ரோமர் 13

13
அதிகாரிகளுக்கு கீழ்ப்படியுங்கள்
1அரச அதிகாரங்களுக்கு அனைவரும் கீழ்ப்படிந்து நடவுங்கள். இறைவனே அனைத்து அதிகாரங்களுக்கும் மேலானவராக இருக்கின்றார். அதிகாரங்கள் அனைத்தும் அவராலே நிறுவப்பட்டுள்ளன. 2ஆகையால் அதிகாரத்தை எதிர்க்கின்றவன், இறைவன் நியமித்ததை எதிர்க்கின்றான். அவ்விதம் எதிர்க்கின்றவர்கள் தங்கள் மேல் தண்டனையை வருவித்துக்கொள்கின்றார்கள். 3ஏனெனில், நன்னடத்தை உள்ளவர்களுக்கன்றி, துர்நடத்தையுள்ளவர்களுக்கே அதிகாரிகள் மோசமானவர்களாகக் காணப்படுகிறார்கள். அதிகாரத்திலுள்ளவர்களுக்குப் பயப்படாமல் இருக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் நன்மை செய்து அவர்களது பாராட்டைப் பெற்றுக்கொள்ளுங்கள். 4அதிகாரத்தில் இருக்கின்றவன் உங்களுக்கு நன்மை செய்வதற்கான இறைவனுடைய வேலைக்காரனாக இருக்கின்றான். நீங்கள் தவறு செய்தால், அவர்களுக்குப் பயப்படுங்கள். அவர்கள் ஆயுதத்தை வீணாகப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் இறைவனுடைய வேலைக்காரர்கள், தீமை செய்கின்றவர்கள் மேல் இறைவனுடைய கோபத்தை வரப்பண்ணுகின்ற தண்டனையைக் கொடுக்கும் பிரதிநிதிகள். 5ஆகையால் அதிகாரிகளுக்கு அடங்கி நடப்பது அவசியம். தண்டனை கிடைக்கும் என்பதற்காக மட்டும் அல்ல, நம்முடைய மனசாட்சியின் பொருட்டும் அடங்கி நடக்க வேண்டும்.
6அதிகாரத்தில் உள்ளவர்கள் இறைவனுடைய வேலைக்காரர்கள். அவர்கள் இந்தப் பணிக்காக தங்களது முழு நேரத்தையும் செலவிடுகிறார்கள். இதற்காக நீங்கள் வரியையும் செலுத்துகிறீர்கள். 7நீங்கள் ஒவ்வொருவனுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுங்கள். நீங்கள் வரி செலுத்த வேண்டியிருந்தால் வரியைச் செலுத்துங்கள், சுங்க வரி செலுத்த வேண்டுமானால் அதைச் செலுத்துங்கள், மரியாதை செலுத்த வேண்டுமானால் மரியாதை செலுத்துங்கள், கனம் பண்ண வேண்டுமானால் கனம் பண்ணுங்கள்.
அன்பும் நீதிச்சட்டமும்
8எவருக்கும் கடன்காரனாய் இராமல் ஒருவரில் ஒருவர் அன்பு செலுத்துவதில் மட்டும் கடன்பட்டவர்களாய் இருங்கள். ஏனெனில் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தினால், நீங்கள் நீதிச்சட்டத்தை நிறைவேற்றுகிறீர்கள். 9“தகாத உறவுகொள்ளாதே,” “கொலை செய்யாதே,” “களவு செய்யாதே,” “அயலானுடையதை அபகரிக்க ஆசைகொள்ளாதே”#13:9 யாத். 20:13-14; உபா. 5:17-19,21 என்ற கட்டளைகளும், வேறு கட்டளைகளும் கொடுக்கப்பட்டிருந்தாலும், இவையெல்லாம், “நீ உன்னில் அன்பாயிருப்பது போல் உன் அயலவனிலும் அன்பாயிரு”#13:9 லேவி. 19:18 என்ற ஒரே கட்டளையில் அடங்குகின்றன. 10அயலவனில் அன்பு செலுத்துகின்றவன் பிறருக்குத் தீங்கு செய்ய மாட்டான். ஆகவே, அன்பே நீதிச்சட்டத்தை முழுநிறைவாக்குகிறது.
நாள் சமீபமாயிருக்கிறது
11தற்போதைய காலத்தை புரிந்து கொண்டவர்களாய் இவைகளைச் செய்யுங்கள். உங்கள் தூக்கத்தைவிட்டு நீங்கள் எழுந்திருக்க வேண்டிய வேளை வந்துவிட்டது. நாம் விசுவாசிகளானபோது இருந்ததைவிட நமது இரட்சிப்பு இப்போது சமீபமாயிருக்கிறது. 12இரவு கடந்து போயிற்று, பகல் சமீபமாயிற்று. எனவே இருளின் செயல்களை நம்மைவிட்டு அகற்றி, ஒளியின் ஆயுதத்தை அணிந்துகொள்வோம். 13ஒழுக்கக்கேடான களியாட்டங்களையும், குடிவெறியாட்டங்களையும், பாலியல் முறைகேடுகளையும், கேடுகெட்ட செயல்களையும், பிரிவினைகளையும், பொறாமைகளையும் அகற்றிவிட்டு பகலில் நடப்பவர்களைப் போல் ஒழுக்கமாய் நடப்போம். 14பாவ மனித இயல்பின் விருப்பத்தை திருப்திப்படுத்த இடம் கொடாமல், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

ரோமர் 13: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

ரோமர் 13 க்கான வீடியோ