1 நாளாகமம் 29:1-9

1 நாளாகமம் 29:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதன்பின்பு அரசன் தாவீது கூடியிருந்த எல்லா சபையாரிடமும், “இறைவன் தெரிந்துகொண்ட என் மகன் சாலொமோன் வாலிபனும் அனுபவமில்லாதவனுமாய் இருக்கிறான். வேலையோ பெரியது. ஏனெனில், இந்த சிறப்பான கட்டடம் மனிதனுக்கல்ல, இறைவனாகிய யெகோவாவுக்கே. நான் எனது இறைவனின் ஆலயம் கட்டுவதற்கு எனது எல்லாச் செல்வங்களிலுமிருந்து தங்க வேலைகளுக்குத் தங்கத்தையும், வெள்ளி வேலைகளுக்கு வெள்ளியும், வெண்கல வேலைகளுக்கு வெண்கலத்தையும், இரும்பு வேலைகளுக்கு இரும்பையும், மரவேலைகளுக்கு மரத்தையும் கொடுத்திருக்கிறேன். அத்துடன் பதிப்பதற்குத் தேவையான மாணிக்கக் கற்கள், படிகப்பச்சைக் கற்கள், பலநிறம்கொண்ட கற்கள், பளபளப்பான எல்லாவித கற்கள், பளிங்குக் கற்கள் இவை எல்லாவற்றையும் ஏராளமாகக் கொடுத்து வைத்திருக்கிறேன். அத்துடன் நான் எனது இறைவனின் ஆலயத்தின்மீது கொண்ட வாஞ்சையினால், இப்பொழுது பரிசுத்த ஆலயத்திற்கென நான் ஏற்கெனவே கொடுத்தவற்றைவிட, எனது சொந்த தங்கமும் வெள்ளியுமான திரவியங்களை அதிகமாகவும், மேலாகவும் இறைவனின் ஆலயத்திற்கென கொடுக்கிறேன். ஆயிரம் தாலந்து ஓப்பீரின் தங்கத்தையும், ஏழாயிரம் தாலந்து சுத்திகரிக்கப்பட்ட வெள்ளியையும் கட்டடத்தின் சுவரை மூடுவதற்கும், அத்துடன் தங்க வேலைக்காகவும், வெள்ளி வேலைக்காகவும், கைவினைஞர் செய்யும் எல்லா வேலைகளுக்காகவும் கொடுக்கிறேன். இப்பொழுதும் உங்களில் யார் யெகோவாவுக்கு அர்ப்பணிக்க ஆயத்தமாயிருக்கிறீர்கள்” என்றான். அப்பொழுது குடும்பங்களின் தலைவர்களும், இஸ்ரயேல் கோத்திரங்களின் அதிகாரிகளும், ஆயிரம்பேருக்குத் தளபதிகளும், நூறுபேருக்குத் தளபதிகளும் அரசனின் வேலைகளுக்கு பொறுப்பாக இருந்த அதிகாரிகளும் மனப்பூர்வமாகக் கொடுத்தார்கள். அவர்கள் இறைவனின் ஆலய வேலைக்கென ஐயாயிரம் தாலந்து தங்கத்தையும், பத்தாயிரம் தங்கக் காசுகளையும், பத்தாயிரம் தாலந்து வெள்ளியையும், பதினெட்டாயிரம் தாலந்து வெண்கலத்தையும் ஒரு இலட்சம் தாலந்து இரும்பையும் கொடுத்தார்கள். அத்துடன் யார் கையில் இரத்தினக் கற்கள் இருந்தனவோ அவர்கள் அவற்றையும் யெகோவாவின் ஆலயத்தின் திரவியக் களஞ்சிய பொறுப்பிலுள்ள கெர்சோனியனான யெகியேலிடம் கொடுத்தார்கள். தங்கள் தலைவர்கள் அவர்களின் முழு இருதயத்தோடும் தாராளமாய் யெகோவாவுக்குக் கொடுத்ததற்காக அவர்களுடைய மக்கள் சந்தோஷப்பட்டார்கள். தாவீது அரசனும் மிகவும் சந்தோஷப்பட்டான்.

1 நாளாகமம் 29:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு தாவீது ராஜா சபையார்கள் எல்லோரையும் நோக்கி: தேவன் தெரிந்துகொண்ட என்னுடைய மகனாகிய சாலொமோன் இன்னும் வாலிபனும் இளைஞனுமாகவும் இருக்கிறான்; செய்யவேண்டிய வேலையோ பெரியது; அது ஒரு மனிதனுக்கு அல்ல, தேவனாகிய யெகோவாவுக்குக் கட்டும் அரண்மனை. நான் என்னாலே முடிந்தவரை என்னுடைய தேவனுடைய ஆலயத்திற்கென்று பொன் வேலைக்குப் பொன்னையும், வெள்ளி வேலைக்கு வெள்ளியையும், வெண்கல வேலைக்கு வெண்கலத்தையும், இரும்பு வேலைக்கு இரும்பையும், மரவேலைக்கு மரத்தையும், பதிக்கப்படத்தக்க கோமேதகக் கற்களையும், பலவர்ணக் கற்களையும், விலையேறப்பெற்ற சகலவித ரத்தினங்களையும், பளிங்கு கற்கள் முதலிய கற்களையும் ஏராளமாகச் சேமித்தேன். இன்னும் என்னுடைய தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சேமித்த அனைத்தையும்தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என்னுடைய தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன். அறைகளின் சுவர்களை மூடுவதற்காகவும். பொன்வேலைக்குப் பொன்னும், வெள்ளிவேலைக்கு வெள்ளியும் உண்டாக்கவும், கைவினைக் கலைஞர்கள் செய்யும் வேலை அனைத்திற்காகவும், ஓப்பீரின் தங்கமாகிய மூவாயிரம் தாலந்து தங்கத்தையும், சுத்த வெள்ளியாகிய ஏழாயிரம் தாலந்து வெள்ளியையும் கொடுக்கிறேன். இப்போதும் உங்களில் இன்றையதினம் யெகோவாவுக்குத் தன்னுடைய கைக்காணிக்கைகளைச் செலுத்த மனபூர்வமானவர்கள் யார் என்றான். அப்பொழுது வம்சங்களின் பிரபுக்களும், இஸ்ரவேல் கோத்திரங்களின் பிரபுக்களும், ஆயிரம்பேர்களுக்குத் தலைவர்களும், நூறுபேர்களுக்குத் தலைவர்களும், ராஜாவின் வேலைக்காரர்களாகிய பிரபுக்களும் மனப்பூர்வமாக, தேவனுடைய ஆலயத்து வேலைக்கு ஐயாயிரம் தாலந்து பொன்னையும், பத்தாயிரம் தங்கக்காசையும், பத்தாயிரம் தாலந்து வெள்ளியையும், பதிணெட்டாயிரம் தாலந்து வெண்கலத்தையும், லட்சம் தாலந்து இரும்பையும் கொடுத்தார்கள். யார் கையில் ரத்தினங்கள் இருந்ததோ, அவர்கள் அவைகளையும் யெகோவாவுடைய ஆலயத்துப் பொக்கிஷத்திற்கென்று கெர்சோனியனான யெகியேலின் கையிலே கொடுத்தார்கள். இப்படி மனப்பூர்வமாகக் கொடுத்ததற்காக மக்கள் சந்தோஷப்பட்டார்கள்; உத்தம இருதயத்தோடு உற்சாகமாகக் யெகோவாவுக்குக் கொடுத்தார்கள்; தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டான்.

1 நாளாகமம் 29:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)

அங்கே கூடியிருந்த அனைத்து இஸ்ரவேல் ஜனங்களிடமும் தாவீது, “என் குமாரன் சாலொமோனை தேவன் தேர்ந்தெடுத்துள்ளார். அவன் இளைஞன். இந்த வேலையைச் செய்து முடிக்கும் தேவைகளைப் பற்றிய அறிவு இல்லாதவன். ஆனால் இந்த வேலையோ மிகவும் முக்கியமானது. இது ஜனங்களுக்கான வீடு அன்று. இது தேவனாகிய கர்த்தருக்கான வீடு. எனது தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்கான திட்டங்களை என்னால் முடிந்தவரை செய்துள்ளேன். நான் தங்கப் பொருட்கள் செய்வதற்கான தங்கத்தைக் கொடுத்துள்ளேன். வெள்ளிப் பொருட்களைச் செய்வதற்கான வெள்ளியையும் நான் கொடுத்துள்ளேன். வெண்கலப் பொருட்களைச் செய்வதற்கான வெண்கலத்தையும் நான் கொடுத்துள்ளேன். இரும்பு பொருட்களைச் செய்வதற்கான இரும்பையும் நான் கொடுத்துள்ளேன். மரப் பொருட்கள் செய்வதற்கான மரத்தையும் நான் கொடுத்துள்ளேன். பதிப்பதற்குத் தகுந்த ஒளிமிக்க கற்களையும், பலவண்ண கற்களையும், வெண்கற்பாளங்களையும், விலையுயர்ந்த சகல வித இரத்தினங்களையும், கோமேதகம் போன்ற கற்களையும் நான் கொடுத்துள்ளேன். இது போல் பலவிதமான பொருட்களைக் கர்த்தருடைய ஆலயத்திற்காக நான் கொடுத்திருக்கிறேன். எனக்குச் சொந்தமான பொன்னையும், வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்துள்ளேன். இதனை நான் எதற்காகச் செய்தேன் என்றால் என் தேவனுடைய ஆலயம் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புகிறேன். அதனால் அனைத்து பொருட்களையும் பரிசுத்த ஆலயத்திற்கு கொடுத்துவிட்டேன். 110 டன் சுத்தமான பொன்னை நான் ஓபிரிலிருந்து கொடுத்தேன். 260 டன் சுத்தமான வெள்ளியையும் நான் கொடுத்திருக்கிறேன். இவ்வெள்ளி ஆலயச் சுவர்களை மூடிட பயன்படும். தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆன பொருட்களுக்குத் தேவையான தங்கத்தையும், வெள்ளியையும் கொடுத்திருக்கிறேன். இந்த பொன்னினாலும் வெள்ளியாலும் திறமையுடையவர்கள் ஆலயத்திற்குத் தேவையான பல்வேறு வகை பொருட்களைச் செய்யலாம். இப்போது இஸ்ரவேலர்களில் எத்தனை பேர் ஆலயப் பணிக்காக, உங்களைக் கர்த்தருக்கு கொடுக்கத் தயாராக இருக்கிறீர்கள்?” என்று கேட்டான். குடும்பத் தலைவர்களும், இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்களும், ஆயிரம் பேருக்கான அதிபதிகளும், நூறுபேருக்கான அதிபதிகளும், ராஜாவின் மந்திரிகளான தலைவர்களும் ஒப்புக் கொண்டு தங்களது மதிப்பு வாய்ந்த பொருட்களைக் கொடுக்க முன்வந்தனர். அவர்கள், தேவாலயத்திற்குக் கொடுத்த பொருட்களின் பட்டியல் இது: 190 டன் தங்கம், 375 டன் வெள்ளி, 675 டன் வெண்கலம், 3,750 டன் இரும்பு, ஜனங்கள் விலையுயர்ந்த கற்களைக் கர்த்தருடைய ஆலயத்திற்கு கொடுத்தனர். யெகியேல் இக்கற்களைக் காக்கும் பொறுப்பாளி ஆனான். இவன் கெர்சோன் குடும்பத்தவன். தலைவர்கள் மகிழ்ச்சியோடு இவ்வாறு பொருட்களைக் கொடுத்ததால் ஜனங்களும் மகிழ்ச்சியடைந்தனர். தலைவர்கள் நல்ல மனதோடு கொடுத்தனர். தாவீது ராஜாவும் மகிழ்ந்தான்.

1 நாளாகமம் 29:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு தாவீது ராஜா சபையார் எல்லாரையும் நோக்கி: தேவன் தெரிந்துகொண்ட என் குமாரனாகிய சாலொமோன் இன்னும் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான்; செய்யவேண்டிய வேலையோ பெரியது; அது ஒரு மனுஷனுக்கு அல்ல, தேவனாகிய கர்த்தருக்குக் கட்டும் அரமனை. நான் என்னாலே இயன்றமட்டும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று பொன் வேலைக்குப் பொன்னையும், வெள்ளி வேலைக்கு வெள்ளியையும், வெண்கல வேலைக்கு வெண்கலத்தையும், இரும்பு வேலைக்கு இரும்பையும், மரவேலைக்கு மரத்தையும், பதிக்கப்படத்தக்க காந்தியுள்ள கற்களையும், பலவருணக் கற்களையும், விலையேறப்பெற்ற சகலவித ரத்தினங்களையும், வெண்கற்பாளங்களையும், கோமேதகம் முதலிய கற்களையும் ஏராளமாகச் சவதரித்தேன். இன்னும் என் தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையினால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சவதரித்த அனைத்தையும் தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன். அறைகளின் சுவர்களை மூடுவதற்காகவும், பொன்வேலைக்குப் பொன்னும், வெள்ளிவேலைக்கு வெள்ளியும் உண்டாயிருக்கிறதற்காகவும், கம்மாளர் செய்யும் வேலை அனைத்திற்காகவும், ஓப்பீரின் தங்கமாகிய மூவாயிரம் தாலந்து தங்கத்தையும், சுத்த வெள்ளியாகிய ஏழாயிரம் தாலந்து வெள்ளியையும் கொடுக்கிறேன். இப்போதும் உங்களில் இன்றையதினம் கர்த்தருக்குத் தன் கைக்காணிக்கைகளைச் செலுத்த மனப்பூர்வமானவர்கள் யார் என்றான். அப்பொழுது வம்சங்களின் பிரபுக்களும், இஸ்ரவேல் கோத்திரங்களின் பிரபுக்களும், ஆயிரம் பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும், ராஜாவின் வேலைக்காரராகிய பிரபுக்களும் மனப்பூர்வமாய், தேவனுடைய ஆலயத்து வேலைக்கு ஐயாயிரம் தாலந்து பொன்னையும், பதினாயிரம் தங்கக்காசையும், பதினாயிரம் தாலந்து வெள்ளியையும், பதினெண்ணாயிரம் தாலந்து வெண்கலத்தையும், லட்சம் தாலந்து இரும்பையும் கொடுத்தார்கள். யார் கையில் ரத்தினங்கள் இருந்ததோ, அவர்கள் அவைகளையும் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷத்திற்கென்று கெர்சோனியனான யெகியேலின் கையிலே கொடுத்தார்கள். இப்படி மனப்பூர்வமாய்க் கொடுத்ததற்காக ஜனங்கள் சந்தோஷப்பட்டார்கள்; உத்தம இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார்கள்; தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டான்.