வெளிப்படுத்தல் 16
16
இறைவனின் கோபத்தின் ஏழு கிண்ணங்கள்
1பின்பு, ஆலயத்திலிருந்து வந்த ஒரு குரல் அந்த ஏழு இறைதூதர்களிடம், “போங்கள், இறைவனுடைய கோபத்தின் ஏழு கிண்ணங்களையும் பூமியின் மேல் ஊற்றுங்கள்” என்று உரத்த சத்தமாய் சொல்வதைக் கேட்டேன்.
2முதலாவது இறைதூதன் போய் தனது கிண்ணத்தில் உள்ளதைத் தரையில் ஊற்றினான். அப்போது மிருகத்தின் அடையாளம் உள்ளவர்கள் மேலும் அதன் உருவச் சிலையை வணங்கியவர்கள் மேலும் வேதனை உண்டாக்கும் கொடிய புண்கள் ஏற்பட்டன.
3இரண்டாவது இறைதூதன், தனது கிண்ணத்தில் உள்ளதைக் கடலில் ஊற்றினான். அது இறந்தவனின் இரத்தத்தைப் போல் மாறியது. அப்போது கடலிலுள்ள எல்லா உயிரினங்களும் இறந்து போயின.
4மூன்றாவது இறைதூதன், தனது கிண்ணத்தில் உள்ளதை ஆறுகளிலும் நீரூற்றுகளிலும் ஊற்றினான். அவையெல்லாம் இரத்தமாகின. 5பின்பு தண்ணீருக்குப் பொறுப்பாயிருந்த இறைதூதன் இப்படியாக சொன்னதைக் கேட்டேன். அவன்,
“இருக்கின்றவரும், இருந்தவருமான பரிசுத்தரே!
நீர் நீதியுள்ளவர். நீர் நியாயமுள்ளவராய் இந்த நியாயத்தீர்ப்புகளை வழங்கியிருக்கிறீர்.
6இவர்கள் உமது பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும், இறைவாக்கினரின் இரத்தத்தையும் சிந்தியவர்கள்.
எனவே, நீர் அவர்களுக்கு இரத்தத்தைக் குடிக்கக் கொடுத்தது அவர்களுக்கு ஏற்ற தண்டனையே”
என்றான்.
7அப்போது பலிபீடத்திலிருந்து:
“ஆம், எல்லாம் வல்ல இறைவனாகிய கர்த்தாவே!
உமது நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவை”
என்று பதில் உரைப்பதைக் கேட்டேன்.
8நான்காவது இறைதூதன் தனது கிண்ணத்தில் உள்ளதை சூரியன் மேல் ஊற்றினான். அப்போது மனிதரை நெருப்பினால் சுட்டெரிக்கும் வல்லமை சூரியனுக்குக் கொடுக்கப்பட்டது. 9அந்தக் கடும் வெப்பத்தினால் மக்கள் சுட்டெரிக்கப்பட்டபோது, அவர்கள் இந்த வாதைகளின் மேல் அதிகாரமுள்ள இறைவனின் பெயரை சபித்தார்களே தவிர, மனந்திரும்பி இறைவனுக்கு மகிமையைச் செலுத்த மறுத்தார்கள்.
10ஐந்தாவது இறைதூதன் தனது கிண்ணத்தில் உள்ளதை மிருகத்தின் அரியணையின் மேல் ஊற்றினான். அப்போது அவனுடைய அரசு இருளில் மூழ்கியது. வேதனையினால் மனிதர் தங்கள் நாவுகளைக் கடித்துக் கொண்டார்கள். 11அவர்கள் தங்களுடைய வேதனையின் காரணமாகவும், அவர்களின் புண்களின் காரணமாகவும், பரலோகத்தின் இறைவனை சபித்தார்களே தவிர, தாங்கள் செய்ததைவிட்டு மனந்திரும்ப மறுத்தார்கள்.
12ஆறாவது இறைதூதன் தனது கிண்ணத்தில் உள்ளதை, யூப்பிரட்டீஸ் எனப்பட்ட பெரிய ஆற்றின் மேல் ஊற்றினான். அப்போது கிழக்கிலிருந்து வரும் அரசர்களுக்கு வழியை ஏற்படுத்தும்படி அதன் தண்ணீர் வற்றிப் போயிற்று. 13அதற்குப் பின்பு தவளைகளைப் போல் காணப்பட்ட மூன்று தீய ஆவிகள் வெளிவரக் கண்டேன். அவை அந்த இராட்சதப் பாம்பின் வாயிலிருந்தும், மிருகத்தின் வாயிலிருந்தும், அந்தப் போலி இறைவாக்கினனின் வாயிலிருந்தும் வெளியே வந்தன. 14அவை அற்புத அடையாளங்களைச் செய்து காட்டும் பிசாசுகளின் ஆவிகள். எல்லாம் வல்ல இறைவனுடைய பெரிதான நாளில் அவருக்கு எதிராக நடக்கப் போகும் யுத்தத்திற்காக, உலகம் முழுவதிலுமுள்ள அரசர்களை ஒன்றுசேர்க்கும்படி அவை புறப்பட்டுச் சென்றன.
15“இதோ, நான் ஒரு திருடனைப் போல் வருகின்றேன்! விழிப்புள்ளவனாய் இருந்து, தனது ஆடைகளை அணிய ஆயத்தமாய் வைத்திருக்கின்றவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். அப்போது அவன் நிர்வாணமாய் நடக்காமலும், பகிரங்கமாய் வெட்கத்துக்கு உள்ளாகாமலும் இருப்பான்.”
16அதன்பின்பு, அவை எபிரேய மொழியிலே அர்மகெதோன் என்று அழைக்கப்படும் இடத்திற்கு அரசர்களை ஒன்றுகூட்டிச் சேர்த்தன.
17ஏழாவது இறைதூதன் தனது கிண்ணத்தில் உள்ளதை ஆகாயத்திலே ஊற்றினான். அப்போது ஆலயத்தில், அரியணையிலிருந்து வந்த ஒரு குரல் “செய்தாயிற்று!” என்று உரத்த சத்தமாய் சொல்வதைக் கேட்டேன். 18அப்போது மின்னல்களும் பேரிரைச்சல்களும் இடிமுழக்கங்களும் பெரிய பூமியதிர்ச்சியும் ஏற்பட்டன. மனிதர் பூமியில் தோன்றிய நாள்முதல் அதுபோன்ற பாரிய பூமியதிர்ச்சி ஒருபோதும் ஏற்பட்டதில்லை. அந்த பூமியதிர்ச்சி அவ்வளவு பலமாய் இருந்தது. 19மகா நகரமான பாபிலோன் மூன்று பகுதிகளாகப் பிளவுபட்டது. மற்ற மக்கள் இனங்களின் நகரங்கள் இடிந்து விழுந்தன. இறைவன் மகா பாபிலோனை நினைத்துப் பார்த்தவராய், திராட்சை மது நிரப்பி தம்முடைய கடுங்கோப கிண்ணத்தை அவளுக்குப் பருகக் கொடுத்தார். 20தீவுகள் அனைத்தும் மறைந்து போயின. மலைகள் காணப்படவில்லை. 21வானத்திலிருந்து மிகப் பெரிய ஆலங்கட்டிகள் மனிதர்கள் மேல் வந்து விழுந்தன. அவை ஒவ்வொன்றும் சுமார் நாற்பத்தைந்து கிலோ நிறையுடையதாய் இருந்தது. அந்த ஆலங்கட்டியினால் ஏற்பட்ட வாதையின் காரணமாக மனிதர்கள் இறைவனை நிந்தித்தார்கள். ஏனெனில் அந்த வாதை மிகவும் கொடியதாய் இருந்தது.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
வெளிப்படுத்தல் 16: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.