கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 12

12
பரிசுத்த ஆவியானவரின் வரங்கள்
1சகோதர சகோதரிகளே, இப்போது நீங்கள் ஆவியின் வரங்களைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன். 2நீங்கள் விசுவாசம் உடையவராக மாறும் முன்னர், நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையை எண்ணிப்பாருங்கள். பிறர் உங்கள்மீது செல்வாக்கு செலுத்துவதற்கும் உயிரற்ற விக்கிரகங்களை வணங்குவதற்கும் உங்களை நீங்கள் அனுமதித்தீர்கள். 3தேவனுடைய ஆவியானவரின் உதவியால் பேசுகிற எவனும் “இயேசு சபிக்கப்படட்டும்” என்று கூறுவதில்லை என்பதை உங்களுக்குக் கூறுகிறேன். பரிசுத்த ஆவியானவரின் உதவியின்றி ஒருவனும் “இயேசுவே கர்த்தர்” என்பதைக் கூற முடியாது.
4ஆவிக்குரிய வரங்கள் பலவகை உண்டு. ஆனால், அனைத்தும் அதே ஆவியானவரால் வருபவை. 5ஊழியம் செய்வதற்குப் பல வழிகள் உண்டு. ஆனால் அந்த வழிகள் அனைத்தும் கர்த்தரிடமிருந்தே வருபவை. 6மனிதரிடம் தேவன் செயல்படும் வழிகள் பல உண்டு. ஆனால் அவை அனைத்தும் நமக்குள் செயல்படுகிற தேவனிடமிருந்து வருபவை. நாம் ஒவ்வொன்றையும் செய்ய தேவன் நம்மில் செயல்படுகிறார்.
7ஆவியானவரின் வரங்களில் சில ஒவ்வொரு மனிதனிடமும் காணப்படும். பிறருக்கு உதவும்படியாய் ஆவியானவர் இதை ஒவ்வொருவருக்கும் அளிப்பார். 8ஒருவனுக்கு ஞானத்துடன் பேசும் ஆற்றலைப் பரிசுத்த ஆவியானவர் வழங்குகிறார். அதே பரிசுத்த ஆவியானவர் அறிவோடு பேசும் ஆற்றலை இன்னொருவனுக்குக் கொடுக்கிறார். 9அதே பரிசுத்த ஆவியானவர் விசுவாசத்தை ஒருவனுக்கு அளிக்கிறார். குணப்படுத்தும் வல்லமையை மற்றொருவனுக்கு அதே பரிசுத்த ஆவியானவர் தருகிறார். 10அதிசயங்களைச் செய்யும் சக்தியை இன்னொரு மனிதனுக்கு ஆவியானவர் கொடுக்கிறார். இன்னொருவனுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லும் திறனையும், மற்றொருவனுக்கு நல்ல, தீய ஆவிகளின் வேறுபாட்டைக் காணும் திறனையும் அளிக்கிறார். பல்வேறு மொழிகளிலும் பேசும் ஆற்றலை ஒருவனுக்கும், அம்மொழிகளை விளக்கியுரைக்கும் திறமையை மற்றொருவனுக்கும் அளிக்கிறார். 11ஒரே ஆவியானவரே இவற்றையெல்லாம் செய்கிறார். ஒவ்வொருவனுக்கும் எதனைக் கொடுக்க வேண்டும் என்பதை ஆவியானவரே தீர்மானிக்கிறார்!
கிறிஸ்துவின் சரீரம்
12ஒருவனின் சரீரம் முழுமையான ஒன்றாக இருந்தாலும், அதில் பல உறுப்புகள் உண்டு. ஆம், சரீரம் பல உறுப்புகளால் ஆனது. ஆனால், அத்தனை உறுப்புகளும் ஒரே சரீரத்துக்குரியவை. கிறிஸ்துவும் அதைப் போன்றவர். 13நம்மில் சிலர் யூதர்கள். மற்றும் சிலர் கிரேக்கர்கள். சிலர் அடிமைகள். சிலர் சுதந்திரமானவர்கள். ஆனால் நாம் எல்லாரும் ஒரே சரீரமாக ஒரே ஆவியானவர் மூலம் ஞானஸ்நானம் பெற்றோம். நாம் எல்லாரும் ஒரே ஆவியைப் பெற்றோம்.
14ஒருவனின் சரீரம் பல்வேறு உறுப்புக்களைக் கொண்டது. 15பாதம் சொல்லக்கூடும், “நான் கையல்ல, எனவே நான் சரீரத்துக்குச் சொந்தமானதல்ல.” இப்படிச் சொல்வதால் பாதம் சரீரத்தின் உறுப்பாக இருப்பதைத் தவிர்க்க முடியாது. 16காது சொல்லக்கூடும், “நான் கண்ணல்ல. எனவே இந்த சரீரத்தைச் சார்ந்தவன் அல்ல.” இப்படிச் சொல்வதால் காது சரீரத்தின் உறுப்பாக இருப்பதைத் தவிர்க்க முடியாது. 17சரீரம் முழுவதும் கண்ணாகச் செயல்படுமேயானால், அது கேட்கமுடியாது. சரீரம் முழுவதும் காதாகச் செயல்படுமேயானால், சரீரத்தால் எதையும் முகர்ந்து பார்க்க முடியாது. 18-19சரீரத்தின் உறுப்புகள் எல்லாம் ஒரேவகை உறுப்புகளாக இருந்தால் அப்போது சரீரம் இருப்பதில்லை. தேவன் உண்மையாகவே தாம் விரும்பியபடி சரீரத்தின் உறுப்புகளை சரீரத்தில் அமைத்தார். சரீரத்தில் ஒவ்வொரு உறுப்புக்கும் ஓர் இடத்தை அமைத்தார். 20எனவே, பல உறுப்புகளும் ஒரே சரீரமாக அமைந்தன.
21கண் கையிடம் “எனக்கு நீ தேவை இல்லை” என்று கூறமுடியாது. தலை பாதத்திடம் “நீ எனக்குத் தேவையில்லை” என்று கூற முடியாது. 22பலமற்றவையாகத் தோற்றம் தரும் சரீரத்தின் உறுப்புகள் மிக முக்கியமானவை. 23சரீரத்தின் தகுதி குறைந்த உறுப்புகளாக நாம் கருதுபவற்றிற்கு அதிகமான அக்கறை காட்டுகிறோம். வெளிக்காட்ட விரும்பாத உறுப்புகளுக்குத் தனிப்பட்ட பாதுகாப்பு அளிக்கிறோம். 24சரீரத்தின் அழகிய உறுப்புகளுக்கு இத்தகைய பாதுகாப்பு தேவையில்லை. ஆனால் கௌரவிக்கத்தக்க உறுப்புகளை கௌரவிக்கிற விதத்தில் சரீரத்தின் உறுப்புக்களை தேவன் ஒழுங்குபடுத்தினார். 25நம்முடைய சரீரம் பிரிக்கப்படாதபடிக்கு தேவன் இதைச் செய்தார். வெவ்வேறு உறுப்புகளும் பிறவற்றையும் பாதுகாக்க வேண்டும் என்று தேவன் இதைச் செய்தார். 26சரீரத்தின் உறுப்புகளில் ஏதேனும் ஒன்றிற்குத் தொல்லை நேர்ந்தாலும், மற்ற எல்லா உறுப்புக்களும் அதோடு துன்புறும். நம் சரீரத்தின் ஓர் உறுப்புக்குப் பெருமை நேர்ந்தாலும் பிற எல்லா உறுப்புகளும் அப்பெருமையில் பங்கு கொள்ளும்.
27நீங்கள் எல்லாரும் இணைந்து கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சரீரத்தின் உறுப்பாக அமைகிறீர்கள். 28முதலில் அப்போஸ்தலராகச் சிலரையும், இரண்டாவதாகத் தீர்க்கதரிசிகளாகவும், மூன்றாவதாகப் போதகர்களாகவும், பிறகு அதிசயங்களைச் செய்கிறவர்களாகவும், மற்றவர்களுக்கு உதவுகிறவர்களாகவும், வழி நடத்த வல்லவர்களாகவும் பல்வேறு மொழிகளைப் பேச வல்லவர்களாகவும் சபையில் நியமிக்கிறார். 29எல்லா மனிதர்களும் அப்போஸ்தலர்கள் அல்ல. எல்லா மனிதர்களும் தீர்க்கதரிசிகளல்ல. எல்லா மனிதர்களும் போதகர்களுமல்ல. எல்லாரும் அதிசயங்களைச் செய்ய முடியாது. 30குணப்படுத்தும் ஆற்றலும் எல்லார்க்கும் வாய்ப்பதில்லை. எல்லாருக்கும் வெவ்வேறு வகையான மொழிகளைப் பேசமுடியாது. எல்லாரும் அவற்றை விளக்கவும் முடியாது. 31ஆவியானவரின் சிறந்த வரங்களைப் பெற நீங்கள் உண்மையாகவே விரும்ப வேண்டும்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 12: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்