தீத்து 2

2
போதிக்கப்பட வேண்டியவை
1ஆனால் நீயோ, நலமான போதனைகளுக்கு ஏற்றவைகளையே போதிக்க வேண்டும். 2வயது முதிர்ந்த ஆண்கள் மனத் தெளிவு உள்ளவர்களாகவும், மதிப்புக்குரியவர்களாவும், சுயகட்டுப்பாடு உள்ளவர்களாகவும், விசுவாசத்திலும் அன்பிலும் சகிப்புத் தன்மையிலும் உறுதியுடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்று அவர்களுக்குக் கற்றுக் கொடு.
3அதேபோல வயது முதிர்ந்த பெண்களின் வாழ்க்கை முறையானது பயபக்தியுடையதாய் இருக்க வேண்டும். அவர்கள் அவதூறு பேசுகின்றவர்களாகவோ மதுபானத்திற்கு அடிமைப்பட்டவர்களாகவோ இராமல், நல்லதைக் கற்றுக் கொடுக்கின்றவர்களாக இருக்க வேண்டும். 4அப்படிச் செய்வதால், இளம் பெண்களைத் தங்களுடைய கணவர் மீதும் பிள்ளைகள் மீதும் அன்பு காட்டுகின்றவர்களாகவும், 5சுயகட்டுப்பாடு உள்ளவர்களாகவும், தூய்மை உள்ளவர்களாகவும், வீட்டில் பொறுப்பு உள்ளவர்களாகவும், தயவுள்ளவர்களாகவும், தங்கள் கணவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றவர்களாகவும் இருக்கும்படி அவர்களால் பயிற்றுவிக்க முடியும். இவர்கள் இப்படி வாழும்போது இறைவனுடைய வார்த்தையை எவராலும் பழித்துரைக்க இயலாது.
6அதேபோல இளம் ஆண்கள் சுயகட்டுப்பாடு உள்ளவர்களாக இருக்க அவர்களை ஊக்கப்படுத்து. 7நல்ல செயல்களைச் செய்து, எல்லாவற்றிலும் அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இரு. உன்னுடைய போதனையில் நேர்மையையும் கண்ணியத்தையும் வெளிப்படுத்து. 8மற்றவர்கள் குற்றம் காண முடியாதபடி நலமான வார்த்தைகளைப் பேசு. அப்போது உன்னை எதிர்க்கின்றவர்கள் நம்மைக் குறித்து தீமையாய்ப் பேச வழியேதும் இன்றி வெட்கத்துக்குள்ளாவார்கள்.
9அடிமைகள் தங்கள் எஜமான்களுக்கு எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என அவர்களுக்குக் கற்றுக் கொடு. எஜமான்களைத் திருப்திப்படுத்தும் விதமாக நடக்கவும், அவர்களுக்கு எதிர்த்துப் பேசாமலும், 10அவர்களிடமிருந்து எதையும் திருடாமலும், தாங்கள் முழு நம்பிக்கைக்கு உரியவர்கள் என்பதைக் காண்பிக்கத் தக்கதாகவும் நடந்துகொள்ள வேண்டும். அப்போது நம்முடைய மீட்பரான இறைவனைப் பற்றிய போதனை எல்லாவிதத்திலும் சிறப்பானது என்பதை அவர்களால் வெளிப்படுத்த முடியும்.
11ஏனெனில், எல்லா மனிதருக்கும் மீட்பைத் தருகின்ற இறைவனுடைய கிருபை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. 12இந்தக் கிருபையானது இறைவனை மறுதலிக்கின்ற வாழ்வையும், உலகத்துக்குரிய ஆசைகளையும் “வேண்டாம்” என்று சொல்லவும், இந்த உலக வாழ்வில் நாம் சுயகட்டுப்பாடும் நீதியும் உள்ளவர்களாய் இறைபக்தியுள்ள வாழ்க்கை வாழ்வதற்கும் நமக்குக் கற்றுத் தருகிறது. 13நம்முடைய மகத்துவமான இறைவனும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து, மகிமையுடன் வெளிப்பட இருக்கும் ஆசீர்வாதமுள்ள எதிர்பார்ப்புக்குக் காத்திருக்கும் வரை நாம் அந்த வாழ்வை#2:13 அந்த வாழ்வை என்பது, 12ஆம் வசனத்தில் சொல்லப்பட்டுள்ளதான வாழ்வைக் குறிக்கிறது. வாழக் கற்றுக்கொள்கிறோம். 14கிறிஸ்து நமக்காக தம்மையே கொடுத்தார். எல்லாவிதமான தீமைகளிலிருந்தும் நம்மை மீட்டு, நற்செயல்களைச் செய்வதற்கு ஆர்வமுள்ள அவருக்குச் சொந்தமான மக்களாகும்படி அவருக்கென்று தூய்மைப்படுத்தவுமே அவர் அப்படிச் செய்தார்.
15இவைகளை நீ போதித்து, முழு அதிகாரத்தோடு கண்டித்து ஊக்கப்படுத்து. எவரும் உன்னைத் தாழ்வாக நோக்க இடம் கொடாதே.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

தீத்து 2: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்