ரோமர் 1
1
1கிறிஸ்து இயேசுவின் ஊழியரான#1:1 ஊழியரான – கிரேக்க மொழியில், கிறிஸ்து இயேசுவுக்காக முழுவதுமாக அர்ப்பணித்துள்ள ஒரு அடிமை என்பதாக பவுல் தன்னைக் குறிப்பிடுகிறார். பவுலாகிய நான், அப்போஸ்தலராக இருக்கும்படி இறைவனால் அழைக்கப்பட்டும் இறைவனுடைய நற்செய்தியை அறிவிப்பதற்கென்று விசேடமாக தேர்ந்தெடுக்கப்பட்டும் இருக்கின்றேன். 2இறைவன் இந்த நற்செய்தியை இறைவாக்கினர் ஊடாக பரிசுத்த வேதவசனங்களில் முன்கூட்டியே வாக்குறுதி அளித்துள்ளார். 3இந்த நற்செய்தி இறைவனுடைய மகனைப் பற்றியது; இவரே மனிதனாகத் தாவீதின் சந்ததியில் பிறந்த நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து. 4இவர் பரிசுத்தத்தின் ஆவியினாலும், மரணித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலை அடைந்ததாலும் இறைவனின் மகன் என்று வல்லமையாகப் பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளார். 5அவரின் பேரில் எல்லா இனத்தவர்களையும்#1:5 இனத்தவர்களையும் என்பது யூதர் அல்லாதோர் அனைவரையும் குறிக்கின்றது விசுவாசத்தினாலே வரும் கீழ்ப்படிவான வாழ்விற்கு அழைப்பதற்கான கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் நாம் அவருக்கூடாக வரமாகப் பெற்றோம். 6இப்படியாக இயேசு கிறிஸ்துவுக்குச் சொந்தமாகும்படி அழைக்கப்பட்ட யூதர் அல்லாதோரில் நீங்களும் அடங்கி உள்ளீர்கள்.
7இறைவனால் அன்பு செய்யப்பட்டு பரிசுத்தவான்களாக இருக்கும்படி அழைக்கப்பட்டுள்ள ரோம் நகரில் இருக்கின்ற, உங்கள் அனைவருக்கும் நான் எழுதுவதாவது:
நம்முடைய பிதாவாகிய இறைவனிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் வரும் கிருபையும் சமாதானமும் உங்களுக்கு உரித்தாகட்டும்.
ரோமுக்குப் போவதற்கான பவுலின் ஆவல்
8முதலாவதாக, உங்கள் எல்லோருக்காகவும் இயேசு கிறிஸ்து மூலமாக என் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். ஏனென்றால் உங்கள் விசுவாசத்தைக் குறித்து உலகம் எங்கும் பேசப்படுகிறது. 9நான் மன்றாடுகின்ற எல்லா வேளைகளிலும் உங்களைத் தொடர்ச்சியாக நினைவுகூருகிறேன் என்பதற்கு இறைவனே சாட்சியாக இருக்கின்றார். அவருடைய மகனைப் பற்றிய நற்செய்திக்காகவே நான் என் ஆவியில்#1:9 ஆவியில் என்பது சிந்தனை, மனப்பான்மை, உணர்வு, விருப்பு அனைத்திலும் என்று பொருள் ஊழியம் செய்கின்றேன். 10இறைவனுடைய சித்தத்தின்படி நான் உங்களிடத்தில் வருவதற்கான வழி இப்பொழுதாவது திறக்கப்பட வேண்டுமென்று மன்றாடுகிறேன்.
11ஏனெனில் உங்களைப் பலப்படுத்துவதற்காக, ஆவிக்குரிய அன்பளிப்பை உங்களுக்கு வழங்குவதற்கு உங்களைக் காண நான் ஆவலாயிருக்கிறேன். 12இதனால் உங்களை நானும் என்னை நீங்களுமாக, நாம் ஒருவரையொருவர் விசுவாசத்திலே ஊக்குவிக்கலாம். 13பிரியமானவர்களே, நான் மற்ற இடங்களில் இருக்கின்ற யூதரல்லாத மக்கள் மத்தியில் ஊழியத்தின் பலாபலன்களைப் பெற்றது போலவே, உங்கள் மத்தியிலும் பலாபலன்களைப் பெறும் பொருட்டு அங்கே வருவதற்குப் பல முறை திட்டமிட்டேன்; ஆனாலும் இதுவரை வர முடியாதபடி தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது என்பதைக் குறித்து நீங்கள் தெரியாதிருப்பதை நான் விரும்பவில்லை.
14கிரேக்கரோ, கிரேக்கர் அல்லாதவர்களோ, ஞானிகளோ, மூடர்களோ என்று பாராமல் அனைவருக்குமே#1:14 அனைவருக்குமே – யூதரல்லாத மக்கள் எல்லோருக்கும் என்று பொருள். நான் கடமைப்பட்டவனாய் இருக்கின்றேன். 15அதனாலேயே ரோம் நகரில் இருக்கின்ற உங்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கிக்க ஆவலாயிருக்கிறேன்.
16ஏனெனில் நற்செய்தியைக் குறித்து நான் வெட்கப்படவில்லை. அதுவே விசுவாசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் இரட்சிப்பைக் கொடுக்கின்ற இறைவனின் வல்லமையாய் இருக்கின்றது. அந்த நற்செய்தி முதலாவது யூதர்களுக்கும், பின்பு யூதரல்லாத மக்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 17“நீதிமான் விசுவாசத்தினாலே வாழ்வார்”#1:17 ஆப. 2:4 என்று எழுதப்பட்டிருக்கின்றபடி, ஆரம்பம் முதல் இறுதி வரை விசுவாசத்தினாலே#1:17 விசுவாசத்தினாலே – கிரேக்க மொழியில், விசுவாசத்தினால் விசுவாசத்துக்கென்று என்றுள்ளது. வருகின்ற இறைவனின் நீதியானது இந்த நற்செய்தியில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
பாவத்துக்கு எதிரான இறைவனின் தண்டனை
18அவ்வாறே, மனிதர்கள் தங்களுடைய தீய செயல்களால் சத்தியத்தை அடக்கி வைப்பதால் இறைவனை மறுதலிக்கும் அவர்களுடைய நடத்தைக்கும் தீய செயல்களுக்கும் எதிராக, பரலோகத்திலிருந்து இறைவனுடைய கோபமும் வெளிப்படுத்தப்படுகிறது. 19ஏனெனில் இறைவனைப்பற்றி அவர்கள் அறியக் கூடியவற்றை இறைவனே அவர்களுக்குத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதால், அவை அவர்களுக்குத் தெளிவாக இருக்கின்றன. 20உலகம் படைக்கப்பட்டது முதல் கண்ணுக்குப் புலப்படாத இறைவனின் தன்மைகளான அவருடைய நித்திய வல்லமை, இறை இயல்பு ஆகியன படைக்கப்பட்டவைகளிலிருந்து உணரக் கூடியதாய் உள்ளன. எனவே மனிதர்கள் தம் துர்நடத்தையை நியாயப்படுத்த வழியில்லை.
21அவர்கள் இறைவனை அறிந்திருந்த போதிலும் அவரை இறைவன் என்று மகிமைப்படுத்தவோ, அவருக்கு நன்றி செலுத்தவோ இல்லை. இதனால் அவர்களது சிந்தனையில் பயனற்ற வாதங்கள் தோன்றி அவர்களது மந்தமான இருதயங்கள் உணர்வற்று இருளால் நிறைந்தன. 22அவர்கள் தங்களை அறிஞர்கள் என்று திடமாக சொல்லிக் கொண்டாலும் மூடர்களாகி, 23அழியாமையுடைய இறைவனின் மேன்மையான மகிமைக்கு மாற்றீடாக அழிவுள்ள மனிதர்கள், பறவைகள், மிருகங்கள், ஊரும் உயிரினங்கள் போன்ற உருவங்களைச் செய்தார்கள்.
24எனவே அவர்களுடைய இருதயத்தின் ஆசை வெறிகளுக்கு ஏற்ப ஒருவரோடொருவர் தங்கள் உடல்களை இழிவுபடுத்தும் அசுத்தமான உறவுகொள்ளும்படி இறைவன் அவர்களை துர்நடத்தையின் கட்டுப்பாட்டின் கீழ் கைவிட்டார். 25ஏனெனில், அவர்கள் இறைவனைப் பற்றிய சத்தியத்தைப் பொய்யாக மாற்றி, படைக்கப்பட்டவைகளை வழிபட்டு பணி செய்தார்கள். படைத்தவரையோ விட்டுவிட்டார்கள். அவரே என்றென்றும் துதிக்கப்படத்தக்கவர். ஆமென்.
26இதனால், இறைவன் வெட்கக்கேடான காம வேட்கைகளின் கட்டுப்பாட்டின் கீழ் அவர்களைக் கைவிட்டார். அவர்களுடைய பெண்கள் இயல்பான பாலுறவைவிட்டு, இயற்கைக்கு விரோதமான உறவால் அதை மாற்றீடு செய்தார்கள். 27அவ்விதமாகவே ஆண்களும் பெண்களுடனான இயல்பான பாலுறவைக் கைவிட்டு, ஆண்கள் மேல் ஆண்கள் வேட்கைகொண்டு, ஆண்களுடன் ஆண்கள் வெட்கக்கேடான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு, தங்களுடைய முறைகேடான செயல்களுக்கு ஏற்ற தண்டனையினால் வருந்துகிறார்கள்.
28மேலும் அவர்கள் இறைவனைப் பற்றிய உண்மை அறிவை ஏற்றுக்கொண்டு வாழ்வதைப் பயனுள்ளதாக எண்ணாதபடியால், இறைவன் அவர்களைச் செய்யத் தகாதவைகளைச் செய்கின்ற சீர்கெட்ட சிந்தையின் கட்டுப்பாட்டின் கீழ் கைவிட்டார். 29அவர்கள் எல்லாவித அநியாயத்தினாலும் தீமையினாலும் பேராசையினாலும் சீர்கேட்டினாலும் நிறைந்தவர்களாகி, பொறாமையினாலும் கொலையினாலும் சண்டையினாலும் வஞ்சனையினாலும் பகையினாலும் நிறைந்தவர்களானார்கள். 30அவர்கள் அவதூறு பேசுகின்றவர்களாகவும், தூற்றுகின்றவர்களாகவும், இறைவனை வெறுக்கின்றவர்களாகவும், அவமரியாதை செய்கின்றவர்களாகவும், அகந்தை கொண்டவர்களாகவும், பெருமை பேசுகின்றவர்களாகவும், தீமை செய்யும் புதிய வழிகளைக் கண்டுபிடிக்கின்றவர்களாகவும், தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களாகவும், 31உணர்வில்லாதவர்களாகவும், உண்மை இல்லாதவர்களாகவும், அன்பில்லாதவர்களாகவும், ஈவிரக்கம் இல்லாதவர்களாகவும் இருக்கின்றார்கள். 32இப்படிப்பட்டவைகளைச் செய்கின்றவர்கள் மரணத்துக்கே தகுதியானவர்கள் என்ற இறைவனுடைய நீதியான நியமத்தை புரிந்து கொண்டிருந்தாலும்கூட, இவைகளைத் தாங்கள் தொடர்ந்து செய்வது மட்டுமல்லாது, இவைகளைச் செய்கின்றவர்களையும் அங்கீகரித்து ஏற்றுக்கொள்கின்றார்கள்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
ரோமர் 1: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.