ரோமர் 14

14
விசுவாசத்தில் பலவீனமானவனை ஏற்றுக்கொள்ளுதல்
1விசுவாசத்தில் பலவீனமாயிருக்கின்றவனை ஏற்றுக்கொள்ளுங்கள். ஆனால், கருத்து வேறுபாடுகளைக் குறித்து அவனுடன் வாதாடாமல் இருங்கள். 2ஒருவன் எல்லாவித உணவையும் உண்ணலாம் என நம்புகிறான். விசுவாசத்தில் பலவீனமாய் இருக்கின்றவனோ மரக்கறி உணவை மட்டுமே உண்ணுகிறான். 3எனவே உண்ணுகின்றவன் சில உணவுகளை தவிர்த்துக்கொள்கின்றவனை இகழ்வாகப் பார்க்கக் கூடாது. அதுபோல் உண்ணாதவனோ உண்பவன் மீது குற்றம் காணவும் கூடாது. ஏனெனில் இறைவன் அவனை ஏற்றுக்கொண்டிருக்கிறாரே. 4இன்னொருவனுடைய வேலைக்காரனை நியாயம் தீர்க்க நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமான் அவனுக்கு பொறுப்பாளி. அவன் நிலைநிற்பான், ஏனெனில் இறைவன் அவன் நிலைநிற்க ஆற்றலைக் கொடுக்க வல்லவராய் இருக்கின்றார்.
5ஒருவன் ஒரு நாளைவிட, இன்னொரு நாள் சிறந்தது என்று எண்ணுகிறான். ஆனால் இன்னொருவனோ, எல்லா நாட்களையும் ஒரேவிதமாகவே எண்ணுகிறான். ஒவ்வொருவனும் தன்னுடைய மனதில் உள்ளதை நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். 6ஒரு நாளை சிறப்பானதாக எண்ணுகின்றவன், கர்த்தருக்காக அதைச் செய்கின்றான். உண்பவனும் கர்த்தருக்காகவே அதைச் செய்து இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான். அப்படியே அவற்றை உண்ணாமல்#14:6 இது சில விசுவாசிகள் தாங்கள் உண்ணாது தவிர்த்து வந்த சில உணவு வகைகளையோ அல்லது அவர்கள் கடைப்பிடித்த உபவாசத்தையோ குறிப்பிடுவதாக இருக்கலாம். தவிர்த்துக்கொள்கின்றவனும், இறைவனுக்காக அதைச் செய்து இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான். 7நாம் நமக்காக மட்டுமே வாழ்வதில்லை, அத்தோடு நம்மில் எவரும் நமக்கென்று மரணிப்பதுமில்லை. 8நாம் வாழ்ந்தாலும் கர்த்தருக்கென்றே வாழ்கின்றோம்; நாம் மரணித்தாலும் கர்த்தருக்கென்றே மரணிக்கின்றோம். எனவே நாம் வாழ்ந்தாலும், மரணித்தாலும் கர்த்தருடையவர்கள். 9கிறிஸ்து, மரணித்தவர்களுக்கும் உயிருடன் இருக்கின்றவர்களுக்கும் ஆண்டவராய் இருக்கும் பொருட்டே மரணித்து பின்னர் மீண்டும் உயிர் பெற்றார்.
10இப்படியிருக்க நீ ஏன் உன் சகோதரனை நியாயம் தீர்க்கின்றாய்? ஏன் உன் சகோதரனை உதாசீனம் செய்கின்றாய்? ஏனெனில் நாம் எல்லோரும் இறைவனுடைய நீதி வழங்கும் அரியணைக்கு முன்பாக நிற்போம். 11இறைவாக்கினனால் எழுதியிருக்கின்றபடி:
“ ‘ஒவ்வொரு முழங்காலும் எனக்கு முன்பாக அடிபணிந்து மண்டியிடும்;
ஒவ்வொரு நாவும் இறைவனை ஏற்று ஒப்புக்கொள்ளும்.’ இதை நான் வாழ்ந்திருக்கின்றபடியே ஆணையிட்டு சொல்கிறேன்”#14:11 ஏசா. 45:23
என்று கர்த்தர் சொல்கின்றார்.
12எனவே நாம் ஒவ்வொருவரும் நம்மைக் குறித்து இறைவனுக்குக் கணக்குக் கொடுப்போம்.
13ஆகவே நாம் ஒருவரையொருவர் நியாயம் தீர்ப்பதை நிறுத்துவோம். உங்கள் சகோதரர்களுடைய வழியில் அவர்கள் தடுக்கி விழக் கூடிய தடைக்கல்லையோ, இடையூறையோ இடாதிருக்கத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். 14ஆண்டவர் இயேசுவுக்குள் நான் அறிந்து நிச்சயித்திருக்கின்றபடி, எந்த உணவும் தன்னிலே அசுத்தமானது அல்ல என்பதை நம்புகிறேன். ஆனால் எவனாவது எந்த உணவையும் அசுத்தமானது என நம்பினால், அது அவனுக்கு அசுத்தமானதாகவே இருக்கும். 15நீ உண்ணுகின்ற உணவின் காரணமாக உன் சகோதரன் மனவருத்தமடைந்தால், நீ அன்பு காட்டுகின்றவனாய் நடந்துகொள்ளவில்லை. நீ உண்ணும் உணவினால் அவனை நிலைகுலையப் பண்ணாதே, கிறிஸ்து அவனுக்காக மரணித்தாரே. 16நீங்கள் நன்மை என எண்ணுகின்றதை மற்றவர்கள் தீமையாய்ப் பேசுவதற்கு இடங்கொடுக்க வேண்டாம். 17ஏனெனில் இறைவனுடைய அரசு உண்ணுவதைப் பற்றியதும் அருந்துவதைப் பற்றியதுமல்ல. அது நீதி, சமாதானம் மற்றும் பரிசுத்த ஆவியானவருக்குள்ளான மனமகிழ்ச்சி என்பவைகளைப் பற்றியதே. 18இவ்விதமாக கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கின்றவன் இறைவனின் பிரியத்தையும் மனிதரின் நன்மதிப்பையும் பெறுவான்.
19எனவே நாம் சமாதானத்தை உண்டாக்குவதும், ஒருவர் மற்றவரை கட்டியெழுப்ப உதவுவதுமான காரியங்களில் ஈடுபட முயற்சி செய்வோம். 20உணவுக்காக இறைவனுடைய வேலையின் பலனை அழித்துவிட வேண்டாம். எல்லா உணவும் சுத்தமானதுதான், ஆனால் ஒருவன் உண்ணும் உணவு மற்றொருவனுக்குத் தடையாக இருக்குமானால், அதை அவன் உண்ணுவது தவறானதாயிருக்கும். 21இறைச்சியை உண்ணுவதோ, திராட்சை இரசத்தைக் குடிப்பதோ, அல்லது வேறு எதைச் செய்வதோ உனது சகோதரன் பாவத்தில் விழுவதற்குக் காரணமாய் இருக்குமானால், அவற்றைச் செய்யாதிருப்பது நல்லது.
22இந்த விடயத்தில் நீ கொண்டிருக்கும் விசுவாசம் உனக்கும் இறைவனுக்கும் இடையே இருக்கட்டும். ஒருவன் நியாயமானதென்று தன்னால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றைக்கொண்டு, தன்னைத் தானே குற்றவாளியாகத் தீர்க்காதிருக்க அவனால் முடியுமானால் அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். 23ஆனால் யாரேனும் ஒருவன் தான் உண்ணுவதைக் குறித்து அது சரியா தவறா என்ற சந்தேகத்தோடு அதை உண்பானானால், அவன் தன்னைத் தானே குற்றவாளியாகத் தீர்க்கின்றவனாய் இருப்பான். ஏனெனில் அவன் அதை விசுவாசத்தோடு உண்ணவில்லை. விசுவாசம் இல்லாமல் செய்யப்படுகின்ற எல்லாம் பாவமே.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

ரோமர் 14: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

ரோமர் 14 க்கான வீடியோ