1 கொரிந்தியர் 12:28-31

1 கொரிந்தியர் 12:28-31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார். எல்லாரும் அப்போஸ்தலர்களா? எல்லாரும் தீர்க்கதரிசிகளா? எல்லாரும் போதகர்களா? எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா? எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம்பண்ணுகிறார்களா? இப்படியிருக்க, முக்கியமான வரங்களை நாடுங்கள்; இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்.

1 கொரிந்தியர் 12:28-31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆகவேதான் திருச்சபையிலே, இறைவன் முதலாவதாக அப்போஸ்தலர்களையும், இரண்டாவதாக இறைவாக்கினர்களையும், மூன்றாவதாக ஆசிரியர்களையும் நியமித்தார். அதற்குப் பின்பு அற்புதங்களைச் செய்கிறவர்களையும், சுகம் கொடுக்கும் வரங்களைப் பெற்றவர்களையும் நியமித்தார். அத்துடன் மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடியவர்களையும், நிர்வகிக்கும் வரங்களைப் பெற்றவர்களையும், பரிசுத்த ஆவியானவர் கொடுக்கும் பல்வகையான வேற்று மொழிகளைப் பேசுகிறவர்களையும் நியமித்தார். எல்லோரும் அப்போஸ்தலர்களா? எல்லோரும் இறைவாக்கினர்களா? அல்லது எல்லோரும் ஆசிரியர்களா? எல்லோரும் அற்புதங்களைச் செய்கிறார்களா? எல்லோரும் சுகம் கொடுக்கும் வரங்களைப் பெற்றிருக்கிறார்களா? எல்லோரும் ஆவியானவரால் வேற்று மொழிகளைப் பேசுகிறார்களா? எல்லோரும் அவற்றை மொழிபெயர்க்கும் ஆற்றலுடையவர்களா? இல்லையே. ஆனால், நீங்கள் ஒவ்வொருவரும் மேன்மையான வரங்களைப் பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள். இன்னும், நான் உங்களுக்கு அதிக மேன்மையான வழியைக் காண்பிக்கிறேன்.

1 கொரிந்தியர் 12:28-31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலர்களையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், உதவி செய்யும் ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித அந்நிய மொழிகளையும் ஏற்படுத்தினார். எல்லோரும் அப்போஸ்தலர்களா? எல்லோரும் தீர்க்கதரிசிகளா? எல்லோரும் போதகர்களா? எல்லோரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா? எல்லோரும் குணமாக்கும் வரங்களை உடையவர்களா? எல்லோரும் அந்நிய மொழிகளைப் பேசுகிறார்களா? எல்லோரும் வியாக்கியானம் செய்கிறார்களா? இப்படியிருக்க, முக்கியமான வரங்களை விரும்புங்கள்; இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்.

1 கொரிந்தியர் 12:28-31 பரிசுத்த பைபிள் (TAERV)

முதலில் அப்போஸ்தலராகச் சிலரையும், இரண்டாவதாகத் தீர்க்கதரிசிகளாகவும், மூன்றாவதாகப் போதகர்களாகவும், பிறகு அதிசயங்களைச் செய்கிறவர்களாகவும், மற்றவர்களுக்கு உதவுகிறவர்களாகவும், வழி நடத்த வல்லவர்களாகவும் பல்வேறு மொழிகளைப் பேச வல்லவர்களாகவும் சபையில் நியமிக்கிறார். எல்லா மனிதர்களும் அப்போஸ்தலர்கள் அல்ல. எல்லா மனிதர்களும் தீர்க்கதரிசிகளல்ல. எல்லா மனிதர்களும் போதகர்களுமல்ல. எல்லாரும் அதிசயங்களைச் செய்ய முடியாது. குணப்படுத்தும் ஆற்றலும் எல்லார்க்கும் வாய்ப்பதில்லை. எல்லாருக்கும் வெவ்வேறு வகையான மொழிகளைப் பேசமுடியாது. எல்லாரும் அவற்றை விளக்கவும் முடியாது. ஆவியானவரின் சிறந்த வரங்களைப் பெற நீங்கள் உண்மையாகவே விரும்ப வேண்டும்.