1 கொரிந்தியர் 11:1-16

1 கொரிந்தியர் 11:1-16 TCV

நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவதுபோல, நீங்கள் என் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள். நீங்கள் எப்பொழுதும் என்னை நினைவில் வைத்திருக்கிறதற்காகவும், நான் உங்களுக்குக் கற்றுக்கொடுத்தவற்றைத் தொடர்ந்து, அதேவிதமாய் கைக்கொள்ளுகிறதற்காகவும் நான் உங்களைப் பாராட்டுகிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும் கிறிஸ்துவே தலைவராய் இருக்கிறார். ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளுடைய கணவனே தலைவனாயிருக்கிறான். கிறிஸ்துவுக்கு இறைவனே தலைவராய் இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்று, விரும்புகிறேன். எனவே தன் தலையை மூடிக்கொண்டு மன்றாடுகிறவனோ, அல்லது இறைவாக்கு உரைக்கிறவனோ, அவன் தன் தலைவராகிய கிறிஸ்துவை அவமதிக்கிறான். ஒவ்வொரு பெண்ணும் தான் மன்றாடும்போது அல்லது இறைவாக்கு உரைக்கும்போது, தன் தலையை மூடிக்கொள்ளாத எந்தப் பெண்ணும், தன் தலைவனை அவமதிக்கிறாள். அது அவளது தலை மொட்டையடிக்கப்பட்டதற்கு சமமாயிருக்கும். இவ்விதம் ஒரு பெண் தன் தலையை மூடிக்கொள்ளாவிட்டால், அவள் தன் தலைமுடியை வெட்டிக்கொள்ள வேண்டும். ஒரு பெண் தன் தலைமுடியை வெட்டிக்கொள்வதோ, தன் தலையை மொட்டையடிப்பதோ, அவளுக்கு வெட்கமாக இருக்குமென்றால், அவள் தன் தலையை மூடிக்கொள்ளவேண்டும். ஒரு ஆண் தன் தலையை மூடிக்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில், இறைவனுடைய சாயலையும் மகிமையையும் பிரதிபலிப்பவன் அவனே. ஆனால் பெண்ணோ மனிதனின் மகிமையைப் பிரதிபலிப்பாய் இருக்கிறாள். ஏனெனில் ஆண் பெண்ணிலிருந்து படைக்கப்படவில்லை; பெண்ணே ஆணிலிருந்து படைக்கப்பட்டாள். ஆண் பெண்ணுக்காகப் படைக்கப்படவில்லை. ஆனால் பெண்ணே ஆணுக்காகப் படைக்கப்பட்டாள். இந்த காரணத்திற்காகவும், தூதர்களுக்காகவும், ஒரு பெண் தான் அதிகாரத்தின்கீழ் இருப்பதைக் காட்ட அவளது தலையை மூடிக்கொள்ளவேண்டும். எவ்வாறாயினும், கர்த்தரின் ஒழுங்கின்படி ஒரு பெண், ஆண் இல்லாமல் இல்லை. ஒரு ஆண், பெண் இல்லாமல் இல்லை. ஏனெனில் பெண் ஆணிலிருந்து படைக்கப்பட்டது போலவே, மனிதன் பெண்ணிலிருந்தே பிறக்கிறான். ஆனால், எல்லாம் இறைவனிடத்திலிருந்தே வருகின்றன. ஒரு பெண் வழிபாட்டின்போது தலையை மூடிக்கொள்ளாமல், இறைவனை நோக்கி மன்றாடுவது தகுதியானதோ? நீங்களே தீர்மானியுங்கள். ஒரு மனிதன் தன் தலைமுடியை நீளமாக வைத்துக்கொண்டால், அது அவனுக்குத் தகுந்தது அல்ல என்று இயற்கையும் உங்களுக்குக் போதிக்கிறதே? ஆனால், ஒரு பெண் தனது தலைமுடியை நீளமாக வைத்துக்கொண்டால், அது அவளுக்கு மகிமையாயிருக்கும். நீளமான தலைமுடியே அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைக்குறித்து யாரேனும் விவாதிக்க விரும்பினால், எங்களுக்கோ இறைவனின் திருச்சபைகளுக்கோ இவைத் தவிர வேறெந்த வழக்கமும் இல்லையென்று அறியுங்கள்.