வெளிப்படுத்தல் 22
22
வாழ்வு தரும் ஆறு
1பின்பு அந்த இறைதூதன் வாழ்வு தரும் தண்ணீர் ஓடும் ஆற்றை எனக்குக் காட்டினான். அது பளிங்கைப் போல் தெளிவாய் இருந்தது. இறைவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உரிய அரியணையிலிருந்து அது புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. 2அந்தப் பட்டணத்தின் பிரதான வீதியின் நடுவாக அது பாய்ந்து ஓடியது. ஆற்றின் இரு புறமும், மாதம் ஒருமுறை பன்னிரண்டு விதமான பழங்களைக் கொடுக்கும் வாழ்வின் மரம் இருந்தது. அந்த மரத்தின் இலைகள் மக்களுக்கு குணமளிப்பதற்காக அமைந்திருந்தன. 3அங்கே இனி சபிக்கப்பட்ட எதுவும் இருக்காது. இறைவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உரிய அரியணை அந்த நகரத்தில் இருக்கும். இறைவனுடைய ஊழியர்கள் அவருக்குப் பணிவிடை#22:3 பணிவிடை – ஆராதனை செய்வார்கள் என்பதுவும் இதன் பொருள். செய்வார்கள். 4அவருடைய முகத்தை அவர்கள் காண்பார்கள். அவருடைய பெயர் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். 5இனிமேல் இரவு இருக்காது. விளக்கின் வெளிச்சமோ சூரிய வெளிச்சமோ அவர்களுக்குத் தேவைப்படாது. ஏனெனில் இறைவனாகிய கர்த்தர் அவர்களுக்கு ஒளி கொடுப்பார். அவர்கள் என்றென்றுமாய் ஆட்சி செய்வார்கள்.
யோவானும் இறைதூதனும்
6அந்த இறைதூதன் என்னிடம், “இந்த வார்த்தைகள் நம்பத்தகுந்தவையும், உண்மையானவையுமாய் இருக்கின்றன. இறைவாக்கினரின் ஆவிகளுக்கு இறைவனாயிருக்கிற கர்த்தர், விரைவில் நிகழவிருக்கும் காரியங்களைத் தம்முடைய ஊழியர்களுக்குக் காண்பிப்பதற்காகத் தமது இறைதூதனை அனுப்பினார்” என்றான்.
7“இதோ, நான் விரைவில் வருகின்றேன்! இந்தப் புத்தகத்திலுள்ள இறைவாக்கின் வார்த்தைகளைக் கைக்கொள்கின்றவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.”
8யோவானாகிய நானே இதைக் கேட்டுக்கொண்டும் பார்த்துக் கொண்டும் இருந்தேன். நான் கேட்டும் பார்த்தும் முடிந்ததும், இவற்றை எனக்குக் காண்பித்த இறைதூதனை வணங்குவதற்காக அவனுடைய பாதத்தில் விழுந்தேன். 9ஆனால் அவனோ என்னிடம், “இப்படிச் செய்யாதே! உன்னையும், இறைவாக்கினர்களாகிய உன் சகோதரர்களையும், இந்தப் புத்தகத்தின் வார்த்தைகளைக் கைக்கொள்ளுகின்ற எல்லோரையும் போல, நானும் உங்கள் அனைவரோடும்கூட ஒரு சக ஊழியக்காரனாகவே இருக்கின்றேன். ஆகையால், இறைவனையே ஆராதனை செய்வாயாக” என்றான்.
10பின்பு அவன் என்னிடம், “இந்தப் புத்தகத்திலுள்ள இறைவாக்கின் வார்த்தைகளை மூடி முத்திரையிட வேண்டாம். ஏனெனில் காலம் நெருங்கிவிட்டது. 11அநியாயம் செய்கின்றவன் தொடர்ந்து அநியாயம் செய்யட்டும், சீர்கெட்டவன் தொடர்ந்து சீர்கெடட்டும், நியாயம் செய்கின்றவன் தொடர்ந்து நியாயம் செய்யட்டும், பரிசுத்தமாய் இருக்கின்றவன் தொடர்ந்து பரிசுத்தமாய் இருக்கட்டும்.”
அழைப்பும் எச்சரிக்கையும்
12“இதோ, நான் வெகுவிரைவாய் வருகின்றேன்! நான் கொடுக்கும் பரிசு என்னுடனே இருக்கின்றது. அவனவன் செய்த செயலுக்கு ஏற்றபடி அவனவனுக்கு நான் பரிசளிப்பேன். 13நானே அல்பாவும் ஒமேகாவும், முதலாவதானவரும் கடைசியானவரும், தொடக்கமும் முடிவுமாய் இருக்கின்றேன்.
14“வாழ்வு தரும் மரத்தின் பழத்தை உண்ணும் உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கும் வாசல்களின் வழியாக நகரத்திற்குள் செல்வதற்கும் தங்கள் உடைகளைக் கழுவி தூய்மைப்படுத்துகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். 15நாய்களைப் போல்#22:15 நாய்களைப் போல் – இறைவன் அருவருக்கிற காரியங்களைச் செய்கின்றவர்கள் என்பதுவும் இதன் பொருள். சீர்கெட்டவர்களும், மந்திரவித்தைக்காரர்களும், பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவோரும், கொலைகாரர்களும், சிலைகளை வணங்குகின்றவர்களும், பொய்யை நேசித்து பொய்யராய் வாழ்கின்ற அனைவரும் நகரத்திற்கு வெளியே இருப்பார்கள்.
16“இயேசுவாகிய நான் திருச்சபைகளுக்கான இந்தச் சாட்சியை கொடுக்கும்படி என் தூதனை உன்னிடம் அனுப்பினேன். நானே தாவீதின் வேராகவும், சந்ததியாகவும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாக இருக்கின்றேன்.”
17ஆவியானவரும் மணமகளும், “வாரும்!” என்கிறார்கள். அதைக் கேட்கின்றவனும், “வாரும்!” என்று சொல்லட்டும். தாகமாய் இருக்கின்ற எவரும் வரட்டும். விரும்புகின்ற எவரும் வாழ்வு தரும் தண்ணீரை இலவசமாகப் பெற்றுக்கொள்ளட்டும்.
18இந்தப் புத்தகத்திலுள்ள இறைவாக்கு வார்த்தைகளைக் கேட்கும் ஒவ்வொருவருக்கும் நான் கொடுக்கும் எச்சரிக்கை: யாராவது இவற்றோடு எதையாவது சேர்த்தால், இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட வாதைகளை இறைவன் அவனுக்குச் சேர்ப்பார். 19யாராவது இந்த இறைவாக்குப் புத்தகத்தின் வார்த்தைகளில் இருந்து எதையாவது நீக்கிவிட்டால், இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள வாழ்வின் மரத்திலும் பரிசுத்த நகரத்திலும் அவனுக்குள்ள பங்கை இறைவன் நீக்கிவிடுவார்.
20இந்தக் காரியங்களுக்கு சாட்சி கொடுக்கின்றவர், “ஆம், நான் வெகுவிரைவாய் வருகின்றேன்” என்கிறார்.
ஆமென். ஆண்டவர் இயேசுவே வாரும்.
21ஆண்டவர் இயேசுவின் கிருபை இறைவனுடைய மக்களின்மேல் இருப்பதாக. ஆமென்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
வெளிப்படுத்தல் 22: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.