கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 11:1-16

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 11:1-16 TAERV

நான் கிறிஸ்துவை உதாரணமாகப் பின்பற்றுவதுபோல, என்னை உதாரணமாகப் பின்பற்றுங்கள். நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைவுகூருவதால் உங்களைப் புகழ்கிறேன். நான் உங்களுக்கு வழங்கியிருக்கிற போதனைகளை நீங்கள் பின்பற்றிக்கொண்டுள்ளீர்கள். ஆனால் நீங்கள், இதைப் புரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறேன். ஒவ்வொரு மனிதனின் தலைவரும் கிறிஸ்துவே. பெண்ணின் தலைவன் ஆணாவான். கிறிஸ்துவின் தலைவர் தேவனே. தீர்க்கதரிசனம் சொல்கிறவனோ அல்லது பிரார்த்திக்கிறவனோ தலையை மூடியிருந்தால் அது அவன் தலைக்கு இழுக்கைத் தரும். தீர்க்கதரிசனம் சொல்கிறவளும் பிரார்த்தனை செய்கிறவளும் தலையை மூடிக்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு தலையை மூடியிராவிட்டால் அது அவள் தலைக்கு இழுக்கைத் தரும். தலைமயிரை மழித்துக்கொண்ட பெண்ணுக்கு அவள் ஒப்பாவாள். ஒரு பெண் தனது தலையை மூடியிராவிட்டால் அவள் தலை மயிரை மழிப்பதற்கு ஒப்பாகும். தலை மயிரைக் குறைப்பதோ, மழிப்பதோ பெண்ணுக்கு இழிவைத் தரும். எனவே அவள் தனது தலையை மூடியிருக்க வேண்டும். ஆனால், ஓர் ஆண் தனது தலையை மூடக்கூடாது. ஏனெனில் அவன் தேவனைப் போல அமைக்கப்பட்டவன். அவன் தேவனுக்கு மகிமையாய் அமைபவன். ஆனால் பெண்ணோ ஆணுக்கு மகிமையாய் அமைபவள். பெண்ணிலிருந்து ஆண் தோன்றவில்லை. ஆணிலிருந்து பெண் தோன்றினாள். ஆண் பெண்ணுக்காகப் படைக்கப்படவில்லை. பெண்ணோ ஆணுக்காகப் படைக்கப்பட்டாள். அதனால்தான் பெண் ஒருவனுக்கு அடங்கியவள் என்பதைக் காட்டும்படியாக தனது தலையை மூடியிருக்க வேண்டும். தேவதூதர்களுக்காகவும் அவள் இதைச் செய்தல்வேண்டும். ஆனால் கர்த்தருக்குள் பெண் ஆணுக்கு முக்கியமானவள். அவ்வாறே ஆணும் பெண்ணுக்கு முக்கியமானவன். அவ்வாறே ஆணும் பெண்ணுக்கு முக்கியமானவன். ஆணிடமிருந்து பெண் தோன்றியதால் இது உண்மையாகிறது. ஆனால் பெண்ணிடம் இருந்து ஆண் பிறக்கிறான். உண்மையாகவே ஒவ்வொன்றும் தேவனிடம் இருந்து வருகிறது. இதை நீங்களே முடிவு செய்யுங்கள். தனது தலையை மறைக்காமல் தேவனிடம் பிரார்த்தனை செய்வது ஒரு பெண்ணுக்கு உகந்ததா? நீளமான மயிரோடு இருப்பது ஆணுக்கு இழுக்கானது என்பதை இயற்கையே உணர்த்துகிறது. ஒரு பெண்ணுக்கு நீளமான கூந்தலிருப்பது அவளுக்கு கௌரவமாகும். ஏனெனில் ஒரு மகிமையாகவே அது அவளுக்குத் தரப்பட்டிருக்கிறது. இதைக் குறித்துச் சிலர் இன்னும் விவாதிக்க விரும்பலாம். ஆனால் நாங்களும், தேவனுடைய சபைகளும் அம்மக்கள் இதைப்பற்றி வாக்குவாதம் செய்வதை ஏற்பதில்லை.