கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 7:1-15

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 7:1-15 TAERV

இப்போது, நீங்கள் எனக்கு எழுதிய விஷயங்களைக் குறித்து விவாதிப்பேன். ஒரு மனிதன் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது நல்லது. ஆனால் பாலுறவினால் ஏற்படும் பாவம் எப்போதும் ஆபத்துக்குரியதென்பதால் ஒவ்வொரு ஆணும் தன் சொந்த மனைவியோடு வாழ்தல் வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் அவளது சொந்தக் கணவனோடு இருத்தல் வேண்டும். ஒரு மனைவி என்கிற அளவில் எவற்றையெல்லாம் கணவனிடமிருந்து பெறக்கூடுமோ, அவை அனைத்தையும் கணவன் அவனது மனைவிக்கு வழங்கவேண்டும். அவ்வாறே ஒரு கணவன் என்கிற அளவில் எவற்றையெல்லாம் மனைவியிடமிருந்து பெறக் கூடுமோ அவை அனைத்தையும் மனைவி தன் கணவனுக்கு வழங்குதல் வேண்டும். மனைவிக்கு அவளது சரீரத்தின் மீது சொந்தம் பாராட்டும் அதிகாரம் கிடையாது. அவள் சரீரத்தின் மீது அவளது கணவனுக்கே அதிகாரம் உண்டு. கணவனுக்கு அவன் சரீரத்தின் மீது எந்த அதிகாரமும் கிடையாது. அவன் மனைவிக்கே அவனது சரீரத்தின்மீது அதிகாரம் உண்டு. கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் சரீரத்தைப் பகிர்ந்துகொள்ள மறுப்பு தெரிவிக்காதீர்கள். ஆனால் விதிவிலக்காக சில காலத்திற்குப் பாலுறவில் ஈடுபடாமல் இருப்பதென்றால் நீங்கள் இருவருமாக ஒப்பந்தத்திற்கு வரவேண்டும். பிரார்த்தனையில் ஈடுபடுவதற்காக இதை நீங்கள் செய்யலாம். பின்னர் இருவரும் ஒருமித்து வாழ்தல் வேண்டும். இது எதற்காக எனில், பலவீனமான தருணங்களில் உங்களை சாத்தான் கவர்ந்திழுத்துவிடாமல் இருப்பதற்காகும். நீங்கள் சில காலம் பிரிந்திருப்பதற்கு அனுமதி அளிப்பதற்காகவே நான் இதனைச் சொல்கிறேன். இது கட்டளை அல்ல. எல்லோரும் என்னைப் போல் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் ஒவ்வொருவனும் அவனுக்குரிய வரத்தை தேவனிடம் இருந்து பெற்றிருக்கிறான். ஒருவனுக்கு ஒரு வகை வரமும், இன்னொருவனுக்கு வேறு வகை வரமும் அளிக்கப்படுள்ளன. திருமணம் செய்யாதவர்களுக்காகவும், விதவைகளுக்காகவும் இப்போது இதனைக் கூறுகின்றேன். என்னைப்போல தனித்து வாழ்தல் அவர்களுக்கு நல்லது. ஆனால் சுய கட்டுப்பாடு இல்லையெனில், அவர்கள் திருமணம் செய்துகொள்ளவேண்டும். பாலுறவு ஆசையினால் வெந்துபோவதைக் காட்டிலும் திருமணம் புரிந்துகொள்வது நல்லது. திருமணம் புரிந்தவர்களுக்காக இப்போது இந்தக் கட்டளையை இடுகிறேன். (இந்த ஆணை என்னுடையதன்று, ஆனால் கர்த்தருடையது) மனைவி கணவனை விட்டுப் பிரியக் கூடாது. ஆனால், மனைவி கணவனைப் பிரிந்தால் அவள் மீண்டும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது. அல்லது, அவளுடைய கணவனோடேயே நல்லுறவுடன் மீண்டும் வாழவேண்டும். கணவனும் மனைவியை விவாகரத்து செய்யக் கூடாது. மற்ற எல்லாருக்காகவும் இதனைக் கூறுகிறேன். (நானே இவற்றைக் கூறுகிறேன். கர்த்தர் அல்ல) கிறிஸ்துவுக்குள்ளான ஒரு சகோதரன் விசுவாசமற்ற ஒருத்தியை மணந்திருக்கக்கூடும். அவள் அவனோடு வாழ விரும்பினால் அவன் அவளை விவாகரத்து செய்யக்கூடாது. விசுவாசமற்ற கணவனோடு ஒரு பெண் வாழ்தல் கூடும். அவளோடு அவன் வாழ விரும்பினால், அவனை அவள் விவாகரத்து செய்யக் கூடாது. விசுவாசமற்ற கணவன் விசுவாசம் உள்ள மனைவி மூலமாக பரிசுத்தமாக்கப்படுவான். விசுவாசமற்ற மனைவி விசுவாசமுள்ள கணவனால் பரிசுத்தமாக்கப்படுவாள். இது உண்மையில்லையெனில் உங்கள் பிள்ளைகள் பரிசுத்தமற்றவர்களாகி விடுவார்கள். ஆனால் இப்போது உங்கள் பிள்ளைகள் பரிசுத்தமானவர்கள். விசுவாசமற்ற ஒருவன் விலக எண்ணினால், அவன் விலகி வாழட்டும். அவ்வாறு நிகழ்ந்தால் கிறிஸ்துவுக்குள்ளான சகோதரனோ அல்லது சகோதரியோ விடுதலை பெறுவார். அமைதி நிரம்பிய வாழ்க்கைக்காக தேவன் நம்மை அழைத்தார்.