வெளிப்படுத்தல் 18
18
பாபிலோனின் வீழ்ச்சி
1இதற்குப் பின்பு இன்னொரு இறைதூதன் பரலோகத்திலிருந்து இறங்கி வருவதைக் கண்டேன். அவன் மிகுந்த அதிகாரம் உடையவனாயிருந்தான். அவனுடைய மாட்சிமையினால் பூமி பிரகாசமடைந்தது. 2அவன் வல்லமையான குரலிலே சத்தமிட்டுச் சொன்னதாவது:
“ ‘விழுந்தது! விழுந்தது! மாபெரும் பாபிலோன் விழுந்து போயிற்று!’#18:2 ஏசா. 21:9
பிசாசுகளுக்கு அவள் உறைவிடமானாள்.
எல்லாத் தீய ஆவிகளுக்கும் இருப்பிடமானாள்.
அவள் அசுத்தமும் அருவருப்புமான எல்லாப் பறவைகளுக்கும்,
வெறுக்கத்தக்க மிருகங்களுக்கும் புகலிடமானாள்.
3ஏனெனில் எல்லா மக்கள் இனங்களும்
அவளது பாலியல் ஒழுக்கக்கேட்டின் மதுவினால் வெறி கொண்டார்கள்.
பூமியின் அரசர்கள் அவளோடு தகாத உறவு கொண்டார்கள்.
பூமியின் வர்த்தகர்கள் அவளுடைய மிதமிஞ்சிய சுகபோகங்களினால் செல்வந்தர் ஆனார்கள்.”
பாபிலோனின் தண்டனைத்தீர்ப்பிலிருந்து தப்பிக்க எச்சரிக்கை
4பின்பு பரலோகத்திலிருந்து வந்த இன்னுமொரு குரலைக் கேட்டேன், அது சொன்னதாவது:
“ ‘என்னுடைய மக்களே, அவளைவிட்டு வெளியே வாருங்கள்,’#18:4 எரே. 51:45
அப்போது நீங்கள் அவளுடைய பாவங்களில் பங்குகொள்ளாது இருப்பீர்கள்.
அவளுடைய வாதைகளும் உங்களுக்கு வராமலிருக்கும்;
5அவளுடைய பாவங்கள் வானளவு குவிந்திருக்கின்றன.
அவளுடைய குற்றங்களை இறைவன் நினைத்துப் பார்த்திருக்கிறார்.
6அவள் மற்றவர்களுக்குக் கொடுத்தது போல் அவளுக்குத் திருப்பிக் கொடுங்கள்.
அவள் செய்ததற்குப் பதிலாக இரண்டு மடங்காக அவளுக்குச் செய்யுங்கள்.
அவள் கலந்து கொடுத்த கிண்ணத்தில் இரண்டு மடங்காக அவளுக்குக் கலந்து கொடுங்கள்.
7எந்தளவு அவள் தன்னைத் தானே மேன்மைப்படுத்தி சொகுசாக வாழ்ந்தாளோ,
அதேயளவு அவளுக்கு கடும் வேதனையையும் துக்கத்தையும் கொடுங்கள்.
அவள் தன் இருதயத்தில் பெருமிதத்தோடு, ‘நான் அரசியைப் போல் அமர்ந்திருக்கிறேன்,
நான் ஒரு விதவை அல்ல,#18:7 ஏசா. 47:7,8.
நான் ஒருபோதும் துக்கப்படுவதில்லை’
என கூறிக்கொள்கிறாள்.
8ஆகையால் ஒரே நாளிலே, அவளுக்குரிய வாதைகளான
மரணமும் புலம்பலும் பஞ்சமும் அவள் மீது வரும்.
அவள் நெருப்பினால் சுட்டெரிக்கப்படுவாள்.
ஏனெனில், அவளை நியாயம் தீர்க்கின்ற இறைவனாகிய கர்த்தர் வல்லமையானவர்.
பாபிலோனின் வீழ்ச்சி
9“அவளுடன் தகாத உறவுகொண்டு, அவளுடைய சுகபோகத்தில் பங்கு கொண்ட பூமியின் அரசர்கள் அவள் சுட்டெரிக்கப்படுகின்ற புகையைக் கண்டு, அவளுக்காக அழுது புலம்புவார்கள். 10அவளுடைய கடும் வேதனையைக் கண்டு, அவர்கள் பயம் அடைந்தவர்களாய் தொலைதூரத்தில் நின்றபடி,
“ ‘ஐயோ பேரழிவு, மகா நகரமே, ஐயோ பேரழிவு!
பாபிலோனே, வல்லமையான நகரமே!
ஒரு மணி நேரத்தில் உனக்கு அழிவு வந்துவிட்டதே!’
என்று கதறுவார்கள்.
11“அவர்களுடைய வர்த்தகப் பொருட்களை வாங்க இனி யாரும் இல்லாத காரணத்தால், பூமியில் உள்ள வர்த்தகர்கள் அவளுக்காக அழுது புலம்புவார்கள். 12அவர்கள் ஈடுபட்ட வர்த்தகத்தில் தங்கம், வெள்ளி, மாணிக்கக் கற்கள், முத்துக்கள், மென்மையான நாரிழை பட்டு, ஊதாநிறத் துணி, பட்டுத்துணி, சிவப்புத்துணி; பலவித நறுமண மரங்கள், தந்தத்தாலும், விலையுயர்ந்த மரத்தாலும், வெண்கலத்தினாலும், இரும்பினாலும், பளிங்குக் கல்லினாலும் செய்யப்பட்ட பொருட்கள், 13கறுவா, வாசனைப் பொருட்கள், நறுமணத்தூள், வெள்ளைப்போளம், சாம்பிராணி, திராட்சை ரசம், ஒலிவ எண்ணெய், உயர்தர மாவு, கோதுமை, கால்நடைகள், செம்மறியாடுகள், குதிரைகள், வண்டிகள், அடிமைகள் மற்றும் மனித உயிர்கள் என்பன அடங்கியிருந்தன.
14“அவர்கள், ‘நீ ஆசைப்பட்ட கனிகள்#18:14 ஆசைப்பட்ட கனிகள் என்பது சுகபோக பொருட்கள் உன்னைவிட்டுப் போய் விட்டன. உனது சுகபோகமும் மகிமையும் மறைந்து போய் விட்டன. அவை இனியொருபோதும் திரும்பி வராது’ என்று சொல்வார்கள். 15இந்தப் பொருட்களை விற்று அவளிடமிருந்து செல்வத்தைப் பெற்றுக்கொண்ட வர்த்தகர்கள், அவளுடைய வேதனையைப் பார்த்து பயமடைந்தவர்களாக தூரத்திலே நின்று கொண்டிருப்பார்கள். 16அவர்கள் அழுது புலம்பி,
“ ‘ஐயோ பேரழிவு, ஐயோ பேரழிவு மகா நகரமே!
மென்மையான பட்டாடையையும் ஊதாநிறத் துணியையும் சிவப்பு நிறத் துணியையும் அணிந்திருந்தவளே!
தங்கத்தினாலும் மாணிக்கக் கற்களினாலும், முத்துக்களினாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தவளே!
17ஒரு மணி நேரத்திலே இப்பேர்ப்பட்ட பெரும் செல்வம் பாழாய்ப் போனதே!’ ”
என்று கதறுவார்கள்.
“கப்பல் தலைவர்கள் எல்லோரும், கப்பலில் பயணம் செய்கின்ற எல்லோரும், மாலுமிகளும், கடலில் தொழில் செய்கின்ற எல்லோரும் தூரத்தில் நின்று கொண்டிருப்பார்கள். 18அவள் சுட்டெரிக்கப்பட்டு அதனால் எழுகின்ற புகையை அவர்கள் கண்டு, ‘இந்த மகா நகரத்தைப் போல் எப்பொழுதேனும் ஒரு நகரம் இருந்ததோ?’ என்று கதறுவார்கள். 19அவர்கள் தங்கள் தலைகளில் புழுதியை வாரி இறைத்து, அழுது புலம்பி,
“ ‘ஐயோ பேரழிவு! ஐயோ பேரழிவு மகா நகரமே,
கப்பல் உரிமையாளர்கள் எல்லோரும்
அவளுடைய செல்வத்தினால்தானே செல்வந்தர்கள் ஆனார்கள்!
ஒரு மணி நேரத்தில் அவள் பாழாய் போனாளே’
என்று கதறுவார்கள்.
20“பரலோகமே, அவளைக் குறித்து மகிழ்ச்சியடைவாயாக!
பரிசுத்தவான்களே, அப்போஸ்தலர்களே,
இறைவாக்கினரே, நீங்களும் மகிழ்ச்சியடைவீர்களாக!
அவள் உங்களுக்குச் செய்தவற்றுக்காக,
இறைவன் அவளுக்கு நியாயத்தீர்ப்பு கொடுத்து விட்டார்.”
பாபிலோனின் தண்டனை
21அப்போது வல்லமையுள்ள ஒரு இறைதூதன், பெரிய திரிகைக்கல் அளவுடைய ஒரு பாறாங் கல்லை எடுத்து அதைக் கடலில் எறிந்து அவன் சொன்னதாவது:
“இதே போல, மாபெரும் நகரமான பாபிலோன்,
ஆவேசத்துடன் வீசி எறியப்படும்.
இனியொருபோதும் அது காணப்படாமல் போய்விடும்.
22வீணை மீட்டுகின்றவர்களின் இசையும், இசைக் கலைஞர்கள், புல்லாங்குழல் ஊதுகிறவர்கள், எக்காளம் ஊதுகிறவர்கள் ஆகியோரின் இசையும்
இனியொருபோதும் உன்னிடத்தில் ஒலிக்காது.
எத்தொழில் துறையைச் சேர்ந்த எந்த தொழிலாளியும்
இனியொருபோதும் உன்னிடத்தில் காணப்படுவதில்லை.
திரிகைக்கல்லின் சத்தமும்
இனியொருபோதும் உன்னிடத்தில் கேட்காது.
23விளக்கின் வெளிச்சமும்
இனியொருபோதும் உன்னிடத்தில் பிரகாசிக்காது.
மணமகனின் குரலும், மணமகளின் குரலும்
இனியொருபோதும் உன்னிடத்திலே கேட்காது.
உன்னுடைய வர்த்தகர்களே உலகத்தில் முக்கியமானவர்களாக இருந்தார்கள்.
உன்னுடைய மந்திரச் சொற்களினால், எல்லா மக்கள் இனத்தவரும் தவறாக வழிநடத்தப்பட்டார்கள்.
24இறைவாக்கினர்களினதும் பரிசுத்தவான்களினதும் இரத்தமும்,
பூமியிலே கொல்லப்பட்ட எல்லோருடைய இரத்தக் கறையும் அவளிடம் காணப்பட்டது.”
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
வெளிப்படுத்தல் 18: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.