எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளிடம், “நீங்கள் நிறையபேர் இருக்கிறீர்கள். முதலில் போய் ஒரு காளையைத் தேர்ந்தெடுங்கள். அதைத் தயார் செய்து உங்கள் தெய்வத்தை வேண்டுங்கள். ஆனால் நெருப்பிடவேண்டாம்” என்றான்.
அவர்களும் அவ்வாறே செய்தனர். மதியம்வரை, பாகாலிடம் ஜெபித்தனர். “பாகால் எங்களுக்கு பதில் கூறும்!” என்றனர். சத்தமில்லை. யாரும் பதில் சொல்லவில்லை. அவர்கள் பலிபீடத்தைச் சுற்றி ஆடினார்கள். நெருப்பு பற்றவில்லை.
எலியா மத்தியானத்தில் அவர்களைக் கேலிச் செய்தான், “உண்மையில் பாகால் தெய்வமானால் சத்தமாக ஜெபியுங்கள்! அவர் ஒருவேளை தியானத்தில் இருப்பார்! அல்லது வேறு வேலையில் இருப்பார்! அல்லது எங்காவது போயிருப்பார்! அல்லது தூங்கியிருப்பார்! எழுப்புங்கள்!” என்று கூறினான். அவர்களும் சத்தமாக ஜெபித்தார்கள். அவர்கள் தங்களை வாளாலும் ஈட்டியாலும் காயப்படுத்திகொண்டனர். இது ஒருவகையான தொழுதுகொள்ளுதல். இரத்தம் கொட்டும்வரை இவ்வாறு செய்தனர். மதியமும் போனது. நெருப்பு பற்றவில்லை. மாலைவரை வேண்டுதல்செய்தனர். எதுவும் நடக்கவில்லை. பாகாலிடமிருந்து பதிலும் வரவில்லை. எந்த ஓசையும் இல்லை. யாரும் கவனிக்கவில்லை!
இப்போது எலியா ஜனங்களிடம், “இப்போது என்னிடம் வாருங்கள்” என்று கூப்பிட ஜனங்கள் அவனைச் சுற்றிக் கூடினார்கள். உடைந்த கர்த்தருடைய பலிபீடத்தை அவன் செப்பனிட்டான். எலியா அதில் 12 கற்களைக் கோத்திரங்களுக்கு ஒன்று வீதமாகக் கண்டுபிடித்தான். இது யாக்கோபின் 12 குமாரர்களைக் குறிக்கும். கர்த்தரால் இஸ்ரவேல் என்று அழைக்கப்பட்டவராக யாக்கோபு இருந்தார். எலியா பலிபீடத்தைச் செப்பனிட்டு, அதைச்சுற்றிலும் குழி அமைத்தான். 7 கலன் தண்ணீர் பிடிக்குமாறு அக்குழி இருந்தது. பின் பலிபீடத்தில் விறகை வைத்து, காளையைத் துண்டுகளாக்கி மேலே வைத்தான். எலியா, “ஏழு ஜாடிகளில் தண்ணீரை நிரப்பச்சொன்னான். அதனை, விறகின் மேலுள்ள மாமிசத்துண்டில் ஊற்றுங்கள்” என்று சொன்னான். அவன், “மீண்டும் செய்க” என்றான். பிறகு அவன், “மூன்றாவது முறையும் அப்படியே செய்யுங்கள்” என்று சொன்னான். அந்த தண்ணீர் வடிந்து பலி பீடத்தைச் சுற்றிய குழியில் நிரம்பியது.
இது மாலை பலிக்கான நேரம். எனவே பலிபீடத்தின் அருகில் எலியா சென்று, ஜெபம் செய்தான். “கர்த்தாவே, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் தேவனே, நீர்தான் இஸ்ரவேலின் தேவன் என்பதை நிரூபியும் என்று நான் இப்போது உம்மைக் கேட்கிறேன். நான் உம்முடைய ஊழியன் என்பதையும் நிரூபியும், நீர்தான் இவற்றை செய்ய கட்டளையிட்டுள்ளீர் என்பதைக் காட்டும். கர்த்தாவே! என் ஜெபத்திற்கு பதில் சொல்லும். பிறகு அவர்கள் கர்த்தாவே நீர்தான் தேவன், என்று அறிவார்கள். நீர் அவர்களது இதயங்களை மீண்டும் திருப்பிக்கொண்டிருக்கிறீர்” என்றான்.
எனவே கர்த்தர் நெருப்பை அனுப்பினார். மாமிசம், விறகு, பலிபீடம், பலீபீடத்தைச் சுற்றிய இடமும் பற்றி எரிந்தது. தண்ணீரும் வற்றியது. அனைவரும் இதனைப் பார்த்து, தரையில் விழுந்து வணங்கி, “கர்த்தரே தேவன், கர்த்தரே தேவன்” என்றனர்.
பிறகு எலியா, “பாகாலின் தீர்க்கதரிசிகளைத் தப்பிவிடாதபடி பிடியுங்கள்!” என்றான். ஜனங்கள் அவர்களைப் பிடித்தனர். அவர்கள் அனைவரையும் கீசோன் என்ற இடத்தில் கொன்றனர்.
எலியா ஆகாப் ராஜாவிடம், “போ, உணவு உண்ணும். மழை வரப்போகிறது” என்றான். எனவே ஆகாப் உணவு உண்ணப்போனான். பிறகு, எலியா கர்மேல் மலையின் உச்சியில் ஏறி, குனிந்து தலையை முழங்கால்களுக்கு இடையில் வைத்து, தன் வேலைக்காரனிடம், “கடலைப்பார்” என்றான்.
வேலைக்காரனும் சென்று கடலைப் பார்த்தான். திரும்பி வந்து, “எதையும் காணவில்லை” என்றான். எலியா அவனை மீண்டும் பார்க்கச்சொன்னான். இவ்வாறு ஏழு முறை சொல்ல, ஏழாவது முறை வேலைக்காரன், “மனிதக் கை அளவில் சிறு மேகம் கடலிலிருந்து எழும்பி வருவதைப் பார்த்தேன்” என்றான்.
எலியா அவனிடம், “ஆகாப் ராஜாவிடம் போய்ச் சொல். உடனே இரதத்தில் ஏறி வீட்டிற்குப் போகச் சொல். இல்லாவிடில் மழைத்தடுத்துவிடும்” என்றான்.
சிறிது நேரத்தில், வானத்தில் கருமேகங்கள் கவிந்தன. காற்று வீசியது, பெருமழை பெய்தது. ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான். கர்த்தருடைய வல்லமை எலியாவிடம் வர, தன் ஆடையை இறுக்கக் கட்டிக்கொண்டு ராஜாவுக்கு முன்னால் யெஸ்ரயேல் வழி முழுவதும் ஓடினான்.