1 கொரிந்தியர் 11:1-16

1 கொரிந்தியர் 11:1-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவதுபோல, நீங்கள் என் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள். நீங்கள் எப்பொழுதும் என்னை நினைவில் வைத்திருக்கிறதற்காகவும், நான் உங்களுக்குக் கற்றுக்கொடுத்தவற்றைத் தொடர்ந்து, அதேவிதமாய் கைக்கொள்ளுகிறதற்காகவும் நான் உங்களைப் பாராட்டுகிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும் கிறிஸ்துவே தலைவராய் இருக்கிறார். ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளுடைய கணவனே தலைவனாயிருக்கிறான். கிறிஸ்துவுக்கு இறைவனே தலைவராய் இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்று, விரும்புகிறேன். எனவே தன் தலையை மூடிக்கொண்டு மன்றாடுகிறவனோ, அல்லது இறைவாக்கு உரைக்கிறவனோ, அவன் தன் தலைவராகிய கிறிஸ்துவை அவமதிக்கிறான். ஒவ்வொரு பெண்ணும் தான் மன்றாடும்போது அல்லது இறைவாக்கு உரைக்கும்போது, தன் தலையை மூடிக்கொள்ளாத எந்தப் பெண்ணும், தன் தலைவனை அவமதிக்கிறாள். அது அவளது தலை மொட்டையடிக்கப்பட்டதற்கு சமமாயிருக்கும். இவ்விதம் ஒரு பெண் தன் தலையை மூடிக்கொள்ளாவிட்டால், அவள் தன் தலைமுடியை வெட்டிக்கொள்ள வேண்டும். ஒரு பெண் தன் தலைமுடியை வெட்டிக்கொள்வதோ, தன் தலையை மொட்டையடிப்பதோ, அவளுக்கு வெட்கமாக இருக்குமென்றால், அவள் தன் தலையை மூடிக்கொள்ளவேண்டும். ஒரு ஆண் தன் தலையை மூடிக்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில், இறைவனுடைய சாயலையும் மகிமையையும் பிரதிபலிப்பவன் அவனே. ஆனால் பெண்ணோ மனிதனின் மகிமையைப் பிரதிபலிப்பாய் இருக்கிறாள். ஏனெனில் ஆண் பெண்ணிலிருந்து படைக்கப்படவில்லை; பெண்ணே ஆணிலிருந்து படைக்கப்பட்டாள். ஆண் பெண்ணுக்காகப் படைக்கப்படவில்லை. ஆனால் பெண்ணே ஆணுக்காகப் படைக்கப்பட்டாள். இந்த காரணத்திற்காகவும், தூதர்களுக்காகவும், ஒரு பெண் தான் அதிகாரத்தின்கீழ் இருப்பதைக் காட்ட அவளது தலையை மூடிக்கொள்ளவேண்டும். எவ்வாறாயினும், கர்த்தரின் ஒழுங்கின்படி ஒரு பெண், ஆண் இல்லாமல் இல்லை. ஒரு ஆண், பெண் இல்லாமல் இல்லை. ஏனெனில் பெண் ஆணிலிருந்து படைக்கப்பட்டது போலவே, மனிதன் பெண்ணிலிருந்தே பிறக்கிறான். ஆனால், எல்லாம் இறைவனிடத்திலிருந்தே வருகின்றன. ஒரு பெண் வழிபாட்டின்போது தலையை மூடிக்கொள்ளாமல், இறைவனை நோக்கி மன்றாடுவது தகுதியானதோ? நீங்களே தீர்மானியுங்கள். ஒரு மனிதன் தன் தலைமுடியை நீளமாக வைத்துக்கொண்டால், அது அவனுக்குத் தகுந்தது அல்ல என்று இயற்கையும் உங்களுக்குக் போதிக்கிறதே? ஆனால், ஒரு பெண் தனது தலைமுடியை நீளமாக வைத்துக்கொண்டால், அது அவளுக்கு மகிமையாயிருக்கும். நீளமான தலைமுடியே அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைக்குறித்து யாரேனும் விவாதிக்க விரும்பினால், எங்களுக்கோ இறைவனின் திருச்சபைகளுக்கோ இவைத் தவிர வேறெந்த வழக்கமும் இல்லையென்று அறியுங்கள்.

1 கொரிந்தியர் 11:1-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாக இருங்கள். சகோதரர்களே, நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைத்துக்கொண்டு, நான் உங்களுக்கு ஒப்புவித்தபடி நீங்கள் கட்டளைகளைக் கைக்கொண்டு வருகிறதினால் உங்களைப் புகழுகிறேன். ஒவ்வொரு ஆணுக்கும் கிறிஸ்து தலையாக இருக்கிறார் என்றும், பெண்ணுக்கு ஆண் தலையாக இருக்கிறார் என்றும், கிறிஸ்துவிற்கு தேவன் தலையாக இருக்கிறார் என்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன். ஜெபம் செய்கிறபோதாவது, தீர்க்கதரிசனம் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொண்டிருக்கிற எந்த ஆணும் தன் தலையை அவமதிக்கிறான். ஜெபம் செய்கிறபோதாவது, தீர்க்கதரிசனம் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிற எந்தப் பெண்ணும் தன் தலையை அவமதிக்கிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோல இருக்குமே. பெண்ணானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமுடியையும் கத்தரித்துப்போடவேண்டும்; தலைமுடி கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் பெண்களுக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும். ஆணானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாக இருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ளவேண்டியதில்லை; பெண்ணானவள் ஆணுடைய மகிமையாக இருக்கிறாள். ஆண் பெண்ணிலிருந்து தோன்றினவனல்ல, பெண்ணே ஆணிலிருந்து தோன்றினவள். ஆண் பெண்ணுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, பெண்ணே ஆணுக்காக சிருஷ்டிக்கப்பட்டவள். ஆகவே, தூதர்களினிமித்தம் பெண்ணானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும். ஆனாலும் கர்த்தருக்குள் பெண்ணில்லாமல் ஆணுமில்லை, ஆணில்லாமல் பெண்ணுமில்லை. பெண்ணானவள் ஆணிலிருந்து தோன்றுகிறதுபோல, ஆணும் பெண்ணிலிருந்து தோன்றுகிறான்; அனைத்தும் தேவனால் உண்டாயிருக்கிறது. பெண்ணானவள் தேவனை நோக்கி ஜெபம்செய்யும்போது, தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது முறையாக இருக்குமோ என்று உங்களுக்குள்ளே தீர்மானித்துக்கொள்ளுங்கள். ஆண் முடியை நீளமாக வளர்க்கிறது அவனுக்கு அவமானமாக இருக்கிறதென்றும், பெண் தன் முடியை நீளமாக வளர்க்கிறது அவளுக்கு மகிமையாக இருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமுடி அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே. ஆனாலும் ஒருவன் வாக்குவாதம்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும் அப்படிப்பட்டப் பழக்கம் இல்லையென்று அறியவேண்டும்.

1 கொரிந்தியர் 11:1-16 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் கிறிஸ்துவை உதாரணமாகப் பின்பற்றுவதுபோல, என்னை உதாரணமாகப் பின்பற்றுங்கள். நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைவுகூருவதால் உங்களைப் புகழ்கிறேன். நான் உங்களுக்கு வழங்கியிருக்கிற போதனைகளை நீங்கள் பின்பற்றிக்கொண்டுள்ளீர்கள். ஆனால் நீங்கள், இதைப் புரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறேன். ஒவ்வொரு மனிதனின் தலைவரும் கிறிஸ்துவே. பெண்ணின் தலைவன் ஆணாவான். கிறிஸ்துவின் தலைவர் தேவனே. தீர்க்கதரிசனம் சொல்கிறவனோ அல்லது பிரார்த்திக்கிறவனோ தலையை மூடியிருந்தால் அது அவன் தலைக்கு இழுக்கைத் தரும். தீர்க்கதரிசனம் சொல்கிறவளும் பிரார்த்தனை செய்கிறவளும் தலையை மூடிக்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு தலையை மூடியிராவிட்டால் அது அவள் தலைக்கு இழுக்கைத் தரும். தலைமயிரை மழித்துக்கொண்ட பெண்ணுக்கு அவள் ஒப்பாவாள். ஒரு பெண் தனது தலையை மூடியிராவிட்டால் அவள் தலை மயிரை மழிப்பதற்கு ஒப்பாகும். தலை மயிரைக் குறைப்பதோ, மழிப்பதோ பெண்ணுக்கு இழிவைத் தரும். எனவே அவள் தனது தலையை மூடியிருக்க வேண்டும். ஆனால், ஓர் ஆண் தனது தலையை மூடக்கூடாது. ஏனெனில் அவன் தேவனைப் போல அமைக்கப்பட்டவன். அவன் தேவனுக்கு மகிமையாய் அமைபவன். ஆனால் பெண்ணோ ஆணுக்கு மகிமையாய் அமைபவள். பெண்ணிலிருந்து ஆண் தோன்றவில்லை. ஆணிலிருந்து பெண் தோன்றினாள். ஆண் பெண்ணுக்காகப் படைக்கப்படவில்லை. பெண்ணோ ஆணுக்காகப் படைக்கப்பட்டாள். அதனால்தான் பெண் ஒருவனுக்கு அடங்கியவள் என்பதைக் காட்டும்படியாக தனது தலையை மூடியிருக்க வேண்டும். தேவதூதர்களுக்காகவும் அவள் இதைச் செய்தல்வேண்டும். ஆனால் கர்த்தருக்குள் பெண் ஆணுக்கு முக்கியமானவள். அவ்வாறே ஆணும் பெண்ணுக்கு முக்கியமானவன். அவ்வாறே ஆணும் பெண்ணுக்கு முக்கியமானவன். ஆணிடமிருந்து பெண் தோன்றியதால் இது உண்மையாகிறது. ஆனால் பெண்ணிடம் இருந்து ஆண் பிறக்கிறான். உண்மையாகவே ஒவ்வொன்றும் தேவனிடம் இருந்து வருகிறது. இதை நீங்களே முடிவு செய்யுங்கள். தனது தலையை மறைக்காமல் தேவனிடம் பிரார்த்தனை செய்வது ஒரு பெண்ணுக்கு உகந்ததா? நீளமான மயிரோடு இருப்பது ஆணுக்கு இழுக்கானது என்பதை இயற்கையே உணர்த்துகிறது. ஒரு பெண்ணுக்கு நீளமான கூந்தலிருப்பது அவளுக்கு கௌரவமாகும். ஏனெனில் ஒரு மகிமையாகவே அது அவளுக்குத் தரப்பட்டிருக்கிறது. இதைக் குறித்துச் சிலர் இன்னும் விவாதிக்க விரும்பலாம். ஆனால் நாங்களும், தேவனுடைய சபைகளும் அம்மக்கள் இதைப்பற்றி வாக்குவாதம் செய்வதை ஏற்பதில்லை.

1 கொரிந்தியர் 11:1-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள். சகோதரரே, நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைத்துக்கொண்டு, நான் உங்களுக்கு ஒப்புவித்தபடி நீங்கள் கட்டளைகளைக் கைக்கொண்டு வருகிறதினிமித்தம் உங்களைப் புகழுகிறேன். ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன். ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொண்டிருக்கிற எந்தப் புருஷனும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறான். ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே. ஸ்திரீயானவள் முக்காடிட்டுக் கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள். புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ளவேண்டுவதில்லை; ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள். புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவனல்ல, ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள். புருஷன் ஸ்திரீக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவள். ஆகையால் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும். ஆகிலும் கர்த்தருக்குள் ஸ்திரீயில்லாமல் புருஷனுமில்லை, புருஷனில்லாமல் ஸ்திரீயுமில்லை. ஸ்திரீயானவள் புருஷனிலிருந்து தோன்றுகிறதுபோல, புருஷனும் ஸ்திரீயினால் தோன்றுகிறான்; சகலமும் தேவனால் உண்டாயிருக்கிறது. ஸ்திரீயானவள் தேவனை நோக்கி: ஜெபம்பண்ணுகையில், தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது இலட்சணமாயிருக்குமோ என்று உங்களுக்குள்ளே நிதானித்துக்கொள்ளுங்கள் புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவனுக்கு கனவீனமாயிருக்கிறதென்றும், ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே. ஆகிலும் ஒருவன் வாக்குவாதஞ்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும், அப்படிப்பட்ட வழக்கமில்லையென்று அறியக்கடவன்.