1 கொரிந்தியர் 7:1-15
1 கொரிந்தியர் 7:1-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நீங்கள் முன்பு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறதாவது: “ஒருவன் பாலுறவுரீதியாக ஒரு பெண்ணைத் தொடாமலிருக்கிறது நல்லது.” ஆனால் பாலியல் முறைகேடுகள் இவ்வளவு அதிகமாக இருப்பதால், ஒவ்வொரு மனிதனும் தன் சொந்த மனைவியை உடையவனாய் இருக்கவேண்டும். ஒவ்வொரு பெண்ணும், தன் சொந்தக் கணவனை உடையவளாய் இருக்கவேண்டும். கணவன் தன் மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும். அதுபோலவே, மனைவியும் தன் கணவனுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும். மனைவியின் உடல் அவளுக்கு மட்டும் சொந்தமானதல்ல, அவளுடைய கணவனுக்கும் சொந்தமானது. அதுபோலவே, கணவனின் உடல் அவனுக்கு மட்டுமே சொந்தமானதல்ல, அவனுடைய மனைவிக்கும் சொந்தமானது. நீங்கள் ஜெபத்தில் ஈடுபடுவதற்காக, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் இருவரும் உடன்பட்டு, ஒன்றிணையாதிருக்கலாம். அதற்குப் பின்பு, மீண்டும் ஒன்றுசேர்ந்துகொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் சுயக்கட்டுப்பாடு குறைவின் காரணமாக, சாத்தான் உங்களைச் சோதனைக்கு உட்படுத்தமாட்டான். இதை நான் ஒரு கட்டளையாக அல்ல, ஒரு ஆலோசனையாகவே சொல்கிறேன். எல்லா மனிதரும் என்னைப்போல் இருப்பதையே நான் விரும்புகிறேன். ஆனால் ஒவ்வொரு மனிதனும் இறைவனிடமிருந்து தனக்குரிய விசேஷ வரத்தைப் பெற்றிருக்கிறான்; ஒருவனது வரம் ஒருவிதமாயும், இன்னொருவனது வரம் இன்னொரு விதமாயும் இருக்கிறது. இப்பொழுது திருமணம் செய்யாதவர்களுக்கும், விதவைகளுக்கும் நான் சொல்கிறதாவது: என்னைப்போலவே அவர்களும் திருமணம் செய்யாமல் இருப்பது அவர்களுக்கு நல்லது. ஆனால் அவர்களால் தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாதிருந்தால், அவர்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும். ஏனெனில், பாலியல் உணர்ச்சிகளால் வேகுவதைப் பார்க்கிலும், திருமணம் செய்துகொள்வது நல்லது. திருமணம் செய்துகொண்டவர்களுக்கு, இந்தக் கட்டளையை நானல்ல, கர்த்தரே கொடுக்கிறார்: ஒரு மனைவி தன் கணவனை விட்டுப் பிரிந்துபோகக்கூடாது. ஆனால் அப்படி அவள் பிரிந்து வாழ்ந்தால், அவள் வேறு திருமணம் செய்யாமலிருக்க வேண்டும். அல்லது தன் கணவனோடு ஒப்புரவாகவேண்டும். கணவனும் தன் மனைவியை விவாகரத்து செய்யக்கூடாது. மற்றவர்களைக்குறித்து, கர்த்தர் அல்ல, நானே சொல்கிறதாவது: எந்தவொரு சகோதரனும் அவிசுவாசியான ஒரு மனைவியை உடையவனாயிருந்து, அவள் அவனோடு வாழ விரும்புவாளாயின், அவன் அவளை விவாகரத்து செய்யக்கூடாது. அவ்வாறே எந்தவொரு பெண்ணும் அவிசுவாசியான ஒரு கணவனை உடையவளாயிருந்து, அவன் அவளோடு வாழ விரும்புவானாயின், அவள் அவனை விவாகரத்து செய்யக்கூடாது. ஏனெனில், அவிசுவாசியான கணவன் தன் மனைவியின் மூலமாக இறைவனது கிருபையின் கீழ் வருகிறான். அதேபோல், அவிசுவாசியான மனைவியும் விசுவாசியான தன் கணவன் மூலமாக இறைவனது கிருபையின் கீழ் வருகிறாள். இல்லாவிட்டால் அவர்களுடைய பிள்ளைகள் அசுத்தமுள்ளவர்களாய் இருப்பார்களே. ஆனால், அப்பிள்ளைகளோ பரிசுத்தமானவர்கள். ஆனால், அவிசுவாசி பிரிந்து போவானாயின் அவனைப் போகவிடுங்கள். விசுவாசியான ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ, இப்படியான ஒரு நிலையில் கட்டுப்பாடு உடையவர்கள் அல்ல; இறைவன் நம்மைச் சமாதானத்துடன் வாழ்வதற்காகவே அழைத்திருக்கிறார்.
1 கொரிந்தியர் 7:1-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறது என்னவென்றால், பெண்ணைத் தொடாமலிருக்கிறது மனிதனுக்கு நல்லது. ஆனாலும் வேசித்தனம் இல்லாதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்த கணவனையும் உடையவர்களாக இருக்கவேண்டும். கணவன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யவேண்டும்; அப்படியே மனைவியும் தன் கணவனுக்குச் செய்யவேண்டும். மனைவியானவள் தன் சொந்த சரீரத்திற்கு அதிகாரியல்ல, கணவனே அதற்கு அதிகாரி; அப்படியே கணவனும் தன் சொந்த சரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி. உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையில்லாதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாமல் இருங்கள்; உங்களுக்கு சுயக்கட்டுப்பாடு இல்லாததினால் சாத்தான் உங்களை சோதிக்காதபடிக்கு, மறுபடியும் இணைந்துவாழுங்கள். இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், ஆலோசனையாகச் சொல்லுகிறேன். எல்லா மனிதர்களும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன். ஆனாலும் அவனவனுக்கு தேவனால் கொடுக்கப்பட்ட அவனவனுக்குரிய வரம் உண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாகவும், மற்றொருவனுக்கு வேறுவிதமாகவும் இருக்கிறது. திருமணம் செய்யாதவர்களையும், விதவை பெண்களையும்குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாக இருக்கும். ஆனாலும் அவர்கள் சுயக்கட்டுப்பாடு இல்லாதிருந்தால் திருமணம்செய்துகொள்ளக்கடவர்கள்; வேகிறதைவிட திருமணம்செய்கிறது நல்லது. திருமணம்செய்துகொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் கணவனைவிட்டுப் பிரிந்துபோகக்கூடாது. பிரிந்துபோனால் அவள் திருமணம் செய்யாதிருக்கவேண்டும், அல்லது கணவனோடு சமாதானமாகவேண்டும்; கணவனும் தன் மனைவியை விவாகரத்து செய்யக்கூடாது. மற்றவர்களைக்குறித்து கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: ஒரு சகோதரனுடைய மனைவி விசுவாசம் இல்லாதவளாக இருந்தும், அவனுடனே வாழ அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளை விவாகரத்து செய்யாமலிருக்கவேண்டும். அப்படியே ஒரு பெண்ணுடைய கணவன் விசுவாசம் இல்லாமலிருந்தும், அவளுடனே இணைந்து வாழ அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனை விவாகரத்து செய்யாமலிருக்கவேண்டும். ஏனென்றால், விசுவாசம் இல்லாத கணவன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; விசுவாசம் இல்லாத மனைவியும் தன் கணவனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்களுடைய பிள்ளைகள் அசுத்தமாக இருக்குமே; இப்பொழுதோ அவர்கள் பரிசுத்தமாக இருக்கிறார்கள். ஆனாலும், விசுவாசம் இல்லாதவர் பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில் சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்கள் இல்லை. சமாதானமாக இருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.
1 கொரிந்தியர் 7:1-15 பரிசுத்த பைபிள் (TAERV)
இப்போது, நீங்கள் எனக்கு எழுதிய விஷயங்களைக் குறித்து விவாதிப்பேன். ஒரு மனிதன் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது நல்லது. ஆனால் பாலுறவினால் ஏற்படும் பாவம் எப்போதும் ஆபத்துக்குரியதென்பதால் ஒவ்வொரு ஆணும் தன் சொந்த மனைவியோடு வாழ்தல் வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் அவளது சொந்தக் கணவனோடு இருத்தல் வேண்டும். ஒரு மனைவி என்கிற அளவில் எவற்றையெல்லாம் கணவனிடமிருந்து பெறக்கூடுமோ, அவை அனைத்தையும் கணவன் அவனது மனைவிக்கு வழங்கவேண்டும். அவ்வாறே ஒரு கணவன் என்கிற அளவில் எவற்றையெல்லாம் மனைவியிடமிருந்து பெறக் கூடுமோ அவை அனைத்தையும் மனைவி தன் கணவனுக்கு வழங்குதல் வேண்டும். மனைவிக்கு அவளது சரீரத்தின் மீது சொந்தம் பாராட்டும் அதிகாரம் கிடையாது. அவள் சரீரத்தின் மீது அவளது கணவனுக்கே அதிகாரம் உண்டு. கணவனுக்கு அவன் சரீரத்தின் மீது எந்த அதிகாரமும் கிடையாது. அவன் மனைவிக்கே அவனது சரீரத்தின்மீது அதிகாரம் உண்டு. கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் சரீரத்தைப் பகிர்ந்துகொள்ள மறுப்பு தெரிவிக்காதீர்கள். ஆனால் விதிவிலக்காக சில காலத்திற்குப் பாலுறவில் ஈடுபடாமல் இருப்பதென்றால் நீங்கள் இருவருமாக ஒப்பந்தத்திற்கு வரவேண்டும். பிரார்த்தனையில் ஈடுபடுவதற்காக இதை நீங்கள் செய்யலாம். பின்னர் இருவரும் ஒருமித்து வாழ்தல் வேண்டும். இது எதற்காக எனில், பலவீனமான தருணங்களில் உங்களை சாத்தான் கவர்ந்திழுத்துவிடாமல் இருப்பதற்காகும். நீங்கள் சில காலம் பிரிந்திருப்பதற்கு அனுமதி அளிப்பதற்காகவே நான் இதனைச் சொல்கிறேன். இது கட்டளை அல்ல. எல்லோரும் என்னைப் போல் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் ஒவ்வொருவனும் அவனுக்குரிய வரத்தை தேவனிடம் இருந்து பெற்றிருக்கிறான். ஒருவனுக்கு ஒரு வகை வரமும், இன்னொருவனுக்கு வேறு வகை வரமும் அளிக்கப்படுள்ளன. திருமணம் செய்யாதவர்களுக்காகவும், விதவைகளுக்காகவும் இப்போது இதனைக் கூறுகின்றேன். என்னைப்போல தனித்து வாழ்தல் அவர்களுக்கு நல்லது. ஆனால் சுய கட்டுப்பாடு இல்லையெனில், அவர்கள் திருமணம் செய்துகொள்ளவேண்டும். பாலுறவு ஆசையினால் வெந்துபோவதைக் காட்டிலும் திருமணம் புரிந்துகொள்வது நல்லது. திருமணம் புரிந்தவர்களுக்காக இப்போது இந்தக் கட்டளையை இடுகிறேன். (இந்த ஆணை என்னுடையதன்று, ஆனால் கர்த்தருடையது) மனைவி கணவனை விட்டுப் பிரியக் கூடாது. ஆனால், மனைவி கணவனைப் பிரிந்தால் அவள் மீண்டும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது. அல்லது, அவளுடைய கணவனோடேயே நல்லுறவுடன் மீண்டும் வாழவேண்டும். கணவனும் மனைவியை விவாகரத்து செய்யக் கூடாது. மற்ற எல்லாருக்காகவும் இதனைக் கூறுகிறேன். (நானே இவற்றைக் கூறுகிறேன். கர்த்தர் அல்ல) கிறிஸ்துவுக்குள்ளான ஒரு சகோதரன் விசுவாசமற்ற ஒருத்தியை மணந்திருக்கக்கூடும். அவள் அவனோடு வாழ விரும்பினால் அவன் அவளை விவாகரத்து செய்யக்கூடாது. விசுவாசமற்ற கணவனோடு ஒரு பெண் வாழ்தல் கூடும். அவளோடு அவன் வாழ விரும்பினால், அவனை அவள் விவாகரத்து செய்யக் கூடாது. விசுவாசமற்ற கணவன் விசுவாசம் உள்ள மனைவி மூலமாக பரிசுத்தமாக்கப்படுவான். விசுவாசமற்ற மனைவி விசுவாசமுள்ள கணவனால் பரிசுத்தமாக்கப்படுவாள். இது உண்மையில்லையெனில் உங்கள் பிள்ளைகள் பரிசுத்தமற்றவர்களாகி விடுவார்கள். ஆனால் இப்போது உங்கள் பிள்ளைகள் பரிசுத்தமானவர்கள். விசுவாசமற்ற ஒருவன் விலக எண்ணினால், அவன் விலகி வாழட்டும். அவ்வாறு நிகழ்ந்தால் கிறிஸ்துவுக்குள்ளான சகோதரனோ அல்லது சகோதரியோ விடுதலை பெறுவார். அமைதி நிரம்பிய வாழ்க்கைக்காக தேவன் நம்மை அழைத்தார்.
1 கொரிந்தியர் 7:1-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறதென்னவென்றால், ஸ்திரீயைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது. ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும். புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள். மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி. உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடிவாழுங்கள். இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், யோசனையாகச் சொல்லுகிறேன். எல்லா மனுஷரும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன். ஆகிலும் அவனவனுக்கு தேவனால் அருளப்பட்ட அவனவனுக்குரிய வரமுண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாயும், மற்றொருவனுக்கு வேறுவிதமாயும் இருக்கிறது. விவாகமில்லாதவர்களையும், கைம்பெண்களையும்குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும். ஆகிலும் அவர்கள் விரத்தராயிருக்கக்கூடாதிருந்தால் விவாகம்பண்ணக்கடவர்கள்; வேகிறதைப்பார்க்கிலும் விவாகம்பண்ணுகிறது நலம். விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டுப்பிரிந்து போகக்கூடாது. பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது. மற்றவர்களைக்குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன். அப்படியே ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவள். என்னத்தினாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன. ஆகிலும், அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில் சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல. சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.