அங்கே கூடியிருந்த அனைத்து இஸ்ரவேல் ஜனங்களிடமும் தாவீது, “என் குமாரன் சாலொமோனை தேவன் தேர்ந்தெடுத்துள்ளார். அவன் இளைஞன். இந்த வேலையைச் செய்து முடிக்கும் தேவைகளைப் பற்றிய அறிவு இல்லாதவன். ஆனால் இந்த வேலையோ மிகவும் முக்கியமானது. இது ஜனங்களுக்கான வீடு அன்று. இது தேவனாகிய கர்த்தருக்கான வீடு. எனது தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்கான திட்டங்களை என்னால் முடிந்தவரை செய்துள்ளேன். நான் தங்கப் பொருட்கள் செய்வதற்கான தங்கத்தைக் கொடுத்துள்ளேன். வெள்ளிப் பொருட்களைச் செய்வதற்கான வெள்ளியையும் நான் கொடுத்துள்ளேன். வெண்கலப் பொருட்களைச் செய்வதற்கான வெண்கலத்தையும் நான் கொடுத்துள்ளேன். இரும்பு பொருட்களைச் செய்வதற்கான இரும்பையும் நான் கொடுத்துள்ளேன். மரப் பொருட்கள் செய்வதற்கான மரத்தையும் நான் கொடுத்துள்ளேன். பதிப்பதற்குத் தகுந்த ஒளிமிக்க கற்களையும், பலவண்ண கற்களையும், வெண்கற்பாளங்களையும், விலையுயர்ந்த சகல வித இரத்தினங்களையும், கோமேதகம் போன்ற கற்களையும் நான் கொடுத்துள்ளேன். இது போல் பலவிதமான பொருட்களைக் கர்த்தருடைய ஆலயத்திற்காக நான் கொடுத்திருக்கிறேன். எனக்குச் சொந்தமான பொன்னையும், வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்துள்ளேன். இதனை நான் எதற்காகச் செய்தேன் என்றால் என் தேவனுடைய ஆலயம் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புகிறேன். அதனால் அனைத்து பொருட்களையும் பரிசுத்த ஆலயத்திற்கு கொடுத்துவிட்டேன். 110 டன் சுத்தமான பொன்னை நான் ஓபிரிலிருந்து கொடுத்தேன். 260 டன் சுத்தமான வெள்ளியையும் நான் கொடுத்திருக்கிறேன். இவ்வெள்ளி ஆலயச் சுவர்களை மூடிட பயன்படும். தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆன பொருட்களுக்குத் தேவையான தங்கத்தையும், வெள்ளியையும் கொடுத்திருக்கிறேன். இந்த பொன்னினாலும் வெள்ளியாலும் திறமையுடையவர்கள் ஆலயத்திற்குத் தேவையான பல்வேறு வகை பொருட்களைச் செய்யலாம். இப்போது இஸ்ரவேலர்களில் எத்தனை பேர் ஆலயப் பணிக்காக, உங்களைக் கர்த்தருக்கு கொடுக்கத் தயாராக இருக்கிறீர்கள்?” என்று கேட்டான். குடும்பத் தலைவர்களும், இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்களும், ஆயிரம் பேருக்கான அதிபதிகளும், நூறுபேருக்கான அதிபதிகளும், ராஜாவின் மந்திரிகளான தலைவர்களும் ஒப்புக் கொண்டு தங்களது மதிப்பு வாய்ந்த பொருட்களைக் கொடுக்க முன்வந்தனர். அவர்கள், தேவாலயத்திற்குக் கொடுத்த பொருட்களின் பட்டியல் இது: 190 டன் தங்கம், 375 டன் வெள்ளி, 675 டன் வெண்கலம், 3,750 டன் இரும்பு, ஜனங்கள் விலையுயர்ந்த கற்களைக் கர்த்தருடைய ஆலயத்திற்கு கொடுத்தனர். யெகியேல் இக்கற்களைக் காக்கும் பொறுப்பாளி ஆனான். இவன் கெர்சோன் குடும்பத்தவன். தலைவர்கள் மகிழ்ச்சியோடு இவ்வாறு பொருட்களைக் கொடுத்ததால் ஜனங்களும் மகிழ்ச்சியடைந்தனர். தலைவர்கள் நல்ல மனதோடு கொடுத்தனர். தாவீது ராஜாவும் மகிழ்ந்தான்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 29:1-9
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்