மாற்கு 4

4
விதை விதைக்கிறவனைப் பற்றிய உவமை
1திரும்பவும் இயேசு கடலோரத்திலிருந்து போதிக்கத் தொடங்கினார். அவரிடத்தில் மக்கள் பெருங்கூட்டமாய் திரண்டிருந்தபடியால், அவர் கடலில் நிறுத்தப்பட்டிருந்த படகொன்றில் ஏறி அதில் உட்கார்ந்தார். மக்களோ கடலோரமாய் நின்றார்கள். 2அவர் பல காரியங்களை அவர்களுக்கு உவமைகள் மூலமாக போதித்தார். அவர் கற்பித்தபோது அவர்களுக்குச் சொன்னதாவது: 3“கேளுங்கள்! ஒரு விவசாயி விதைகளை விதைப்பதற்குச் சென்றான். 4அவன் விதைகளைத் தூவி விதைக்கையில், சில விதைகள் பாதையருகே விழுந்தன; பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டன. 5சில விதைகள் மண் அதிகமாய் இல்லாத கற்பாறையான இடங்களில் விழுந்தன; மண் ஆழமாக இராததால் அவை விரைவாக முளைத்தன. 6ஆனால் வெயில் அதிகமானபோது பயிர்கள் வாடிப் போயின; வேர் இல்லாததனாலே, அவை காய்ந்து போயின. 7வேறு சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன, முட்செடிகள் வளர்ந்து பயிர்களை நெருக்கிப் போட்டன. அதனால், அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை. 8வேறு சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன; அவை முளைவிட்டு வளர்ந்து, முப்பது மடங்காகவும் அறுபது மடங்காகவும் நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன” என்றார்.
9பின்பு இயேசு, “காதுள்ள ஒவ்வொருவனும் கேட்டுப் புரிந்துகொள்ளட்டும்” என்று கூறினார்.
10அவர் தனிமையாய் இருந்தபோது, அந்த பன்னிரண்டு பேரும் அவருடன் இருந்த மற்றவர்களும் அந்த உவமையைக் குறித்த விளக்கத்தைக் கேட்டார்கள். 11அவர் அவர்களிடம், “இறைவனுடைய அரசின் இரகசியம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வெளியில் இருக்கின்றவர்களுக்கோ எல்லா காரியங்களும் உவமைகளாகவே சொல்லப்படுகின்றன. 12இதனால்,
“ ‘அவர்கள் எப்போதும் காண்பார்கள், ஒருபோதும் அறிந்துகொள்ள மாட்டார்கள்;
அவர்கள் எப்போதும் கேட்பார்கள், ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டார்கள்;
இல்லாவிட்டால் அவர்கள் இறைவனிடம் திரும்பி மன்னிப்பைப் பெறுவார்களே’ ”#4:12 ஏசா. 6:9,10
என்றார்.
13பின்பு இயேசு அவர்களிடம், “இந்த உவமை உங்களுக்கு விளங்கவில்லையா? அப்படியானால், மற்ற உவமைகளையெல்லாம் எப்படி விளங்கிக்கொள்வீர்கள்?” என்று கேட்டார். 14“விவசாயி வார்த்தையை விதைக்கிறவர். 15சில மக்கள் பாதையருகே விதைகள் விழுந்ததைப் போன்றவர்கள். இவர்கள் வார்த்தையைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களில் விதைக்கப்பட்ட வார்த்தைகளை எடுத்துப் போடுகிறான். 16கற்பாறையின் மேல் விதைகள் விதைக்கப்பட்டதற்கு ஒப்பாயிருக்கும் மற்றவர்களோ வார்த்தையைக் கேட்டு அதை உடனே மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றார்கள். 17ஆனால் வேரில்லாததால், அவர்கள் கொஞ்சக் காலம் மட்டுமே நிலைத்திருக்கிறார்கள். வார்த்தையின் பொருட்டு கஷ்டமும் துன்பமும் வரும்போது, அவர்கள் விரைவாய் விழுந்து போகின்றார்கள். 18முட்செடிகளுக்குள் விதைகள் விதைக்கப்பட்டதற்கு ஒப்பான மற்றவர்களோ வார்த்தையைக் கேட்கின்றார்கள். 19ஆயினும் இந்த உலகத்திற்குரிய கவலைகளும் செல்வத்தின் போலியான கவர்ச்சிகளும் இன்னும் வேறு காரியங்களின் ஆசைகளும் உள்ளே வந்து வார்த்தையை நெருக்கிப் போடுகின்றன. இதனால் அது பலனற்றுப் போய் விடுகிறது. 20விதை விதைக்கப்பட்ட நல்ல நிலத்திற்கு ஒப்பான மற்றவர்களோ வார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக்கொள்கின்றவர்கள்; அவர்கள் முப்பது மடங்காகவும் அறுபது மடங்காகவும் நூறு மடங்காகவும் விளைச்சலை கொடுக்கின்றார்கள்” என்றார்.
தாங்கியின் மேல் விளக்கு
21மேலும் அவர் அவர்களிடம், “ஒரு விளக்கைக் கொண்டுவந்து, அதை ஒரு பாத்திரத்தினால் மூடியோ அல்லது ஒரு கட்டிலின் கீழ் மறைத்தோ வைப்பார்களா? இல்லையே, அதை விளக்குத் தண்டின் மேல்தானே வைப்பார்கள்? 22ஒளித்து வைக்கப்பட்டவை யாவும் வெளியில் தெரிய வரும், மறைத்து வைக்கப்பட்டவை அனைத்தும் பகிரங்கமாகும். 23காதுள்ள ஒவ்வொருவனும் கேட்டுப் புரிந்துகொள்ளட்டும்” என்றார்.
24அவர் தொடர்ந்தும்: “நீங்கள் கேட்கும் காரியங்களை கவனமாய் யோசியுங்கள். நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். அப்போது கேட்கின்ற உங்களுக்கு அதிகமாகவும் கொடுக்கப்படும். 25இருக்கின்றவனுக்கு மேலும் கொடுக்கப்படும்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்” என்றார்.
வளரும் விதையின் உவமை
26மேலும் அவர் சொன்னதாவது: “இறைவனுடைய அரசானது ஒருவர் நிலத்தில் விதைகளை விதைப்பதற்கு ஒப்பாயிருக்கிறது. 27அவன் இரவு வேளைகளில் நித்திரைகொண்டு பகல் வேளைகளில் விழித்தெழும்பும்போது, அவனுக்கே தெரியாமல் அந்த விதை முளைவிட்டு வளருகிறது. 28மண் தானாகவே பலன் கொடுத்து, முதலில் பயிரையும் பின்பு கதிரையும், அதன்பின் கதிரிலே நிறைந்த தானியத்தையும் கொடுக்கின்றது. 29பயிர் விளைந்து அறுவடைக் காலம் வந்தவுடன், விதைத்தவன் அதன்மீது அரிவாளை வைக்கிறான்.”
கடுகு விதையின் உவமை
30திரும்பவும் அவர்: “இறைவனுடைய அரசை நாம் எதற்கு ஒப்பிட்டுச் சொல்வோம், எந்த உவமையினால் அதை விபரித்துக் கூறுவோம்? 31அது கடுகு விதையைப் போன்றது. அது பூமியிலுள்ள எல்லா விதைகளிலும் சிறியதாக இருக்கின்றது. 32இருந்தாலும், அது விதைக்கப்பட்டு, முளைத்து, தோட்டத்திலுள்ள மற்ற எல்லாச் செடிகளைப் பார்க்கிலும் பெரியதாய் வளர்கிறது. அதனால், ஆகாயத்துப் பறவைகள் அதன் நிழலில் வந்து தங்கக் கூடிய அளவுக்குப் பெரியதான கிளைகளையும் விடுகிறது” என்றார்.
33அவர்கள் கேட்டு விளங்கக் கூடிய அளவுக்கு இயேசு இதேவிதமான பல உவமைகள் மூலமாக அவர்களுக்கு வார்த்தையைப் போதித்தார். 34உவமைகளைப் பயன்படுத்தாமல் அவர் அவர்களுடன் எதையுமே பேசவில்லை. ஆனால் அவர் தம்முடைய சீடர்களுடன் தனித்திருந்தபோது அவர்களுக்கு எல்லாவற்றையும் தெளிவுபடுத்தினார்.
இயேசு புயலை அடக்குதல்
35அன்று மாலை வேளையானபோது, அவர் தம்முடைய சீடர்களிடம், “நாம் மறுகரைக்குப் போவோம்” என்றார். 36அவர்கள் மக்களை அனுப்பிவிட்டு அவர் இருந்த படகில் இருந்தவண்ணமாகவே அவரைத் தங்களுடன் அழைத்துக்கொண்டு போனார்கள். அவருடன் வேறு சில படகுகளும் சென்றன. 37அப்போது பலத்த புயல் காற்று உண்டாகி, அலைகள் படகின் மேல் மோதின. அதனால் படகு மூழ்கத் தொடங்கியது. 38இயேசுவோ படகின் பின்பகுதியில் ஒரு தலையணையை வைத்து நித்திரை செய்து கொண்டிருந்தார். சீடர்கள் அவரை எழுப்பி அவரிடம், “போதகரே! நாங்கள் மூழ்கப் போகின்றோம், அதைப்பற்றி உமக்குக் கவலையில்லையா?” என்றார்கள்.
39அவர் விழித்தெழுந்து, காற்றைக் கடிந்து கொண்டார். கடலைப் பார்த்து, “அமைதியாயிரு! இரையாதே” என்றார். அப்போது காற்று அடங்கி, மிகுந்த அமைதி உண்டாயிற்று.
40அவர் தமது சீடர்களிடம், “நீங்கள் ஏன் இந்தளவு பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் விசுவாசம் இல்லையா?” என்றார்.
41அப்போது அவர்கள் பயமடைந்து, “இவர் யாரோ? காற்றும் கடலும்கூட இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே?” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டார்கள்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

மாற்கு 4: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

மாற்கு 4 க்கான வீடியோக்கள்