1 நாளாகமம் 29:1-9

1 நாளாகமம் 29:1-9 TCV

அதன்பின்பு அரசன் தாவீது கூடியிருந்த எல்லா சபையாரிடமும், “இறைவன் தெரிந்துகொண்ட என் மகன் சாலொமோன் வாலிபனும் அனுபவமில்லாதவனுமாய் இருக்கிறான். வேலையோ பெரியது. ஏனெனில், இந்த சிறப்பான கட்டடம் மனிதனுக்கல்ல, இறைவனாகிய யெகோவாவுக்கே. நான் எனது இறைவனின் ஆலயம் கட்டுவதற்கு எனது எல்லாச் செல்வங்களிலுமிருந்து தங்க வேலைகளுக்குத் தங்கத்தையும், வெள்ளி வேலைகளுக்கு வெள்ளியும், வெண்கல வேலைகளுக்கு வெண்கலத்தையும், இரும்பு வேலைகளுக்கு இரும்பையும், மரவேலைகளுக்கு மரத்தையும் கொடுத்திருக்கிறேன். அத்துடன் பதிப்பதற்குத் தேவையான மாணிக்கக் கற்கள், படிகப்பச்சைக் கற்கள், பலநிறம்கொண்ட கற்கள், பளபளப்பான எல்லாவித கற்கள், பளிங்குக் கற்கள் இவை எல்லாவற்றையும் ஏராளமாகக் கொடுத்து வைத்திருக்கிறேன். அத்துடன் நான் எனது இறைவனின் ஆலயத்தின்மீது கொண்ட வாஞ்சையினால், இப்பொழுது பரிசுத்த ஆலயத்திற்கென நான் ஏற்கெனவே கொடுத்தவற்றைவிட, எனது சொந்த தங்கமும் வெள்ளியுமான திரவியங்களை அதிகமாகவும், மேலாகவும் இறைவனின் ஆலயத்திற்கென கொடுக்கிறேன். ஆயிரம் தாலந்து ஓப்பீரின் தங்கத்தையும், ஏழாயிரம் தாலந்து சுத்திகரிக்கப்பட்ட வெள்ளியையும் கட்டடத்தின் சுவரை மூடுவதற்கும், அத்துடன் தங்க வேலைக்காகவும், வெள்ளி வேலைக்காகவும், கைவினைஞர் செய்யும் எல்லா வேலைகளுக்காகவும் கொடுக்கிறேன். இப்பொழுதும் உங்களில் யார் யெகோவாவுக்கு அர்ப்பணிக்க ஆயத்தமாயிருக்கிறீர்கள்” என்றான். அப்பொழுது குடும்பங்களின் தலைவர்களும், இஸ்ரயேல் கோத்திரங்களின் அதிகாரிகளும், ஆயிரம்பேருக்குத் தளபதிகளும், நூறுபேருக்குத் தளபதிகளும் அரசனின் வேலைகளுக்கு பொறுப்பாக இருந்த அதிகாரிகளும் மனப்பூர்வமாகக் கொடுத்தார்கள். அவர்கள் இறைவனின் ஆலய வேலைக்கென ஐயாயிரம் தாலந்து தங்கத்தையும், பத்தாயிரம் தங்கக் காசுகளையும், பத்தாயிரம் தாலந்து வெள்ளியையும், பதினெட்டாயிரம் தாலந்து வெண்கலத்தையும் ஒரு இலட்சம் தாலந்து இரும்பையும் கொடுத்தார்கள். அத்துடன் யார் கையில் இரத்தினக் கற்கள் இருந்தனவோ அவர்கள் அவற்றையும் யெகோவாவின் ஆலயத்தின் திரவியக் களஞ்சிய பொறுப்பிலுள்ள கெர்சோனியனான யெகியேலிடம் கொடுத்தார்கள். தங்கள் தலைவர்கள் அவர்களின் முழு இருதயத்தோடும் தாராளமாய் யெகோவாவுக்குக் கொடுத்ததற்காக அவர்களுடைய மக்கள் சந்தோஷப்பட்டார்கள். தாவீது அரசனும் மிகவும் சந்தோஷப்பட்டான்.