எலியா பாகாலின் இறைவாக்கினரைப் பார்த்து, “நீங்கள் அதிகம் பேராய் இருப்பதனால், முதலில் நீங்கள் ஒரு காளையைத் தெரிந்தெடுத்து, ஆயத்தப்படுத்தி, உங்கள் தெய்வத்தைக் கூப்பிடுங்கள். ஆனால் நெருப்புக் கொழுத்தக் கூடாது” என்றான். அப்படியே அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை எடுத்து, ஆயத்தப்படுத்தினார்கள்.
அதன்பின்பு காலையிலிருந்து நண்பகல்வரை, பாகாலின் பெயரைச்சொல்லிக் கூப்பிட்டார்கள். “பாகாலே எங்களுக்குப் பதில் கொடும்” என்று கத்தினார்கள். ஆனால் அதற்கு ஒரு பதிலும் கிடைக்கவில்லை. அப்பொழுது அவர்கள் தாங்கள் செய்த பலிமேடையைச் சுற்றி நடனமாடினார்கள்.
மத்தியானமானபோது எலியா அவர்களைக் கேலிசெய்யத் தொடங்கினான். “இன்னும் பலமாகச் சத்தமிடுங்கள். அவன் ஒரு தெய்வம்தான். ஒருவேளை அவன் ஆழமாக யோசித்துக்கொண்டிருப்பான் அல்லது வேலைகள் செய்துகொண்டிருப்பான் அல்லது தூரப்பயணம் போயிருப்பான் அல்லது நித்திரையாயிருந்தால் யாரும் அவனை எழுப்பவேண்டியதாயிருக்கும்” என்றான். இதனால் அவர்கள் இன்னும் பலமாகக் கத்தி, தாங்கள் வழக்கமாகச் செய்வதைப்போல் வாள்களாலும், ஈட்டிகளாலும் இரத்தம் வடியும்வரை தங்களை வெட்டிக் கொண்டிருந்தார்கள். நண்பகல் கடந்து மாலை பலிசெலுத்தும் நேரம் வரும்வரை அவர்கள் பொய்யாய் தீர்க்கதரிசனம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு மறுமொழி எதுவும் வரவுமில்லை, ஒருவரும் பதிலளிக்கவுமில்லை, ஒருவரும் கவனிக்கவுமில்லை.
அதன்பின் எலியா எல்லா மக்களையும் பார்த்து, “இங்கு எனக்கு அருகே வாருங்கள்” என்றான். அவர்கள் அவனுக்கு அருகே போனார்கள். அப்பொழுது எலியா இடிக்கப்பட்டுக் கிடந்த யெகோவாவின் பலிபீடத்தைத் திருத்தி அமைத்தான். “உன் பெயர் இனி இஸ்ரயேல் என்று சொல்லப்படும்” என்று யெகோவா வாக்குக்கொடுத்த யாக்கோபின் மரபுவழியாக வந்த பன்னிரண்டு கோத்திரங்களுக்கும், ஒரு கோத்திரத்துக்கு ஒரு கல்லாக பன்னிரண்டு கற்களை எலியா எடுத்தான். அந்தக் கற்களினால் யெகோவாவின் பெயரில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதைச் சுற்றி இரண்டு மரக்கால் விதை கொள்ளத்தக்க ஒரு வாய்க்காலையும் வெட்டினான். அதன்பின் அவன் விறகுகளை அடுக்கி, காளையைத் துண்டுகளாக்கி, விறகுகளின்மேல் வைத்தான். “நான்கு ஜாடிகள் நிறைய தண்ணீர் நிரப்பி விறகுகளின்மேலும் பலியின்மேலும் ஊற்றுங்கள்” என்றான். அவர்கள் அதைச் செய்தார்கள்.
“இரண்டாம் முறையும் செய்யுங்கள்” என்றான். அவர்கள் இரண்டாம் முறையும் செய்தார்கள்.
“மூன்றாம் முறையும் செய்யுங்கள்” என்றான். அவர்கள் மூன்றாம் முறையும் செய்தார்கள். பலிபீடத்தைச் சுற்றித் தண்ணீர் ஓடி அந்த வாய்க்காலையும் நிரப்பியது.
பலிசெலுத்தும் நேரத்தில் இறைவாக்கினன் எலியா முன்பாக அடியெடுத்துச் சென்று, “ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், இஸ்ரயேலுக்கும் இறைவனாகியிருக்கும் யெகோவாவே! இஸ்ரயேலில் நீர்தான் இறைவன் என்றும், நான் உம்முடைய அடியவன் என்றும், உமது கட்டளைப்படியே இவை எல்லாவற்றையும் செய்திருக்கிறேன் என்றும் இன்றைக்கு யாவரும் அறியச் செய்யும்” என்று மன்றாடினான். “பதில் தாரும், யெகோவாவே எனக்குப் பதில் தாரும். இதனால் இந்த மக்கள், யெகோவாவே! யெகோவாவாகிய நீர்தான் இறைவன் என்றும், அவர்கள் இருதயத்தை நீரே திரும்பவும் உமது பக்கமாகத் திருப்புகிறீர் என்றும் அறிவார்கள்” என்றான்.
அப்பொழுது யெகோவாவின் நெருப்பு இறங்கி பலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் எரித்து வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் முழுவதும் வற்றிப்போகச்செய்தது.
மக்கள் எல்லோரும் அதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து, “யெகோவாவே இறைவன், யெகோவாவே இறைவன்” என்று சத்தமிட்டார்கள்.
எலியா அவர்களைப் பார்த்து, “பாகாலின் இறைவாக்கினரைப் பிடியுங்கள். ஒருவனும் தப்பிப்போக விடவேண்டாம்” என்றான். அவர்கள் அந்தப் பாகாலின் இறைவாக்கினரைப் பிடித்தார்கள். எலியா அவர்களை கீசோன் பள்ளத்தாக்கிற்குக் கிழக்கே கொண்டுபோய் அங்கே கொலைசெய்தான்.
எலியா ஆகாபிடம், “நீர் திரும்பிப்போய் சாப்பிட்டு, குடியும். மழை இரைச்சல் கேட்கிறது” என்றான். அப்படியே ஆகாப் உண்ணவும் குடிக்கவும் போனான். ஆனால் எலியா கர்மேலின் உச்சிக்கு ஏறி தன் முழங்கால்களுக்கிடையில் தன் முகத்தை வைத்துக்கொண்டு நிலம் வரை குனிந்தான்.
அவன் தன் வேலையாளிடம், “நீ போய் கடல் பக்கமாய் பார்” என்றான். அவன் போய்ப் பார்த்தான்.
“அங்கு ஒன்றும் இல்லை” என்று வந்து சொன்னான்.
அதற்கு எலியா, “திரும்பப் போ” என்று ஏழுமுறை அவ்வாறே சொன்னான்.
ஏழாம்முறை அந்த வேலையாள், “ஒரு மனிதனின் கை அளவுள்ள ஒரு சிறிய மேகம் கடலிலிருந்து எழும்புகிறது” என்று சொன்னான்.
அப்பொழுது எலியா அவனைப் பார்த்து, “ஆகாபிடம் போய், ‘மழை உன்னை தடைசெய்யுமுன் தேரைப் பூட்டிக்கொண்டு கீழே போய்விடு’ என்று சொல்” என்றான்.
அதற்கிடையில் வானம் மேகங்களினால் கருத்து, காற்று எழும்பி, பெருமழை வேகமாகப் பெய்தது. ஆகாப் தேரில் ஏறி யெஸ்ரயேலுக்கு விரைந்து போனான். அப்போது யெகோவாவின் வல்லமை எலியாவின்மேல் வந்ததினால் அவன் தன் மேலாடையைப் பட்டியில் சொருகிக்கொண்டு ஆகாபுக்கு முன்பாக யெஸ்ரயேல் வரைக்கும் ஓடிப்போனான்.