1 கொரிந்தியர் 12:12-31

1 கொரிந்தியர் 12:12-31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

உடல் ஒன்று, ஆனாலும் அது பல உறுப்புகளால் ஆக்கப்பட்டிருக்கிறது. உடலின் உறுப்புகள் பலவாயினும், அது ஒரே உடல்தான். அதுபோலவே, கிறிஸ்துவும் ஒரே உடலாகவே இருக்கிறார். நாம் யூதராகவோ, கிரேக்கராகவோ, அடிமைகளாகவோ, சுதந்திர உரிமை உள்ளவர்களாகவோ இருந்தாலும், எல்லோரும் ஒரே ஆவியானவராலே, ஒரே உடலுக்குள்ளாக திருமுழுக்கு பெற்றிருக்கிறோம். நாம் எல்லோரும் அனுபவிக்கும்படி, ஒரே ஆவியானவரே நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறார். ஏனெனில், உடல் ஒரு உறுப்பினால் மட்டும் ஆனதல்ல. அது பல உறுப்புகளைக் கொண்டது. காலானது, நான் கையாக இல்லாததினால், நான் உடலுக்குச் சொந்தமல்ல என்று சொன்னால், அந்தக் காரணத்தினால் அது உடலுக்குச் சொந்தமாகாமல் போவதில்லை. காதானது, “நான் கண்ணாக இல்லாததினால், நான் உடலுக்குச் சொந்தமல்ல” என்று சொன்னால், அந்தக் காரணத்தினாலும் அது உடலுக்குச் சொந்தமாகாமல் போகாது. முழு உடலுமே ஒரு கண்ணாயிருக்குமானால், அந்த உடலுக்குக் கேட்கும் உணர்வு எங்கிருக்கும்? முழு உடலுமே ஒரு காதாய் இருக்குமானால், அதற்கு முகர்ந்து பார்க்கும் உணர்வு எங்கிருக்கும்? ஆனால், இறைவனோ தாம் விரும்பியபடியே, உடலின் ஒவ்வொரு உறுப்பையும், அதில் ஒரு அங்கமாக அமைத்திருக்கிறார். முழு உடலுமே ஒரே உறுப்பாக மட்டும் இருக்குமானால், அது உடலாய் இருக்கமுடியாது. உறுப்புகள் பலவாய் இருப்பினும், உடல் ஒன்றாகவே இருக்கிறது. எனவே கண்ணானது கையைப் பார்த்து, “நீ எனக்குத் தேவையில்லை” என்று சொல்லமுடியாது. அல்லது தலையானது காலைப் பார்த்து, “நீ எனக்குத் தேவையில்லை” என்று சொல்லமுடியாது. உண்மையாகவே, பலவீனமாய் காணப்படுகின்ற உடலின் உறுப்புகளே நமக்கு மிகவும் தேவையானவைகளாய் இருக்கின்றன. உடலின் மதிப்புக்குறைந்த உறுப்புகள் என்று நாம் எவற்றை நினைக்கிறோமோ, அவற்றையே நாம் அதிக மதிப்புடன் பராமரிக்கிறோம். உடலில் மறைக்கப்பட வேண்டிய உறுப்புகள் என நாம் எவற்றை எண்ணுகிறோமோ, அவற்றை அதிக கவனத்துடன் மறைத்துப் பராமரிக்கிறோம். அப்படியான விசேஷ பராமரிப்பு, உடலின் மறைந்திராத உறுப்புகளுக்குத் தேவையில்லை. ஆனால் இறைவனோ, மதிப்புக்குறைந்த உறுப்புகளுக்கு, அதிக மதிப்பைக் கொடுக்கும் வகையில் உடலின் உறுப்புகளை அமைத்திருக்கிறார், ஆகவே உடலில் பிரிவினை இல்லாமல், உடலின் பல உறுப்புகளும் ஒன்றுக்கொன்று, ஒரேவிதமான அக்கறையுடன் இருக்கவேண்டும். உடலின் ஒரு உறுப்பு வேதனைப்படும்போது, எல்லா உறுப்புகளுமே வேதனைப்படுகின்றன; ஒரு உறுப்பு கனத்தைப் பெறும்போது, மற்றெல்லா உறுப்புகளுமே அதனுடன் மகிழ்ச்சியடைகின்றன. இப்பொழுது, நீங்கள் கிறிஸ்துவின் உடலாய் இருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும், அந்த உடலின் ஒரு பகுதியாய் இருக்கிறீர்கள். ஆகவேதான் திருச்சபையிலே, இறைவன் முதலாவதாக அப்போஸ்தலர்களையும், இரண்டாவதாக இறைவாக்கினர்களையும், மூன்றாவதாக ஆசிரியர்களையும் நியமித்தார். அதற்குப் பின்பு அற்புதங்களைச் செய்கிறவர்களையும், சுகம் கொடுக்கும் வரங்களைப் பெற்றவர்களையும் நியமித்தார். அத்துடன் மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடியவர்களையும், நிர்வகிக்கும் வரங்களைப் பெற்றவர்களையும், பரிசுத்த ஆவியானவர் கொடுக்கும் பல்வகையான வேற்று மொழிகளைப் பேசுகிறவர்களையும் நியமித்தார். எல்லோரும் அப்போஸ்தலர்களா? எல்லோரும் இறைவாக்கினர்களா? அல்லது எல்லோரும் ஆசிரியர்களா? எல்லோரும் அற்புதங்களைச் செய்கிறார்களா? எல்லோரும் சுகம் கொடுக்கும் வரங்களைப் பெற்றிருக்கிறார்களா? எல்லோரும் ஆவியானவரால் வேற்று மொழிகளைப் பேசுகிறார்களா? எல்லோரும் அவற்றை மொழிபெயர்க்கும் ஆற்றலுடையவர்களா? இல்லையே. ஆனால், நீங்கள் ஒவ்வொருவரும் மேன்மையான வரங்களைப் பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள். இன்னும், நான் உங்களுக்கு அதிக மேன்மையான வழியைக் காண்பிக்கிறேன்.

1 கொரிந்தியர் 12:12-31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எப்படியென்றால், சரீரம் ஒன்று, அதற்கு உறுப்புகள் அநேகம்; ஒரே சரீரத்தின் உறுப்புகளெல்லாம் அநேகமாக இருந்தும், சரீரம் ஒன்றாகவே இருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார். நாம் யூதர்களானாலும், கிரேக்கர்களானாலும், அடிமைகளானாலும், சுயாதீனர்களானாலும், எல்லோரும் ஒரே ஆவியானவராலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் செய்யப்பட்டு, எல்லோரும் ஒரே ஆவியானவருக்குள்ளாகவே தாகம் தீர்க்கப்பட்டோம். சரீரமும் ஒரே உறுப்பாக இல்லாமல் அநேக உறுப்புகளாக இருக்கிறது. காலானது நான் கையாக இல்லாதபடியினாலே, நான் சரீரத்தின் உறுப்பு இல்லையென்றால், அதினாலே அது சரீரத்தின் உறுப்பாக இருக்காதோ? காதானது நான் கண்ணாக இல்லாதபடியினாலே, நான் சரீரத்தின் உறுப்பு இல்லையென்றால், அதினாலே அது சரீரத்தின் உறுப்பாக இருக்காதோ? சரீரம் முழுவதும் கண்ணாக இருந்தால், கேட்கும் திறன் எங்கே? அது முழுவதும் காதாக இருந்தால், மோப்பம் செய்யும் திறன் எங்கே? தேவன் தமது விருப்பத்தின்படி உறுப்புகள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார். அவையெல்லாம் ஒரே உறுப்பாக இருந்தால், சரீரம் எங்கே? உறுப்புகள் அநேகமாக இருந்தும், சரீரம் ஒன்றே. கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு தேவையில்லையென்றும்; தலையானது கால்களைப் பார்த்து: நீங்கள் எனக்குத் தேவையில்லையென்றும் சொல்லமுடியாது. சரீர உறுப்புகளில் பலவீனமுள்ளவைகளாகக் காணப்படுகிறவைகளே மிகவும் தேவையானவைகளாக இருக்கிறது. மேலும், சரீர உறுப்புகளில் கனவீனமாகக் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்; நம்மில் இலட்சணமானவைகளுக்கு அலங்கரிப்பு தேவையில்லை. சரீரத்திலே பிரிவினை உண்டாகாமல், உறுப்புகள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாக இருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார். ஆதலால் ஒரு உறுப்பு பாடுபட்டால் எல்லா உறுப்புகளும் அதோடுசேர்ந்து பாடுபடும்; ஒரு உறுப்பு மகிமைப்பட்டால் எல்லா உறுப்புகளும் அதோடுசேர்ந்து சந்தோஷப்படும். நீங்களே கிறிஸ்துவின் சரீரமாகவும், தனித்தனியே உறுப்புகளாகவும் இருக்கிறீர்கள். தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலர்களையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், உதவி செய்யும் ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித அந்நிய மொழிகளையும் ஏற்படுத்தினார். எல்லோரும் அப்போஸ்தலர்களா? எல்லோரும் தீர்க்கதரிசிகளா? எல்லோரும் போதகர்களா? எல்லோரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா? எல்லோரும் குணமாக்கும் வரங்களை உடையவர்களா? எல்லோரும் அந்நிய மொழிகளைப் பேசுகிறார்களா? எல்லோரும் வியாக்கியானம் செய்கிறார்களா? இப்படியிருக்க, முக்கியமான வரங்களை விரும்புங்கள்; இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்.

1 கொரிந்தியர் 12:12-31 பரிசுத்த பைபிள் (TAERV)

ஒருவனின் சரீரம் முழுமையான ஒன்றாக இருந்தாலும், அதில் பல உறுப்புகள் உண்டு. ஆம், சரீரம் பல உறுப்புகளால் ஆனது. ஆனால், அத்தனை உறுப்புகளும் ஒரே சரீரத்துக்குரியவை. கிறிஸ்துவும் அதைப் போன்றவர். நம்மில் சிலர் யூதர்கள். மற்றும் சிலர் கிரேக்கர்கள். சிலர் அடிமைகள். சிலர் சுதந்திரமானவர்கள். ஆனால் நாம் எல்லாரும் ஒரே சரீரமாக ஒரே ஆவியானவர் மூலம் ஞானஸ்நானம் பெற்றோம். நாம் எல்லாரும் ஒரே ஆவியைப் பெற்றோம். ஒருவனின் சரீரம் பல்வேறு உறுப்புக்களைக் கொண்டது. பாதம் சொல்லக்கூடும், “நான் கையல்ல, எனவே நான் சரீரத்துக்குச் சொந்தமானதல்ல.” இப்படிச் சொல்வதால் பாதம் சரீரத்தின் உறுப்பாக இருப்பதைத் தவிர்க்க முடியாது. காது சொல்லக்கூடும், “நான் கண்ணல்ல. எனவே இந்த சரீரத்தைச் சார்ந்தவன் அல்ல.” இப்படிச் சொல்வதால் காது சரீரத்தின் உறுப்பாக இருப்பதைத் தவிர்க்க முடியாது. சரீரம் முழுவதும் கண்ணாகச் செயல்படுமேயானால், அது கேட்கமுடியாது. சரீரம் முழுவதும் காதாகச் செயல்படுமேயானால், சரீரத்தால் எதையும் முகர்ந்து பார்க்க முடியாது. சரீரத்தின் உறுப்புகள் எல்லாம் ஒரேவகை உறுப்புகளாக இருந்தால் அப்போது சரீரம் இருப்பதில்லை. தேவன் உண்மையாகவே தாம் விரும்பியபடி சரீரத்தின் உறுப்புகளை சரீரத்தில் அமைத்தார். சரீரத்தில் ஒவ்வொரு உறுப்புக்கும் ஓர் இடத்தை அமைத்தார். எனவே, பல உறுப்புகளும் ஒரே சரீரமாக அமைந்தன. கண் கையிடம் “எனக்கு நீ தேவை இல்லை” என்று கூறமுடியாது. தலை பாதத்திடம் “நீ எனக்குத் தேவையில்லை” என்று கூற முடியாது. பலமற்றவையாகத் தோற்றம் தரும் சரீரத்தின் உறுப்புகள் மிக முக்கியமானவை. சரீரத்தின் தகுதி குறைந்த உறுப்புகளாக நாம் கருதுபவற்றிற்கு அதிகமான அக்கறை காட்டுகிறோம். வெளிக்காட்ட விரும்பாத உறுப்புகளுக்குத் தனிப்பட்ட பாதுகாப்பு அளிக்கிறோம். சரீரத்தின் அழகிய உறுப்புகளுக்கு இத்தகைய பாதுகாப்பு தேவையில்லை. ஆனால் கௌரவிக்கத்தக்க உறுப்புகளை கௌரவிக்கிற விதத்தில் சரீரத்தின் உறுப்புக்களை தேவன் ஒழுங்குபடுத்தினார். நம்முடைய சரீரம் பிரிக்கப்படாதபடிக்கு தேவன் இதைச் செய்தார். வெவ்வேறு உறுப்புகளும் பிறவற்றையும் பாதுகாக்க வேண்டும் என்று தேவன் இதைச் செய்தார். சரீரத்தின் உறுப்புகளில் ஏதேனும் ஒன்றிற்குத் தொல்லை நேர்ந்தாலும், மற்ற எல்லா உறுப்புக்களும் அதோடு துன்புறும். நம் சரீரத்தின் ஓர் உறுப்புக்குப் பெருமை நேர்ந்தாலும் பிற எல்லா உறுப்புகளும் அப்பெருமையில் பங்கு கொள்ளும். நீங்கள் எல்லாரும் இணைந்து கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சரீரத்தின் உறுப்பாக அமைகிறீர்கள். முதலில் அப்போஸ்தலராகச் சிலரையும், இரண்டாவதாகத் தீர்க்கதரிசிகளாகவும், மூன்றாவதாகப் போதகர்களாகவும், பிறகு அதிசயங்களைச் செய்கிறவர்களாகவும், மற்றவர்களுக்கு உதவுகிறவர்களாகவும், வழி நடத்த வல்லவர்களாகவும் பல்வேறு மொழிகளைப் பேச வல்லவர்களாகவும் சபையில் நியமிக்கிறார். எல்லா மனிதர்களும் அப்போஸ்தலர்கள் அல்ல. எல்லா மனிதர்களும் தீர்க்கதரிசிகளல்ல. எல்லா மனிதர்களும் போதகர்களுமல்ல. எல்லாரும் அதிசயங்களைச் செய்ய முடியாது. குணப்படுத்தும் ஆற்றலும் எல்லார்க்கும் வாய்ப்பதில்லை. எல்லாருக்கும் வெவ்வேறு வகையான மொழிகளைப் பேசமுடியாது. எல்லாரும் அவற்றை விளக்கவும் முடியாது. ஆவியானவரின் சிறந்த வரங்களைப் பெற நீங்கள் உண்மையாகவே விரும்ப வேண்டும்.

1 கொரிந்தியர் 12:12-31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார். நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம். சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களாயிருக்கிறது. காலானது நான் கையாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ? காதானது நான் கண்ணாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ? சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே? தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார். அவையெல்லாம் ஒரே அவயவமாயிருந்தால், சரீரம் எங்கே? அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே. கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது. சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது. மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்; நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை. சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார். ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும். நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள். தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார். எல்லாரும் அப்போஸ்தலர்களா? எல்லாரும் தீர்க்கதரிசிகளா? எல்லாரும் போதகர்களா? எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா? எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம்பண்ணுகிறார்களா? இப்படியிருக்க, முக்கியமான வரங்களை நாடுங்கள்; இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்.