வெளிப்படுத்தல் 10
10
இறைதூதனும் சிறிய புத்தகச் சுருளும்
1பின்பு வல்லமையுள்ள இன்னொரு இறைதூதன் பரலோகத்திலிருந்து இறங்கி வருவதை நான் கண்டேன். அவன் மேகத்தை உடையாக அணிந்திருந்தான். அவனுடைய தலைக்கு மேலாக ஒரு வானவில் இருந்தது. அவனுடைய முகம் சூரியனைப் போலவும், அவனுடைய கால்கள் நெருப்புத் தூண்களைப் போலவும் இருந்தன. 2அவன் திறக்கப்பட்ட ஒரு சிறிய புத்தகத்தை தனது கையில் வைத்திருந்தான். அவன் தன்னுடைய வலது காலைக் கடலிலும், தன்னுடைய இடது காலைத் தரையிலும் ஊன்றி வைத்தவாறு, 3சிங்கம் கர்ச்சிப்பதைப் போல் உரத்த சத்தமிட்டான். அவன் சத்தமிட்ட போது, ஏழு இடி முழக்கங்களின் குரல்கள் உரைத்தன. 4அந்த ஏழு இடிமுழக்கங்கள் பேசியபோது நான் அவற்றை எழுதுவதற்கு ஆயத்தமானேன். ஆனால் பரலோகத்திலிருந்து ஒரு குரல், “ஏழு இடிமுழக்கங்களும் சொன்னதை முத்திரையிட்டு மறைத்து விடு, அதை எழுத வேண்டாம்” என்று சொன்னதைக் கேட்டேன்.
5பின்பு கடலின் மேலும், தரையின் மேலும் நிற்கின்றவனாக நான் கண்ட அந்த இறைதூதன் தன்னுடைய வலது கையை பரலோகத்தை நோக்கி உயர்த்தி, 6என்றென்றும் வாழ்கின்றவரைக் கொண்டு ஆணையிட்டான். வானங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவரைக் கொண்டு அவன் ஆணையிட்டுச் சொன்னதாவது: “இனிமேல் காலதாமதம் இருக்காது! 7ஏழாவது இறைதூதன் தன்னுடைய எக்காளத்தை ஊதப் போகின்ற நாட்களிலே, இறைவனுடைய மறைபொருள் நிறைவேற்றப்படும். அவர் தம்முடைய ஊழியர்களாகிய இறைவாக்கினருக்கு அறிவித்தபடியே அவை நிறைவேறும்” என்றான்.
8பின்பு பரலோகத்திலிருந்து நான் கேட்ட அந்தக் குரல், இன்னொரு முறை என்னுடனே பேசியது: “போ, கடலின் மேலும், தரையின் மேலும் நின்று கொண்டிருக்கின்ற அந்த இறைதூதனுடைய கையில் திறக்கப்பட்டு இருக்கின்ற அந்தப் புத்தகச் சுருளை எடுத்துக்கொள்” என்றது.
9எனவே, நான் அந்த இறைதூதனிடம் போய், அந்தச் சிறிய புத்தகச் சுருளை எனக்குத் தரும்படி அவனிடம் கேட்டேன். அவன் என்னிடம், “நீ இதை எடுத்து உண்பாயாக. இது உன் வயிற்றில் கசப்பை ஏற்படுத்தும். ஆனால் உன் வாய்க்கு இது தேன் போல் இனிமையாயிருக்கும்”#10:9 எசே. 3:3 என்றான். 10நான் அந்த இறைதூதனுடைய கையிலிருந்து அந்தச் சிறிய புத்தகச் சுருளை எடுத்து, அதை உண்டேன். அது என் வாய்க்கு, தேன் போல் இனிமையான சுவையைக் கொடுத்தது. ஆனால் அதை நான் உண்டு முடித்த போதோ, அது என்னுடைய வயிற்றில் கசப்பை ஏற்படுத்தியது. 11அப்போது, “பல மக்களைக் குறித்தும், பல மக்கள் இனங்களைக் குறித்தும், மொழியினரைக் குறித்தும், அரசர்களைக் குறித்தும் நீ மீண்டும் இறைவாக்கு உரைக்க வேண்டும்” என்று எனக்குச் சொல்லப்பட்டது.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
வெளிப்படுத்தல் 10: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.