ரோமர் 2

2
இறைவனுடைய நீதியான நியாயத்தீர்ப்பு
1ஆகவே,#2:1 ஆகவே – அதாவது “முந்திய அதிகாரத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களின் அடிப்படையில்” மற்றவர்களை நியாயம் தீர்க்கும் மனிதனே, நீ யாராக இருந்தாலும், உன்னைத் தப்ப வைக்க காரணங்களைச் சொல்ல முடியாது. ஏனெனில் நீ ஒரு நீதிபதியாக எந்தக் காரியங்களுக்காக மற்றவர்களுக்கு நியாயத்தீர்ப்பு வழங்குகின்றாயோ, அவற்றையே நீயும் தொடர்ந்து செய்யும்போது உனக்கு நீயே தண்டனைத்தீர்ப்பு வழங்குகிறாய். 2ஆனாலும், அந்தக் காரியங்களைச் செய்பவர்களுக்கு எதிராக இறைவன் வழங்கும் நியாயத்தீர்ப்பானது, சத்தியத்தை ஆதாரமாக கொண்டது என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். 3ஆகவே அப்படிப்பட்ட செயல்களைச் செய்து வருகின்றவர்களை நியாயம் தீர்க்கின்ற மனிதனே, அவற்றை நீயே செய்துவிட்டு இறைவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்புவாய் என்று நினைக்கிறாயா? 4அல்லது, உன்னை மனந்திரும்புதலுக்கு#2:4 கிரேக்க மூலமொழியில் மனந்திரும்புதலுக்கு என்ற சொல்லின் அர்த்தம் பாவத்தைவிட்டு மனம் வருந்தி, மனந்திரும்பி இறைவனிடம் திரும்பு என்பதாகும். வழிநடத்துவதே இறைவனுடைய தயவின் நோக்கம் என்பதை உணராமல், அவருடைய தயவு, சகிப்புத் தன்மை, பொறுமை ஆகியவற்றின் செழுமையை ஏளனம் செய்கின்றாயா?
5உன் பிடிவாதத்தினாலும் மனந்திரும்பாத இருதயத்தினாலும், இறைவனின் நீதியான நியாயத்தீர்ப்பு வெளிப்படப் போகின்ற அந்த கோபத்தின் நாளிலே, நீ அனுபவிக்கப் போகும் அவருடைய கோபத்தை இன்னும் அதிகமாய் குவித்துக்கொள்கிறாய். 6இறைவன், “ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்ற பலனைக் கொடுப்பார்.”#2:6 சங். 62:12; நீதி. 24:12 7சளைக்காமல் நல்ல செயல்கள் செய்து மகிமையையும், மரியாதையையும், அழியாமையையும் தேடுகின்றவர்களுக்கு#2:7 தேடுகின்றவர்களுக்கு என்பது இவைகளை இறைவனிடம் இருந்து தேடுகிறவர்களுக்கு இறைவன் நித்திய வாழ்வைக் கொடுப்பார். 8ஆனால் சுயநலக்காரருக்கும், சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாமல் தீமையைப் பின்பற்றுகின்றவர்களுக்கும் சீற்றமும் கடுங் கோபமுமே கிடைக்கும். 9தீமை செய்கின்ற ஒவ்வொரு மனிதருக்கும் இன்னலும் கொடுந் துன்பமும் காத்திருக்கும். முதலில் யூதருக்கும் பின்பு யூதரல்லாத மக்களுக்கும் அது கிடைக்கும். 10ஆனால் நன்மை செய்கின்ற ஒவ்வொருவருக்கும் மகிமையும், மரியாதையும், சமாதானமும் காத்திருக்கும். அதுவும் முதலில் யூதருக்கும் பின்பு யூதரல்லாதோருக்கும் கிடைக்கும். 11ஏனென்றால், இறைவன் பக்கச்சார்பு உள்ளவர் அல்ல.
12நீதிச்சட்டத்தை#2:12 நீதிச்சட்டத்தை – இது மோசே ஊடாக இறைவன் யூத மக்களுக்குக் கொடுத்த சட்டங்கள். பெற்றுக்கொள்ளாதவர்கள் பாவம் செய்கையில், அந்த சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக அழிவடைவார்கள். நீதிச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாய் பாவம் செய்கின்ற எல்லோரும் அந்தச் சட்டத்தினாலேயே நியாயம் தீர்க்கப்படுவார்கள். 13ஏனெனில் நீதிச்சட்டத்தைக் கேட்கின்றவர்கள் இறைவனுடைய பார்வையில் நீதிமான்கள் அல்ல; நீதிச்சட்டத்துக்குக் கீழ்ப்படிகின்றவர்களே நீதிமான்கள் ஆக்கப்படுவார்கள். 14நீதிச்சட்டம் இல்லாத யூதரல்லாத மக்கள் இயல்பாகவே நீதிச்சட்டம் சொல்லுகின்றபடி செய்கின்றபோது அவையே அவர்களுக்கான சட்டம் ஆகின்றன. 15சட்டத்தில் சொல்லப்பட்டவைகள் தங்களுடைய இருதயங்களில் எழுதப்பட்டிருக்கின்றன என்று அவர்கள் செயலில் காண்பிக்கிறார்கள். அவர்களுடைய மனசாட்சியும் அதற்கு சாட்சி கொடுக்கின்றது. அத்துடன் அவர்களுடைய சிந்தனைகளும் அவர்கள் குற்றம் உள்ளவர்களா குற்றம் அற்றவர்களா என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. 16ஆகவே என்னுடைய நற்செய்தியின்படி நியாயம் தீர்க்கும் நாளில் இயேசு கிறிஸ்துவின் மூலமாக மனிதர்களின் இரகசிய சிந்தனைகளைக் குறித்து இறைவன் இவ்வாறே தீர்ப்பளிப்பார்.
யூதர்களும் நீதிச்சட்டமும்
17இப்போது நீ உன்னை யூதன் என்று அழைத்துக்கொண்டு, நீதிச்சட்டத்தின் மேல் நம்பிக்கை வைத்து, இறைவனைக் குறித்து பெருமைப்பட்டுக்கொள்கின்றாய், 18நீதிச்சட்டத்தினால் நீ அறிவுறுத்தப்பட்டிருப்பதால் அவருடைய திட்டத்தை அறிந்து மேன்மையானது எது என ஆராய்ந்து ஏற்றுக்கொள்கின்றாய். 19அத்துடன், பார்வையற்றோருக்கு ஒரு வழிகாட்டி என்றும், இருளில் இருப்பவர்களுக்கு வெளிச்சம் என்றும், 20நீதிச்சட்டத்தின் பரந்த அறிவையும் சத்தியத்தையும் பெற்றவன் என்றும், மூடர்களுக்கு அறிவைப் புகட்டுகின்றவன் என்றும், குழந்தைகளுக்கான ஆசிரியன் என்றும் உன்னை நீயே எண்ணிக்கொள்கிறாய். 21இப்படிப்பட்ட மனநிலையோடு மற்றவர்களுக்குப் போதிக்கின்ற நீ, உனக்கு நீயே போதித்துக்கொள்வதில்லையா? களவு செய்யக் கூடாதென்று பிரசங்கிக்கின்ற நீ, களவு செய்கின்றாயா? 22தகாத உறவுகொள்ளக் கூடாதென்று சொல்லுகின்ற நீ, தகாத உறவுகொள்கின்றாயா? விக்கிரகங்களை அருவருக்கின்ற நீ, கோவில்களைக் கொள்ளையிடுகிறாயா? 23நீதிச்சட்டத்தைக் குறித்து பெருமை பேசுகின்ற நீ, நீதிச்சட்டத்தை மீறுகின்றதனால் இறைவனை அவமதிக்கலாமா? 24அதனால் இறைவாக்கினனால் முன்னர்#2:24 இறைவாக்கினனால் முன்னர் – கிரேக்க மொழியில் எழுதியிருக்கின்றபடி என்ற சொல் மட்டுமே உள்ளது எழுதியிருக்கின்றபடி, “உங்கள் பொருட்டு யூதரல்லாத மக்களிடையே இறைவனுடைய பெயர் நிந்திக்கப்படுகிறதே.”#2:24ஏசா. 52:5; எசே. 36:20,22
25நீதிச்சட்டத்தை நீ கடைப்பிடித்தால் விருத்தசேதனம் பெறுமதியானதுதான். ஆனால், நீ நீதிச்சட்டத்தை மீறுகின்றபோது, விருத்தசேதனம் செய்யப்படாதவனைப் போல் ஆகி விடுகிறாய். 26ஆகவே, விருத்தசேதனம் செய்யப்படாதவர்கள் நீதிச்சட்டத்தில் சொல்லப்பட்டவைகளைக் கைக்கொண்டால் அவர்கள் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களைப் போல எண்ணப்பட மாட்டார்களோ? 27தன் உடலிலே விருத்தசேதனம் செய்துகொள்ளாதவனாயிருந்தும், நீதிச்சட்டத்துக்குக் கீழ்ப்படிகின்றவன், உன்னைக் குற்றவாளியெனத் தீர்ப்பான். ஏனெனில் நீ எழுதப்பட்ட ஒழுங்குவிதியையும், விருத்தசேதனத்தையும் உடையவனாயிருந்தும்கூட நீதிச்சட்டத்தை மீறுகின்றவனாகி விட்டாயே.
28வெளித் தோற்றத்தில் மாத்திரம் ஒருவன் யூதனாயிருந்தால் அவன் யூதனல்ல; வெறுமனே உடலின் வெளிப்புறத்தில் செய்யப்படும் விருத்தசேதனமானது விருத்தசேதனமே அல்ல. 29ஒருவன் உள்ளத்தில் யூதனாயிருந்தால், அவனே யூதன். எழுதப்பட்ட ஒழுங்குவிதியினால் அன்றி பரிசுத்த ஆவியானவரால் இருதயத்தில் செய்யப்படும் விருத்தசேதனமே விருத்தசேதனம். இப்படிப்பட்டவனுக்கு மனிதரிடமிருந்து அல்ல இறைவனிடமிருந்தே புகழ்ச்சி வருகின்றது.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

ரோமர் 2: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

ரோமர் 2 க்கான வீடியோ