தீத்து 1

1
1இறைவனின் ஊழியராகவும், இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகவும் இருக்கின்ற பவுலாகிய நான், இறைவனால் தெரிவு செய்யப்பட்டவர்களது விசுவாசத்தையும், இறைபக்திக்கு வழிநடத்தும் சத்தியத்தைப் பற்றிய அறிவையும் அடையவே இந்த ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிறேன். 2இந்த விசுவாசத்துக்கும் அறிவுக்கும் அடிப்படையாக இருப்பது, நித்திய வாழ்வைப் பற்றிய எதிர்பார்ப்பு. பொய்யே சொல்லாதவராகிய இறைவன், அந்த நித்திய வாழ்வைக் குறித்து காலம் தொடங்கும் முன்னரே வாக்குறுதி அளித்திருந்தார். 3நம்முடைய இரட்சகராகிய இறைவனுடைய கட்டளையினாலேயே என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பிரசங்கத்தின் மூலமாக, அவரால் நியமிக்கப்பட்டதான இந்தக் காலத்தில் இது வெளிப்படுத்தப்பட்டது.
4பவுலாகிய நான், நமக்குள்ள பொதுவான விசுவாசத்தில்#1:4 விசுவாசத்தில் – இறைவன் மீது கொண்டுள்ள விசுவாசத்தில் என்பது இதன் அர்த்தம். எனக்கு உண்மை மகனாய்#1:4 மகனாய் – சொந்த மகனைப் போல என்பது இதன் அர்த்தம். இருக்கின்ற தீத்துவுக்கு எழுதுகின்றதாவது:
பிதாவாகிய இறைவனாலும், இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவினாலும் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
தீத்துவின் வேலை
5நான் உன்னைக் கிரேத்தா தீவில் விட்டுவந்ததற்குக் காரணம், முற்றுப் பெறாத வேலைகளைச் சரிசெய்யவும், நான் உனக்கு அறிவுறுத்தியதற்கு அமைய எல்லா நகரங்களிலும் மூப்பர்களை நியமிப்பதற்காகவுமே ஆகும். 6மூப்பராக நியமிக்கப்படுகின்றவர் குற்றம் சாட்டப்படாதவராகவும், ஒரே மனைவியை மட்டும் உடைய கணவனாகவும் இருக்க வேண்டும்.#1:6 தன் மனைவிக்கு உண்மையுள்ள கணவனாகவும் இருக்க வேண்டும் என்றும் மொழிபெயர்க்கலாம். அவருடைய பிள்ளைகள் விசுவாசிகளாகவும், சீர்கேடானவர்கள் என்றோ கீழ்ப்படியாதவர்கள் என்றோ குற்றம் சாட்டப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும். 7ஏனெனில் திருச்சபையைக் கண்காணிக்கும் பொறுப்பிலுள்ளவர், இறைவனின் வேலை ஒப்படைக்கப்பட்ட ஒரு ஊழியர் என்பதால், அவர் குற்றம் சாட்டப்படாதவராக இருக்க வேண்டும். அவர் தனது விருப்பத்தின்படி நடக்கின்றவராகவோ, முற்கோபக்காரராகவோ, குடிகாரராகவோ, மற்றவர்களைத் தாக்குகின்றவராகவோ, அநியாய இலாபம் ஈட்ட முயற்சிக்கின்றவராகவோ இருக்கக் கூடாது. 8அதற்கு மாறாக அவர் உபசரிக்கின்ற குணமுள்ளவராகவும், நன்மையை விரும்புகின்றவராகவும், சுயகட்டுப்பாடு உள்ளவராகவும், நீதிமானாகவும், பரிசுத்தம் உள்ளவராகவும், ஒழுக்கமுள்ளவராகவும் இருக்க வேண்டும். 9அத்துடன் தனக்குப் போதிக்கப்பட்ட நம்பத்தகுந்த செய்தியை அவர் உறுதியுடன் நம்பிப் பற்றிக்கொண்டவராகவும் இருக்க வேண்டும். அப்பொழுதே நலமான போதனையினால் அவர் மற்றவர்களை ஊக்கப்படுத்த முடியும். அதற்கு முரணாக இருப்பவர்களை மறுத்து சரியானதை எடுத்துச் சொல்ல முடியும்.
நன்மை செய்யத் தவறியவர்களை கண்டித்தல்
10ஏனெனில், அநேகர் எதையும் ஏற்றுக்கொள்ளாதவர்களாகவும், வீண் பேச்சுப் பேசுகின்றவர்களாகவும், ஏமாற்றுகின்றவர்களாகவும் இருக்கின்றார்கள். குறிப்பாக அப்படிப்பட்டவர்கள் விருத்தசேதனத்தை வலியுறுத்துகின்றவர்களாய் இருக்கின்றார்கள். 11அப்படிப்பட்டவர்களுடைய வாயை அடக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் போதிக்கக் கூடாதவற்றைப் போதித்து, குடும்பங்கள் அனைத்தையும் சீரழித்து விடுகிறார்கள். அநியாய இலாபம் பெறவே அவர்கள் இப்படிச் செய்கின்றார்கள். 12அவர்களைச் சேர்ந்த ஒரு இறைவாக்கினன், “கிரேத்தர்கள்#1:12 கிரேத்தர்கள் என்பது கிரேத்தா தீவைச் சேர்ந்தவர்கள் எப்போதும் பொய் பேசுகின்றவர்கள், அவர்கள் கொடிய மிருகங்கள், சோம்பேறிகளான உணவுப் பிரியர்” என்று கூறியிருக்கிறான். 13இந்தக் கூற்று உண்மையானதே. ஆகவே அவர்களைக் கடுமையாகக் கடிந்து கொண்டேயிரு. அப்போது அவர்கள் விசுவாசத்தில் உறுதியடைந்து, 14யூதருடைய கட்டுக் கதைகளுக்கும், சத்தியத்தைப் புறக்கணிக்கின்ற மனிதர்களின் கட்டளைகளுக்கும் தங்கள் கவனத்தைச் செலுத்த மாட்டார்கள். 15தூய்மையானவர்களுக்கு எல்லாம் தூய்மையானதே. ஆனால் சீர்கெட்டுப் போனவர்களுக்கும், விசுவாசிக்காதவர்களுக்கும் எதுவுமே தூய்மையானதல்ல. உண்மையாகவே அவர்களுடைய மனங்களும், மனசாட்சிகளும் சீர்கெட்டிருக்கின்றன. 16இறைவனைத் தாங்கள் அறிந்திருப்பதாக அவர்கள் சொல்கின்றார்கள். ஆனால் அவர்களுடைய செயல்களினாலே இறைவனை மறுதலிக்கிறார்கள். அவர்கள் அருவருப்புக்குரியவர்கள், கீழ்ப்படியாதவர்கள், நன்மையான எதையுமே செய்யத் தகுதியற்றவர்கள்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

தீத்து 1: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்