அடியவன் என்றும், உமது கட்டளைப்படியே இவை எல்லாவற்றையும் செய்திருக்கிறேன் என்றும் இன்றைக்கு யாவரும் அறியச் செய்யும்” என்று மன்றாடினான். “பதில் தாரும், யெகோவாவே எனக்குப் பதில் தாரும். இதனால் இந்த மக்கள், யெகோவாவே! யெகோவாவாகிய நீர்தான் இறைவன் என்றும், அவர்கள் இருதயத்தை நீரே திரும்பவும் உமது பக்கமாகத் திருப்புகிறீர் என்றும் அறிவார்கள்” என்றான். அப்பொழுது யெகோவாவின் நெருப்பு இறங்கி பலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் எரித்து வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் முழுவதும் வற்றிப்போகச்செய்தது. மக்கள் எல்லோரும் அதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து, “யெகோவாவே இறைவன், யெகோவாவே இறைவன்” என்று சத்தமிட்டார்கள். எலியா அவர்களைப் பார்த்து, “பாகாலின் இறைவாக்கினரைப் பிடியுங்கள். ஒருவனும் தப்பிப்போக விடவேண்டாம்” என்றான். அவர்கள் அந்தப் பாகாலின் இறைவாக்கினரைப் பிடித்தார்கள். எலியா அவர்களை கீசோன் பள்ளத்தாக்கிற்குக் கிழக்கே கொண்டுபோய் அங்கே கொலைசெய்தான். எலியா ஆகாபிடம், “நீர் திரும்பிப்போய் சாப்பிட்டு, குடியும். மழை இரைச்சல் கேட்கிறது” என்றான். அப்படியே ஆகாப் உண்ணவும் குடிக்கவும் போனான். ஆனால் எலியா கர்மேலின் உச்சிக்கு ஏறி தன் முழங்கால்களுக்கிடையில் தன் முகத்தை வைத்துக்கொண்டு நிலம் வரை குனிந்தான். அவன் தன் வேலையாளிடம், “நீ போய் கடல் பக்கமாய் பார்” என்றான். அவன் போய்ப் பார்த்தான். “அங்கு ஒன்றும் இல்லை” என்று வந்து சொன்னான். அதற்கு எலியா, “திரும்பப் போ” என்று ஏழுமுறை அவ்வாறே சொன்னான். ஏழாம்முறை அந்த வேலையாள், “ஒரு மனிதனின் கை அளவுள்ள ஒரு சிறிய மேகம் கடலிலிருந்து எழும்புகிறது” என்று சொன்னான். அப்பொழுது எலியா அவனைப் பார்த்து, “ஆகாபிடம் போய், ‘மழை உன்னை தடைசெய்யுமுன் தேரைப் பூட்டிக்கொண்டு கீழே போய்விடு’ என்று சொல்” என்றான். அதற்கிடையில் வானம் மேகங்களினால் கருத்து, காற்று எழும்பி, பெருமழை வேகமாகப் பெய்தது. ஆகாப் தேரில் ஏறி யெஸ்ரயேலுக்கு விரைந்து போனான். அப்போது யெகோவாவின் வல்லமை எலியாவின்மேல் வந்ததினால் அவன் தன் மேலாடையைப் பட்டியில் சொருகிக்கொண்டு ஆகாபுக்கு முன்பாக யெஸ்ரயேல் வரைக்கும் ஓடிப்போனான்.

1 இராஜாக்கள் 18:25-46 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் அநேகராக இருப்பதால் நீங்களே முந்தி ஒரு காளையைத் தெரிந்துகொண்டு அதை ஆயத்தம்செய்து, நெருப்புப்போடாமல் உங்கள் தெய்வத்தினுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள் என்றான். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி, அதை ஆயத்தம்செய்து: பாகாலே, எங்களுக்கு பதில் சொல்லும் என்று காலைதுவங்கி மத்தியானம்வரை பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் வரவில்லை, பதில் கொடுப்பவரும் இல்லை. அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள். மத்தியானவேளையில் எலியா அவர்களை கேலிசெய்து: உரத்த சத்தமாகக் கூப்பிடுங்கள்; அவன் தெய்வமாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது வேலையாக இருப்பான்; அல்லது பயணம் போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக இருக்கும் என்றான். அவர்கள் உரத்தசத்தமாகக் கூப்பிட்டு, தங்களுடைய வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியும்வரை கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள். மத்தியானவேளை சென்றபின்பு, மாலைபலி செலுத்தும் நேரம்வரை கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, பதில் கொடுப்பவரும் இல்லை, கவனிப்பவர்களும் இல்லை. அப்பொழுது எலியா எல்லா மக்களையும் நோக்கி: என் அருகில் வாருங்கள் என்றான்; எல்லா மக்களும் அவன் அருகில் வந்தபோது, தகர்க்கப்பட்ட யெகோவாவுடைய பலிபீடத்தை அவன் பழுதுபார்த்து: உனக்கு இஸ்ரவேல் என்னும் பெயர் இருப்பதாக என்று சொல்லி, யெகோவாவுடைய வார்த்தையைப்பெற்ற யாக்கோபுடைய மகன்களால் உண்டான கோத்திரங்களுடைய எண்ணிக்கையின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து, அந்தக் கற்களால் யெகோவாவுடைய நாமத்திற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி, பலிபீடத்தைச் சுற்றிலும் தானியம் அளக்கிற இரண்டுபடி விதை விதைக்கத்தக்க இடம் இருக்கும்படி ஒரு வாய்க்காலை உண்டாக்கி, விறகுகளை அடுக்கி, ஒரு காளையைத் துண்டு துண்டாக துண்டித்து விறகுகளின்மேல் வைத்தான். பிற்பாடு அவன்: நீங்கள் நான்கு குடம் தண்ணீர் கொண்டுவந்து, சர்வாங்க தகனபலியின்மேலும், விறகுகளின்மேலும் ஊற்றுங்கள் என்றான்; பின்பு இரண்டாவது முறையும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; இரண்டாவது முறையும் ஊற்றினார்கள்; அதற்குப்பின்பு மூன்றாவது முறையும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; மூன்றாவது முறையும் ஊற்றினார்கள். அப்பொழுது தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடியது; வாய்க்காலையும் தண்ணீரால் நிரப்பினான். மாலைபலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து; ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய யெகோவாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படிச்செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கச்செய்யும். யெகோவாவே, நீர் தேவனாகிய யெகோவா என்றும், தேவரீர் தங்களுடைய இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த மக்கள் அறியும்படி, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான். அப்பொழுது: யெகோவாவிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் எரித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது. மக்களெல்லோரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: யெகோவாவே தெய்வம், யெகோவாவே தெய்வம் என்றார்கள். அப்பொழுது எலியா அவர்களை நோக்கி: நீங்கள் பாகாலின் தீர்க்கதரிசிகளில் ஒருவனும் தப்பிப்போகாதபடி அவர்களைப் பிடியுங்கள் என்றான்; அவர்களைப் பிடித்தபோது, எலியா அவர்களைக் கீழே கீசோன் ஆற்றங்கரையிலே கொண்டுபோய், அங்கே அவர்களை வெட்டிப்போட்டான். பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், சாப்பிட்டு குடியும், பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான். ஆகாப் சாப்பிட்டு குடிக்கப்போனான்; பின்பு எலியா கர்மேல் மலையிலுள்ள சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன்னுடைய முகம் தன்னுடைய முழங்காலில் படும்படிக்குனிந்து, தன்னுடைய ஊழியக்காரனை நோக்கி: நீ போய் சமுத்திரத்தை நோக்கிப் பார் என்றான்; அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான்; நீ இன்னும் ஏழுமுறை போய்ப் பார் என்றான். ஏழாவது முறை இவன்: இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனிதனுடைய உள்ளங்கை அளவுள்ள ஒரு சிறிய மேகம் எழும்புகிறது என்றான்; அப்பொழுது அவன் நீ போய், ஆகாபை நோக்கி: மழை உம்மைத் தடைசெய்யாதபடி இரதத்தைப் பூட்டி, போய்விடும் என்று சொல் என்றான். அதற்குள்ளாக வானம் மேகங்களினாலும் காற்றினாலும் இருண்டு பெருமழை உண்டானது; ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான். யெகோவாவுடைய கை எலியாவின்மேல் இருந்ததால், அவன் தன்னுடைய அரையைக் கட்டிக்கொண்டு, யெஸ்ரயேலுக்கு வரும்வரை ஆகாபுக்கு முன்னே ஓடினான்.

1 இராஜாக்கள் 18:25-46 பரிசுத்த பைபிள் (TAERV)

எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளிடம், “நீங்கள் நிறையபேர் இருக்கிறீர்கள். முதலில் போய் ஒரு காளையைத் தேர்ந்தெடுங்கள். அதைத் தயார் செய்து உங்கள் தெய்வத்தை வேண்டுங்கள். ஆனால் நெருப்பிடவேண்டாம்” என்றான். அவர்களும் அவ்வாறே செய்தனர். மதியம்வரை, பாகாலிடம் ஜெபித்தனர். “பாகால் எங்களுக்கு பதில் கூறும்!” என்றனர். சத்தமில்லை. யாரும் பதில் சொல்லவில்லை. அவர்கள் பலிபீடத்தைச் சுற்றி ஆடினார்கள். நெருப்பு பற்றவில்லை. எலியா மத்தியானத்தில் அவர்களைக் கேலிச் செய்தான், “உண்மையில் பாகால் தெய்வமானால் சத்தமாக ஜெபியுங்கள்! அவர் ஒருவேளை தியானத்தில் இருப்பார்! அல்லது வேறு வேலையில் இருப்பார்! அல்லது எங்காவது போயிருப்பார்! அல்லது தூங்கியிருப்பார்! எழுப்புங்கள்!” என்று கூறினான். அவர்களும் சத்தமாக ஜெபித்தார்கள். அவர்கள் தங்களை வாளாலும் ஈட்டியாலும் காயப்படுத்திகொண்டனர். இது ஒருவகையான தொழுதுகொள்ளுதல். இரத்தம் கொட்டும்வரை இவ்வாறு செய்தனர். மதியமும் போனது. நெருப்பு பற்றவில்லை. மாலைவரை வேண்டுதல்செய்தனர். எதுவும் நடக்கவில்லை. பாகாலிடமிருந்து பதிலும் வரவில்லை. எந்த ஓசையும் இல்லை. யாரும் கவனிக்கவில்லை! இப்போது எலியா ஜனங்களிடம், “இப்போது என்னிடம் வாருங்கள்” என்று கூப்பிட ஜனங்கள் அவனைச் சுற்றிக் கூடினார்கள். உடைந்த கர்த்தருடைய பலிபீடத்தை அவன் செப்பனிட்டான். எலியா அதில் 12 கற்களைக் கோத்திரங்களுக்கு ஒன்று வீதமாகக் கண்டுபிடித்தான். இது யாக்கோபின் 12 குமாரர்களைக் குறிக்கும். கர்த்தரால் இஸ்ரவேல் என்று அழைக்கப்பட்டவராக யாக்கோபு இருந்தார். எலியா பலிபீடத்தைச் செப்பனிட்டு, அதைச்சுற்றிலும் குழி அமைத்தான். 7 கலன் தண்ணீர் பிடிக்குமாறு அக்குழி இருந்தது. பின் பலிபீடத்தில் விறகை வைத்து, காளையைத் துண்டுகளாக்கி மேலே வைத்தான். எலியா, “ஏழு ஜாடிகளில் தண்ணீரை நிரப்பச்சொன்னான். அதனை, விறகின் மேலுள்ள மாமிசத்துண்டில் ஊற்றுங்கள்” என்று சொன்னான். அவன், “மீண்டும் செய்க” என்றான். பிறகு அவன், “மூன்றாவது முறையும் அப்படியே செய்யுங்கள்” என்று சொன்னான். அந்த தண்ணீர் வடிந்து பலி பீடத்தைச் சுற்றிய குழியில் நிரம்பியது. இது மாலை பலிக்கான நேரம். எனவே பலிபீடத்தின் அருகில் எலியா சென்று, ஜெபம் செய்தான். “கர்த்தாவே, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் தேவனே, நீர்தான் இஸ்ரவேலின் தேவன் என்பதை நிரூபியும் என்று நான் இப்போது உம்மைக் கேட்கிறேன். நான் உம்முடைய ஊழியன் என்பதையும் நிரூபியும், நீர்தான் இவற்றை செய்ய கட்டளையிட்டுள்ளீர் என்பதைக் காட்டும். கர்த்தாவே! என் ஜெபத்திற்கு பதில் சொல்லும். பிறகு அவர்கள் கர்த்தாவே நீர்தான் தேவன், என்று அறிவார்கள். நீர் அவர்களது இதயங்களை மீண்டும் திருப்பிக்கொண்டிருக்கிறீர்” என்றான். எனவே கர்த்தர் நெருப்பை அனுப்பினார். மாமிசம், விறகு, பலிபீடம், பலீபீடத்தைச் சுற்றிய இடமும் பற்றி எரிந்தது. தண்ணீரும் வற்றியது. அனைவரும் இதனைப் பார்த்து, தரையில் விழுந்து வணங்கி, “கர்த்தரே தேவன், கர்த்தரே தேவன்” என்றனர். பிறகு எலியா, “பாகாலின் தீர்க்கதரிசிகளைத் தப்பிவிடாதபடி பிடியுங்கள்!” என்றான். ஜனங்கள் அவர்களைப் பிடித்தனர். அவர்கள் அனைவரையும் கீசோன் என்ற இடத்தில் கொன்றனர். எலியா ஆகாப் ராஜாவிடம், “போ, உணவு உண்ணும். மழை வரப்போகிறது” என்றான். எனவே ஆகாப் உணவு உண்ணப்போனான். பிறகு, எலியா கர்மேல் மலையின் உச்சியில் ஏறி, குனிந்து தலையை முழங்கால்களுக்கு இடையில் வைத்து, தன் வேலைக்காரனிடம், “கடலைப்பார்” என்றான். வேலைக்காரனும் சென்று கடலைப் பார்த்தான். திரும்பி வந்து, “எதையும் காணவில்லை” என்றான். எலியா அவனை மீண்டும் பார்க்கச்சொன்னான். இவ்வாறு ஏழு முறை சொல்ல, ஏழாவது முறை வேலைக்காரன், “மனிதக் கை அளவில் சிறு மேகம் கடலிலிருந்து எழும்பி வருவதைப் பார்த்தேன்” என்றான். எலியா அவனிடம், “ஆகாப் ராஜாவிடம் போய்ச் சொல். உடனே இரதத்தில் ஏறி வீட்டிற்குப் போகச் சொல். இல்லாவிடில் மழைத்தடுத்துவிடும்” என்றான். சிறிது நேரத்தில், வானத்தில் கருமேகங்கள் கவிந்தன. காற்று வீசியது, பெருமழை பெய்தது. ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான். கர்த்தருடைய வல்லமை எலியாவிடம் வர, தன் ஆடையை இறுக்கக் கட்டிக்கொண்டு ராஜாவுக்கு முன்னால் யெஸ்ரயேல் வழி முழுவதும் ஓடினான்.