மாற்கு 3

3
இயேசு யூதருடைய ஓய்வுநாளில் குணமாக்குதல்
1இயேசு மறுபடியும் ஜெபஆலயத்திற்குள் சென்றார். அங்கு ஊனமுற்ற கையுடைய ஒருவன் இருந்தான். 2இயேசுவைக் குற்றம் சாட்டுவதற்கான ஒரு ஆதாரத்தைத் தேடிக் கொண்டிருந்த சிலர், ஓய்வுநாளிலே அவர் அவனைக் குணமாக்குவாரோ என்று அவரைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். 3இயேசு ஊனமுற்ற கையுடைய அந்த மனிதனிடம், “எல்லோருக்கும் முன்பாக நீ எழுந்து நில்” என்றார்.
4பின்பு இயேசு அவர்களிடம், “நீதிச்சட்டத்தின்படி ஓய்வுநாளில் செய்யத் தகுந்தது எது? நன்மை செய்வதா அல்லது தீமை செய்வதா, ஒரு உயிரைக் காப்பாற்றுவதா அல்லது உயிரை அழிப்பதா?” என்று கேட்டார். அவர்களோ, ஒன்றும் பேசாமல் இருந்தார்கள்.
5அவர்களை அவர் கோபத்துடன் பார்த்து, அவர்களுடைய கடின இருதயத்தின் காரணமாக மனம் வருந்தினார். பின்பு அந்த மனிதனைப் பார்த்து, “உன் கையை நீட்டு” என்றார். அவனும் தன் கையை நீட்டினான். அது முற்றிலும் குணமாகியது. 6அப்போது பரிசேயர்கள் வெளியே போய், அவரைக் கொலை செய்வதற்கு, ஏரோதியர்களுடனே#3:6 ஏரோதியர்களுடனே – ஏரோது ராஜவம்சத்தின் யூத ஆதரவாளர்கள் என கருதப்பட்டனர். சதித் திட்டம் தீட்டத் தொடங்கினார்கள்.
மக்கள் கூட்டம் இயேசுவைப் பின்பற்றுதல்
7இயேசு தம்முடைய சீடர்களுடனே புறப்பட்டு, கடலோரமாகச் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள். 8அவர் செய்த எல்லாவற்றையும் கேள்விப்பட்டு, அநேக மக்கள் யூதேயா, எருசலேம், இதுமேயா ஆகிய இடங்களிலிருந்தும், யோர்தான் ஆற்றுக்கு அப்பாலுள்ள பிரதேசத்திலிருந்தும், தீரு, சீதோன் பட்டணங்களின் சுற்றுப்புறங்களிலிருந்தும் அவரிடம் வந்தார்கள். 9மக்கள் பெருங்கூட்டமாய் கூடியிருந்தபடியால், அவர்கள் தம்மை நெருக்காதபடி தமக்கென்று ஒரு படகை ஆயத்தம் செய்யும்படி, அவர் தமது சீடருக்குச் சொன்னார். 10அநேகரை அவர் குணமாக்கியபடியால், வியாதிப்பட்டிருந்தவர்கள் அவரைத் தொடுவதற்காக, முன்னே நெருக்கிக்கொண்டு வந்தார்கள். 11தீய ஆவி பிடித்திருந்தவர்கள் அவரைக் கண்டபோது அவருக்கு முன்பாகக் கீழே விழுந்து, “நீர் இறைவனின் மகன்” என்று சத்தமிட்டார்கள். 12ஆனால் அவரோ தான் யார் என்பதைச் சொல்லாதிருக்கும்படி அவைகளுக்குக் கண்டிப்பாகக் கட்டளையிட்டார்.
இயேசு அப்போஸ்தலர்களை நியமித்தல்
13பின்பு இயேசு ஒரு மலையின்மேல் ஏறிப் போய், தாம் விரும்பியவர்களை தம்மிடம் வரும்படி அழைத்தார்; அவர்கள் அவரிடம் வந்தார்கள். 14இயேசு பன்னிரண்டு பேரை நியமித்து, அவர்களை அப்போஸ்தலர்கள் என அழைத்தார்; தம்முடனேகூட அவர்கள் இருப்பதற்காகவும், நற்செய்தி அறிவிக்கும்படி தாம் அவர்களை அனுப்புவதற்காகவும், 15பேய்களைத் துரத்தும் அதிகாரத்தை அவர்கள் கொண்டிருப்பதற்காகவும் அவர்களை நியமித்தார்.
16அவர் நியமித்த பன்னிரண்டு பேர்களும் இவர்களே:
சீமோன், இவனுக்கு அவர் பேதுரு எனப் பெயரிட்டார்;
17செபெதேயுவின் மகன் யாக்கோபு, அவனுடைய சகோதரன் யோவான் இவர்கள் இருவருக்கும் பொவனெர்கேஸ் என்று பெயரிட்டார், “இடிமுழக்கத்தின் மகன்கள்” என்பதே அதனுடைய அர்த்தமாகும்,
18அந்திரேயா,
பிலிப்பு,
பர்த்தொலொமேயு,
மத்தேயு,
தோமா,
அல்பேயுவின் மகன் யாக்கோபு,
ததேயு,
கானானியனாகிய சீமோன்,#3:18 கானானியனாகிய சீமோன் – யூத தேசியவாதிக்கு பயன்படுத்தும் அராமிய மொழியின் சொல்
19மற்றும் இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் ஸ்காரியோத்து.
இயேசுவும் பெயல்செபூலும்
20பின்பு இயேசு, ஒரு வீட்டுக்குள் போனார்; மக்கள் திரும்பவும் பெருங்கூட்டமாய் அங்கு வந்தார்கள். அதனால் அவருக்கும் அவருடைய சீடர்களுக்கும் உண்பதற்குக்கூட முடியாதிருந்தது. 21அவருடைய குடும்பத்தார் இதைப்பற்றிக் கேள்விப்பட்டபோது, “அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது” என்று சொல்லி, அவரைப் பிடித்துக் கொண்டுவர அங்கே போனார்கள்.
22எருசலேமிலிருந்து வந்த நீதிச்சட்ட ஆசிரியர்கள், “இவனைப் பெயெல்செபூல் பிடித்திருக்கிறது, பேய்களின் தலைவனாலேயே இவன் பேய்களைத் துரத்துகிறான்” என்றார்கள்.
23எனவே இயேசு அவர்களை அழைத்து, அவர்களோடு உவமைகள் மூலமாய் பேசினார்: “சாத்தானால் எப்படி சாத்தானை துரத்த முடியும்? 24ஒரு அரசு தனக்குத்தானே விரோதமாய் பிளவுபடுமானால், அந்த அரசு நிலைபெறாது. 25ஒரு குடும்பம் தனக்குத்தானே விரோதமாய் பிளவுபடுமானால் அந்தக் குடும்பம் நிலைபெறாது. 26எனவே சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழுந்து பிளவுபட்டால், அவனால் நிலைத்துநிற்க முடியாது; அவனது முடிவு வந்து விடும். 27முதலில் பலமுள்ள ஒருவனைக் கட்டிப் போடாமல் அந்த பலமுள்ளவனுடைய வீட்டிற்குள் புகுந்து அவனுடைய உடைமைகளை எவராலும் கொள்ளையிட முடியாது. அவனைக் கட்டிப் போட்ட பின்பே, அவனுடைய வீட்டைக் கொள்ளையிட முடியும். 28நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், மனிதர்களுடைய எல்லாப் பாவங்களும், அவர்கள் பேசும் எல்லா இறை நிந்தனைகளும் அவர்களுக்கு மன்னிக்கப்படும். 29ஆனால் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராகப் பேசப்படுகின்ற இறை நிந்தனைக்கோ ஒருபோதும் மன்னிப்பு கிடையாது. அவன் நித்தியமான பாவத்தைச் செய்த குற்றவாளியாகிறான்.”
30“தீய ஆவி அவரைப் பிடித்திருக்கிறது” என்று அவர்கள் சொன்னதனாலேயே, அவர் இப்படிச் சொன்னார்.
31அப்போது இயேசுவின் தாயும் அவருடைய சகோதரர்களும் அங்கு வந்தார்கள். அவர்கள் வெளியே நின்று, அவரை அழைத்து வர ஆளனுப்பினார்கள். 32மக்கள் பெருங்கூட்டமாய் அவரைச் சுற்றியிருந்தார்கள். போனவர்கள் அவரிடம், “உம்முடைய தாயும், உம்முடைய சகோதரர்களும் உம்மைக் காண வெளியே நிற்கிறார்கள்” என்றார்கள்.
33அதற்கு இயேசு அவர்களிடம், “யார் என்னுடைய தாய், யார் என்னுடைய சகோதரர்கள்?” என்று கேட்டார்.
34பின்பு, அவர் தம்மைச் சூழ்ந்து உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து, “இதோ! என் தாயும், என் சகோதரர்களும் இவர்களே! 35இறைவனுடைய விருப்பத்தைச் செய்கின்றவர்களே என் சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கின்றார்கள்” என்றார்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

மாற்கு 3: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

மாற்கு 3 க்கான வீடியோக்கள்