1 கொரிந்தியர் 12
12
12 அதிகாரம்
1அன்றியும், சகோதரரே, ஆவிக்குரிய வரங்களைக்குறித்து நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை.
2நீங்கள் அஞ்ஞானிகளாயிருந்தபோது ஏவப்பட்டபடியே, ஊமையான விக்கிரகங்களிடத்தில் மனதைச் செலுத்தினீர்களென்று உங்களுக்குத் தெரியுமே.
3ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
4வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே.
5ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே.
6கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.
7ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.
8எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,
9வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும்,
10வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.
11இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்.
12எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார்.
13நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.
14சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களாயிருக்கிறது.
15காலானது நான் கையாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?
16காதானது நான் கண்ணாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?
17சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே?
18தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்.
19அவையெல்லாம் ஒரே அவயவமாயிருந்தால், சரீரம் எங்கே?
20அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே.
21கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது.
22சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது.
23மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்;
24நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை.
25சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார்.
26ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும்.
27நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்.
28தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்.
29எல்லாரும் அப்போஸ்தலர்களா? எல்லாரும் தீர்க்கதரிசிகளா? எல்லாரும் போதகர்களா? எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா?
30எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம்பண்ணுகிறார்களா?
31இப்படியிருக்க, முக்கியமான வரங்களை நாடுங்கள்; இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
1 கொரிந்தியர் 12: TAOVBSI
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.