நீங்கள் முன்பு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறதாவது: “ஒருவன் பாலுறவுரீதியாக ஒரு பெண்ணைத் தொடாமலிருக்கிறது நல்லது.” ஆனால் பாலியல் முறைகேடுகள் இவ்வளவு அதிகமாக இருப்பதால், ஒவ்வொரு மனிதனும் தன் சொந்த மனைவியை உடையவனாய் இருக்கவேண்டும். ஒவ்வொரு பெண்ணும், தன் சொந்தக் கணவனை உடையவளாய் இருக்கவேண்டும். கணவன் தன் மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும். அதுபோலவே, மனைவியும் தன் கணவனுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும். மனைவியின் உடல் அவளுக்கு மட்டும் சொந்தமானதல்ல, அவளுடைய கணவனுக்கும் சொந்தமானது. அதுபோலவே, கணவனின் உடல் அவனுக்கு மட்டுமே சொந்தமானதல்ல, அவனுடைய மனைவிக்கும் சொந்தமானது. நீங்கள் ஜெபத்தில் ஈடுபடுவதற்காக, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் இருவரும் உடன்பட்டு, ஒன்றிணையாதிருக்கலாம். அதற்குப் பின்பு, மீண்டும் ஒன்றுசேர்ந்துகொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் சுயக்கட்டுப்பாடு குறைவின் காரணமாக, சாத்தான் உங்களைச் சோதனைக்கு உட்படுத்தமாட்டான். இதை நான் ஒரு கட்டளையாக அல்ல, ஒரு ஆலோசனையாகவே சொல்கிறேன். எல்லா மனிதரும் என்னைப்போல் இருப்பதையே நான் விரும்புகிறேன். ஆனால் ஒவ்வொரு மனிதனும் இறைவனிடமிருந்து தனக்குரிய விசேஷ வரத்தைப் பெற்றிருக்கிறான்; ஒருவனது வரம் ஒருவிதமாயும், இன்னொருவனது வரம் இன்னொரு விதமாயும் இருக்கிறது.
இப்பொழுது திருமணம் செய்யாதவர்களுக்கும், விதவைகளுக்கும் நான் சொல்கிறதாவது: என்னைப்போலவே அவர்களும் திருமணம் செய்யாமல் இருப்பது அவர்களுக்கு நல்லது. ஆனால் அவர்களால் தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாதிருந்தால், அவர்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும். ஏனெனில், பாலியல் உணர்ச்சிகளால் வேகுவதைப் பார்க்கிலும், திருமணம் செய்துகொள்வது நல்லது.
திருமணம் செய்துகொண்டவர்களுக்கு, இந்தக் கட்டளையை நானல்ல, கர்த்தரே கொடுக்கிறார்: ஒரு மனைவி தன் கணவனை விட்டுப் பிரிந்துபோகக்கூடாது. ஆனால் அப்படி அவள் பிரிந்து வாழ்ந்தால், அவள் வேறு திருமணம் செய்யாமலிருக்க வேண்டும். அல்லது தன் கணவனோடு ஒப்புரவாகவேண்டும். கணவனும் தன் மனைவியை விவாகரத்து செய்யக்கூடாது.
மற்றவர்களைக்குறித்து, கர்த்தர் அல்ல, நானே சொல்கிறதாவது: எந்தவொரு சகோதரனும் அவிசுவாசியான ஒரு மனைவியை உடையவனாயிருந்து, அவள் அவனோடு வாழ விரும்புவாளாயின், அவன் அவளை விவாகரத்து செய்யக்கூடாது. அவ்வாறே எந்தவொரு பெண்ணும் அவிசுவாசியான ஒரு கணவனை உடையவளாயிருந்து, அவன் அவளோடு வாழ விரும்புவானாயின், அவள் அவனை விவாகரத்து செய்யக்கூடாது. ஏனெனில், அவிசுவாசியான கணவன் தன் மனைவியின் மூலமாக இறைவனது கிருபையின் கீழ் வருகிறான். அதேபோல், அவிசுவாசியான மனைவியும் விசுவாசியான தன் கணவன் மூலமாக இறைவனது கிருபையின் கீழ் வருகிறாள். இல்லாவிட்டால் அவர்களுடைய பிள்ளைகள் அசுத்தமுள்ளவர்களாய் இருப்பார்களே. ஆனால், அப்பிள்ளைகளோ பரிசுத்தமானவர்கள்.
ஆனால், அவிசுவாசி பிரிந்து போவானாயின் அவனைப் போகவிடுங்கள். விசுவாசியான ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ, இப்படியான ஒரு நிலையில் கட்டுப்பாடு உடையவர்கள் அல்ல; இறைவன் நம்மைச் சமாதானத்துடன் வாழ்வதற்காகவே அழைத்திருக்கிறார்.