ரோமர் 11
11
இஸ்ரயேலில் மீதியானவர்கள்
1இறைவன் தம்முடைய மக்களான இஸ்ரயேலரை#11:1 இஸ்ரயேலரை – கிரேக்க மொழியில் மக்களை என்றுள்ளது. நிராகரித்துவிட்டாரா என நான் கேட்கின்றேன்? அப்படி இல்லை. ஏனென்றால் நானும் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த, ஆபிரகாமின் சந்ததியில் வந்த இஸ்ரயேலனே. 2இறைவன் தாம் முன்பே அறிந்த தம்முடைய மக்களைக் கைவிடவில்லை. எலியாவைப்பற்றி வேதவசனம் என்ன சொல்கின்றது என்றும், அவர் எவ்விதம் இஸ்ரயேலுக்கு விரோதமாக இறைவனை நோக்கி மன்றாடி வேண்டிக் கொண்டார் என்றும் அறியாதிருக்கிறீர்களா? 3அவர், “கர்த்தாவே அவர்கள் உம்முடைய இறைவாக்கினரைக் கொலை செய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துவிட்டார்கள். நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன். அவர்கள் என்னையும் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்”#11:3 1 இராஜா. 19:10,14 என்றார். 4அதற்கு இறைவன், அவருக்குக் கூறிய பதில் என்ன? “இல்லை, எஞ்சியிருப்பது நீ மட்டுமல்ல; பாகாலுக்கு முன்பாக முழந்தாழிடாத, ஏழாயிரம் பேரை அவர்களுக்குள் நான் எனக்கென்று வைத்திருக்கிறேன்”#11:4 1 இராஜா. 19:18 என்றார். 5அப்படியே தற்காலத்திலும், கிருபையினால் தெரிவு செய்யப்பட்ட இஸ்ரயேலர்களில் சிலர் எஞ்சியிருக்கின்றார்கள். 6அவர்கள் தெரிவு செய்யப்பட்டது கிருபையினால் என்றால் அது அவர்களது நல்ல செயல்களினால் நடந்தது அல்லவே. நல்ல செயல்களால் அது நடந்ததென்றால் கிருபையானது உண்மையான கிருபையாக இராதே.
7நடந்தது என்ன? இஸ்ரயேலர்கள் ஆர்வத்துடன் தேடியதை அடையத் தவறினார்கள். ஆனால் அவர்களில் தெரிவு செய்யப்பட்ட சிலர் அதைப் பெற்றுக்கொண்டார்கள். மற்றவர்களின் மனங்களோ கடினமாக்கப்பட்டன. 8எழுதியிருக்கின்றபடி,
“இந்த நாள்வரை, இறைவன் அவர்களுக்கு ஒரு மந்தமுள்ள ஆவியையும்,
காண முடியாத கண்களையும்,
கேட்க முடியாத காதுகளையும் கொடுத்தார்.”#11:8 உபா. 29:4; ஏசா. 29:10
9தாவீது இவர்களைக் குறித்தே,
“அவர்களுடைய விருந்தே அவர்களைச் சிக்க வைக்கும் கண்ணிப் பொறியாகவும்,
அவர்கள் தடுக்கி விழும் கல்லாகவும், அவர்களது தண்டனையாகவும் மாறட்டும்.
10அவர்கள் பார்க்க முடியாதபடி அவர்களுடைய கண்களை இருளடையச் செய்து,
அவர்களுடைய முதுகு எந்நேரமும் சுமையால் கூனிப் போகச் செய்யும்”#11:10 சங். 69:22,23
என்றார்.
ஒட்டப்பட்ட கிளைகள்
11அவர்கள் தடுக்கி வீழ்ந்தது ஒரு மீள முடியாத வீழ்ச்சியா என நான் கேட்கின்றேன்? இல்லவே இல்லை. அவர்களின் நெறி மீறுதலினாலே யூதரல்லாதவர்களுக்கு மீட்பு வந்தது. இது இஸ்ரயேலர்கள் பொறாமை அடைவதற்காகவே நடந்தது. 12இஸ்ரயேலர்களுடைய மீறுதல் உலகத்திற்கு ஆசீர்வாதமாயும், அவர்களுடைய இழப்பு யூதரல்லாத மக்களுக்கு ஆசீர்வாதமாயும் இருக்குமானால், அவர்களுடைய முழுமையான உள்ளடக்கம் இன்னும் எவ்வளவு ஆசீர்வாதமாயிருக்கும்.
13இப்போது யூதரல்லாதவர்களாகிய உங்களோடு நான் பேசுகின்றேன். நான் யூதரல்லாத மக்களிடம் அனுப்பப்பட்ட அப்போஸ்தலனாய் இருப்பதால் என்னுடைய ஊழியத்தைக் குறித்துப் பெருமிதம் அடைகிறேன். 14அதன்மூலமாக எப்படியாவது இஸ்ரயேலர்கள் சிலருடைய பொறாமையைத் தூண்டி, அவர்களை காப்பாற்றும் நல்ல எதிர்பார்ப்பு எனக்குண்டு. 15ஏனெனில் இஸ்ரயேலர்கள் நற்செய்தியை நிராகரித்தது உலகத்தின் ஒப்புரவாக்குதலுக்கு வழிவகுத்ததென்றால், அவர்கள் அதை ஏற்றுக்கொள்வது மரணித்தவர் உயிர்த்தெழுவது போல் இருக்குமல்லவா? 16பிசைந்த மாவிலிருந்து எடுக்கப்பட்டு முதற்பலனாக அர்ப்பணிக்கப்பட்ட சிறிதளவு மாவானது பரிசுத்தமானது எனின் பிசைந்த மாவு முழுவதுமே பரிசுத்தமானதே. ஒரு மரத்தின் வேர் பரிசுத்தமானதெனின் அதன் கிளைகளும் பரிசுத்தமானவையே.
17நல்ல ஒலிவ மரத்திலிருந்து சில கிளைகள் முறித்தெறியப்பட்டு, அதற்குப் பதிலாகக் காட்டு ஒலிவ மரத்தின் தளிர்களாகிய நீங்கள், எஞ்சிய கிளைகளிடையே ஒட்டு மரமாய் இணைக்கப்பட்டீர்கள். அதனால், இப்போது நல்ல ஒலிவ மரத்தின் வேரிலிருந்து வரும் சாரத்திலே நீங்களும் ஊட்டம் பெறுகிறீர்கள். 18எனவே நீங்கள் உங்களை மற்ற கிளைகளோடு ஒப்பிட்டு பெருமை அடையக் கூடாது. அப்படி நீங்கள் பெருமைப்பட்டால் வேருக்கு ஊட்டமளிக்கும் ஆதரவை கொடுக்கின்றவர்கள் நீங்கள் அல்ல, மாறாக வேரே உங்களுக்கு ஊட்டமளிக்கும் ஆதரவு என்பதை நினைவில் இருத்திக்கொள்ளுங்கள். 19“நாங்கள் ஒட்ட வைக்கப்படும்படியாக அந்தக் கிளைகள் முறித்துப் போடப்பட்டன” என்று நீங்கள் சொல்லலாம். 20உண்மைதான், ஆனால் அவர்கள் விசுவாசிக்காத காரணத்தினால்தான் முறித்து எறியப்பட்டார்கள். நீங்களோ விசுவாசித்ததனாலே மட்டுமே நிலைத்து நிற்கிறீர்கள். எனவே நீங்கள் பெருமைகொள்ளாமல் பயத்துடன் வாழுங்கள். 21இறைவன் இயற்கையான கிளைகளையே முறித்து எறிந்தாரெனில் உங்களை அவர் தப்ப விடுவது எப்படி?
22ஆகவே இறைவனுடைய தயவையும், தீவிர கண்டிப்பையும் நன்கு கவனியுங்கள். அவர் வழிவிலகி வீழ்ந்தவர்கள் மேல் தீவிர கண்டிப்பையும், உங்கள் மேலோ தயவையும் காட்டுகிறார். அவருடைய தயவில் நீங்கள் தொடர்ந்து நிலைத்திராவிட்டால் உங்களையும் அவர் அகற்றி விடுவார். 23இஸ்ரயேலர் தங்கள் விசுவாசம் அற்ற வழியில் தொடர்ந்து செல்லாத நிலைக்கு வரும்போது, அவர்களும் மீண்டும் மரத்தோடு கிளைகளாக ஒட்டப்படுவார்கள். இறைவன் அவர்களைத் திரும்பவும் ஒட்ட வைக்க வல்லவராய் இருக்கின்றார். 24இயற்கையான காட்டு ஒலிவ மரத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட உங்களை, தோட்டத்தில் வளர்க்கும் ஒலிவ மரத்தில் இயற்கைக்கு மாறாக இறைவன் ஒட்ட வைத்தார் எனில், இயற்கையான கிளைகளைத் திரும்பவும் தங்கள் சொந்த ஒலிவ மரத்திலே ஒட்ட வைப்பது எவ்வளவு எளிதானது!
இஸ்ரயேலர்களுக்கு இரட்சிப்பு
25பிரியமானவர்களே, நீங்கள் உங்களை அறிவாளிகள் என்று எண்ணாமல், இந்த மறைபொருளை அறிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். யூதரல்லாத விசுவாசிகளிலிருந்து முழுத் தொகையான மக்கள்#11:25 முழுத் தொகையான மக்கள் என்பது பரலோக அரசுக்கென்று தெரிவு செய்யப்பட்ட மக்கள் தொகையினர். வந்து சேரும் வரையில், இஸ்ரயேலர்களில் ஒரு பகுதியினர் உள்ளத்தில் கடினப்பட்டிருப்பார்கள். 26இவ்விதமாய் எழுதியிருக்கின்றபடி எல்லா இஸ்ரயேலரும் மீட்கப்படுவார்கள்:
“மீட்கின்றவர் சீயோனிலிருந்து வந்து,
யாக்கோபின் இறை பற்றற்ற நிலையை நீக்கிவிடுவார்.
27நான் அவர்களுடைய பாவங்களை நீக்கி விடும்போது,
இதுவே நான் அவர்களுடன் செய்துகொள்ளும் உடன்படிக்கை.”#11:27 ஏசா. 59:20,21; 27:9; எரே. 31:33,34
28நற்செய்தியைப் பொறுத்தவரையில், உங்கள் பொருட்டு அவர்கள் பகைவராய் இருக்கின்றார்கள். ஆனால் இறைவனின் கிருபைத் தெரிவினாலும், அவர்களது முற்பிதாக்கள் பொருட்டும் அதிகம் நேசிக்கப்படுகிறார்கள். 29இறைவனின் அழைப்பும் வரங்களும் திருப்பி எடுத்துக்கொள்ள முடியாதவை. 30முன்பு நீங்கள் இறைவனுக்குக் கீழ்ப்படியாதவர்களாய் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுதோ, இஸ்ரயேலரின் கீழ்ப்படியாமையினால் நீங்கள் இரக்கம் பெற்றிருக்கிறீர்கள். 31அதுபோலவே இஸ்ரயேலரும் இப்போது கீழ்ப்படியாமல் இருக்கின்றார்கள். இறைவன் உங்களுக்குக் காண்பித்த இரக்கத்தினால் அவர்களும் இரக்கம் பெறுவார்கள். 32ஏனெனில் இறைவன் எல்லா மனிதர் மேலும் இரக்கம் காட்டும்படி, எல்லா மனிதரையும் அவர்களது கீழ்ப்படியாமையின் தண்டனையில் கட்டி வைத்துள்ளார்.
இறைவனைப் புகழ்தல்
33ஆ! இறைவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவற்றின் எல்லை எவ்வளவு ஆழமானது!
அவருடைய தீர்ப்புகள் ஆராய்ந்து அறிய முடியாதவை.
அவருடைய வழிகளோ கண்டுபிடிக்க முடியாதவை.
34“கர்த்தருடைய மனதை அறிந்தவன் யார்?
அவருக்கு ஆலோசகனாய் இருந்தவன் யார்?”#11:34 ஏசா. 40:13
35“இறைவன் தனக்குத் திருப்பிக் கொடுக்கும்படி,
இறைவனுக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?”#11:35 யோபு 41:11
36எல்லாமே அவரிடமிருந்து வந்தவை, அவர் மூலமாகவும், அவருக்காகவுமே இருக்கின்றன.
அவருக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக! ஆமென்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
ரோமர் 11: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.