ரோமர் 3
3
இறைவனின் உண்மைத் தன்மை
1அப்படியானால், யூதனாய் இருப்பதில் உள்ள மேன்மை என்ன? விருத்தசேதனத்தின் பயன் என்ன? 2எல்லாவிதத்திலும் பல மேன்மைகள் உள்ளன. அந்த வகையில் முதலாவதாக இறைவனுடைய வெளிப்பாடுகள் யூதர்களிடமே ஒப்படைக்கப்பட்டன.
3அப்படி இருந்தும் சிலர் அந்த உண்மைக்கு விசுவாசம் அற்றவர்களாய் நடந்தார்கள். அதனால் என்ன? அவர்களின் விசுவாசமின்மையால், இறைவனின் உண்மைத் தன்மை இல்லாது போய் விடுமா? 4ஒருபோதும் அப்படி ஆகி விடாது! ஏனெனில் எழுதியிருக்கின்றபடி,
“நீர் பேசும்போது நீதியுள்ளவர் என்பது புரியவும்,
நியாயம் விசாரிக்கும்போது வழக்கில் நீர் வெற்றி அடையவும்”#3:4 சங். 51:4
மனிதர்கள் அனைவரும் பொய்யராகிப் போனாலும், இறைவனே உண்மையுள்ளவர் என்பது தெளிவாகட்டும்.
5ஆனால் இதை வைத்துக்கொண்டு, நம்முடைய தீய நடத்தையே இறைவனுடைய நீதியை நன்கு வெளிக் கொண்டுவருகின்றது என்று எவராவது கூறுவார்களானால் நாம் என்ன சொல்லுவோம்? மனித வழக்கத்தில் இதைக் கூறுவதானால், இறைவன் நம்மீது தமது கோபத்தை வெளிக்காட்டுகின்றபோது, அவர் அநீதியானவர் என்றும் சொல்லலாமா? 6ஒருபோதும் அப்படிச் சொல்லவே முடியாது! அப்படிச் சொல்வது சரியாக இருந்தால், இறைவனால் எப்படி இந்த உலகத்தை நியாயம் தீர்க்க முடியும்? 7“என்னுடைய பொய் இறைவனுடைய சத்தியத்தை உயர்த்தி, அவருடைய மகிமையை மேலோங்கச் செய்கின்றது என்றால் இனியும் நான் ஒரு பாவி என்று ஏன் தீர்ப்பளிக்கப்பட வேண்டும்” என்று ஒருவர் வாதாடலாம். 8அப்படியென்றால் “நாம் தீமை செய்யலாமே, அதன்மூலமாக இறுதியில் நன்மை வரும் அல்லவா” என்றும் சொல்லலாமா? நாம் அப்படிச் சொல்வதாகத்தான் சிலர் அவதூறாகக் குற்றம் சாட்டுகின்றார்கள், அவர்கள்மீது தண்டனைத்தீர்ப்பு வருவது நீதியானதே.
நீதிமான் ஒருவனுமில்லை
9எனவே யூதர்களாகிய நாங்கள் மற்றவர்களைவிட சாதகமான நிலையில் உள்ளோம் என்ற முடிவுக்கு வரலாமா? இல்லவே இல்லை. யூதர்களும் யூதரல்லாத மக்களும் பாவத்தின் கட்டுப்பாட்டின் கீழே இருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டை நாங்கள் ஏற்கெனவே சுமத்திவிட்டோமே. 10வேதவசனம் இதை இப்படிக் கூறுகிறது:
“நீதிமான் ஒருவனுமில்லை, ஒருவனாகிலும் இல்லை,
11புரிந்துணர்வுள்ளவன் ஒருவனுமில்லை,
இறைவனைத் தேடுகின்றவன் ஒருவனுமில்லை.
12எல்லோரும் வழிவிலகி,
ஒருமித்து தகுதியற்றவர்கள் ஆனார்கள்.
நன்மை செய்கின்றவன் ஒருவனுமில்லை,
ஒருவனாகிலுமில்லை.”#3:12 சங். 14:1-3; 53:1-3; பிர. 7:20
13அவர்களுடைய தொண்டை திறக்கப்பட்ட பிரேதக் குழி,
“அவர்களுடைய நாவுகள், வஞ்சனை பேசுகின்றன.
அவர்கள் உதடுகளின் கீழ் விரியன் பாம்பின் விஷம் இருக்கின்றது.”#3:13 சங். 140:3
14“அவர்களுடைய வாய் சாபத்தினாலும், கசப்பினாலும் நிறைந்திருக்கின்றது.”#3:14 சங். 10:7
15“அவர்களுடைய கால்கள் இரத்தம் சிந்துவதற்கு விரைகின்றன.
16அழிவும் அவலமும் அவர்கள் வழிகளில் இருக்கின்றன.
17சமாதானத்தின் வழியை அவர்கள் அறிய மாட்டார்கள்.”#3:17 ஏசா. 59:7,8
18“அவர்களுடைய கண்களில் இறைவனைப் பற்றிய பயம் இல்லை.”#3:18 சங். 36:1
19நீதிச்சட்டத்தில் சொல்லப்படுவதெல்லாம் நீதிச்சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்கே சொல்லப்படுகின்றன என்று அறிந்திருக்கிறோம். எனவே எவரும் எதிர்த்து வாதாடாமல் அனைத்து வாய்களும் மூடப்படவும், உலகிலுள்ள அனைவரும் இறைவனுக்குக் கணக்கு ஒப்புவிக்கவும் வேண்டும். 20ஏனெனில், நீதிச்சட்டத்தின்படி செய்கின்ற செயல் முயற்சிகளால் யாருமே இறைவனுடைய பார்வையில் நீதிமான்கள் ஆக்கப்படுவதில்லை, மாறாக பாவத்தைப் பற்றிய உணர்வே நீதிச்சட்டத்தின் மூலமாக வருகின்றது.
விசுவாசத்தின் மூலமாக வரும் நீதி
21இப்பொழுதோ நீதிச்சட்டத்துக்கு அப்பால் இறைவனின் நீதி வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு நீதிச்சட்டமும், இறைவாக்குகளும் சாட்சி பகர்கின்றன. 22விசுவாசிக்கின்ற எவருக்கும் இயேசு கிறிஸ்து மூலமாய் கிடைக்கின்ற இறைவனின் நீதி இதுவாகும், இதில் எவருக்கும்#3:22 எவருக்கும் – யூதர் என்றோ யூதர் அல்லாதவர் என்றோ என்றும் மொழிபெயர்க்கலாம். வித்தியாசம் இல்லை. 23ஏனெனில் எல்லோரும் பாவம் செய்து இறைவனுடைய மகிமையின் தராதரத்தை அடையாமல் தொடர்ந்தும் வாழ்கின்றார்கள். 24ஆனாலும், விசுவாசிக்கின்ற அனைவருமே இறைவனுடைய இலவச அன்பளிப்பான கிருபையினால் கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பின் ஊடாக நீதிமான்கள் ஆகிறார்கள். 25கிறிஸ்துவின் இரத்தம் சிந்தப்பட்டதனால் செலுத்தப்பட்ட பாவநிவாரணப் பலியாக அவரைப் பிரசித்தப்படுத்தி,#3:25 லேவி. 16:15,16 அதன் பலனை மக்கள் விசுவாசத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ளும்படி இறைவன் ஏற்படுத்தித் தந்திருக்கிறார். மக்கள் முற்காலத்தில் செய்த பாவங்களை அவர் தமது பொறுமையின் காரணமாக தண்டிக்காமல் விட்டாலும், தாம் நீதி உள்ளவர் என்பதை இந்தப் பலியினால் வெளிப்படையாகக் காண்பித்துள்ளார். 26அவர் இவ்வாறு நீதியை நிறைவேற்றியதுடன் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பவர்களை நீதிமான்கள் ஆக்குவதன் மூலமாகத் தமது நீதியான இயல்பையும் இக்காலத்தில் வெளிப்படையாகக் காண்பித்துள்ளார்.
27எனவே எங்கள் தற்பெருமை எங்கே? அதற்கு இடமே இல்லாமல் போய் விட்டது. எந்தச் சட்டத்தின் அடிப்படையில் நீதிமான்கள் ஆக்கப்பட்டோம்? மனித முயற்சியின் சட்டத்தினாலா? இல்லவே இல்லை! விசுவாச சட்டத்தின் அடிப்படையிலேயே நீதிமான்கள் ஆக்கப்பட்டோம். 28ஆகவே நீதிச்சட்டத்தால் வரையறுக்கப்படுகின்ற மனித முயற்சிக்கு அப்பாற்பட்டிருக்கின்ற விசுவாசத்தினாலேயே ஒருவன் நீதிமானாக்கப்படுகிறான் என்ற தீர்க்கமான முடிவுக்கு வருகின்றோம். 29ஒருவேளை இறைவன் யூதர்களுக்கு மட்டுமே இறைவனாக இருக்கின்றாரோ? அப்படியல்ல, அவர் யூதர் அல்லாதவர்களின் இறைவனாகவும் இருக்கின்றார். ஆம், யூதரல்லாதவர்களுக்கும் இறைவன் அவரே. 30இறைவன் ஒருவரே. ஆகவே விருத்தசேதனம் உள்ளவர்களையும், விருத்தசேதனம் அற்றவர்களையும் ஒரே விசுவாசத்தின் மூலமாக அவரே நீதிமானாக்குகிறார். 31அப்படியானால், விசுவாசத்தினால் நீதிச்சட்டத்தை செல்லுபடியற்றதாக்கி விடுகின்றோமா? ஒருபோதும் இல்லை! மாறாக, நீதிச்சட்டம் செல்லுபடியாகும் என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறோம்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
ரோமர் 3: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.