1 கொரிந்தியர் 12:20-27
1 கொரிந்தியர் 12:20-27 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
உறுப்புகள் பலவாய் இருப்பினும், உடல் ஒன்றாகவே இருக்கிறது. எனவே கண்ணானது கையைப் பார்த்து, “நீ எனக்குத் தேவையில்லை” என்று சொல்லமுடியாது. அல்லது தலையானது காலைப் பார்த்து, “நீ எனக்குத் தேவையில்லை” என்று சொல்லமுடியாது. உண்மையாகவே, பலவீனமாய் காணப்படுகின்ற உடலின் உறுப்புகளே நமக்கு மிகவும் தேவையானவைகளாய் இருக்கின்றன. உடலின் மதிப்புக்குறைந்த உறுப்புகள் என்று நாம் எவற்றை நினைக்கிறோமோ, அவற்றையே நாம் அதிக மதிப்புடன் பராமரிக்கிறோம். உடலில் மறைக்கப்பட வேண்டிய உறுப்புகள் என நாம் எவற்றை எண்ணுகிறோமோ, அவற்றை அதிக கவனத்துடன் மறைத்துப் பராமரிக்கிறோம். அப்படியான விசேஷ பராமரிப்பு, உடலின் மறைந்திராத உறுப்புகளுக்குத் தேவையில்லை. ஆனால் இறைவனோ, மதிப்புக்குறைந்த உறுப்புகளுக்கு, அதிக மதிப்பைக் கொடுக்கும் வகையில் உடலின் உறுப்புகளை அமைத்திருக்கிறார், ஆகவே உடலில் பிரிவினை இல்லாமல், உடலின் பல உறுப்புகளும் ஒன்றுக்கொன்று, ஒரேவிதமான அக்கறையுடன் இருக்கவேண்டும். உடலின் ஒரு உறுப்பு வேதனைப்படும்போது, எல்லா உறுப்புகளுமே வேதனைப்படுகின்றன; ஒரு உறுப்பு கனத்தைப் பெறும்போது, மற்றெல்லா உறுப்புகளுமே அதனுடன் மகிழ்ச்சியடைகின்றன. இப்பொழுது, நீங்கள் கிறிஸ்துவின் உடலாய் இருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும், அந்த உடலின் ஒரு பகுதியாய் இருக்கிறீர்கள்.
1 கொரிந்தியர் 12:20-27 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
உறுப்புகள் அநேகமாக இருந்தும், சரீரம் ஒன்றே. கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு தேவையில்லையென்றும்; தலையானது கால்களைப் பார்த்து: நீங்கள் எனக்குத் தேவையில்லையென்றும் சொல்லமுடியாது. சரீர உறுப்புகளில் பலவீனமுள்ளவைகளாகக் காணப்படுகிறவைகளே மிகவும் தேவையானவைகளாக இருக்கிறது. மேலும், சரீர உறுப்புகளில் கனவீனமாகக் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்; நம்மில் இலட்சணமானவைகளுக்கு அலங்கரிப்பு தேவையில்லை. சரீரத்திலே பிரிவினை உண்டாகாமல், உறுப்புகள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாக இருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார். ஆதலால் ஒரு உறுப்பு பாடுபட்டால் எல்லா உறுப்புகளும் அதோடுசேர்ந்து பாடுபடும்; ஒரு உறுப்பு மகிமைப்பட்டால் எல்லா உறுப்புகளும் அதோடுசேர்ந்து சந்தோஷப்படும். நீங்களே கிறிஸ்துவின் சரீரமாகவும், தனித்தனியே உறுப்புகளாகவும் இருக்கிறீர்கள்.
1 கொரிந்தியர் 12:20-27 பரிசுத்த பைபிள் (TAERV)
எனவே, பல உறுப்புகளும் ஒரே சரீரமாக அமைந்தன. கண் கையிடம் “எனக்கு நீ தேவை இல்லை” என்று கூறமுடியாது. தலை பாதத்திடம் “நீ எனக்குத் தேவையில்லை” என்று கூற முடியாது. பலமற்றவையாகத் தோற்றம் தரும் சரீரத்தின் உறுப்புகள் மிக முக்கியமானவை. சரீரத்தின் தகுதி குறைந்த உறுப்புகளாக நாம் கருதுபவற்றிற்கு அதிகமான அக்கறை காட்டுகிறோம். வெளிக்காட்ட விரும்பாத உறுப்புகளுக்குத் தனிப்பட்ட பாதுகாப்பு அளிக்கிறோம். சரீரத்தின் அழகிய உறுப்புகளுக்கு இத்தகைய பாதுகாப்பு தேவையில்லை. ஆனால் கௌரவிக்கத்தக்க உறுப்புகளை கௌரவிக்கிற விதத்தில் சரீரத்தின் உறுப்புக்களை தேவன் ஒழுங்குபடுத்தினார். நம்முடைய சரீரம் பிரிக்கப்படாதபடிக்கு தேவன் இதைச் செய்தார். வெவ்வேறு உறுப்புகளும் பிறவற்றையும் பாதுகாக்க வேண்டும் என்று தேவன் இதைச் செய்தார். சரீரத்தின் உறுப்புகளில் ஏதேனும் ஒன்றிற்குத் தொல்லை நேர்ந்தாலும், மற்ற எல்லா உறுப்புக்களும் அதோடு துன்புறும். நம் சரீரத்தின் ஓர் உறுப்புக்குப் பெருமை நேர்ந்தாலும் பிற எல்லா உறுப்புகளும் அப்பெருமையில் பங்கு கொள்ளும். நீங்கள் எல்லாரும் இணைந்து கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சரீரத்தின் உறுப்பாக அமைகிறீர்கள்.
1 கொரிந்தியர் 12:20-27 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே. கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது. சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது. மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்; நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை. சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார். ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும். நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்.