எபிரேயர் 9
9
இவ்வுலகிற்குரிய கூடாரத்தில் வழிபாடு
1அந்த முதலாம் உடன்படிக்கைக்கென பிரத்தியேகமான இறைவழிபாட்டு முறைமைகளும் இந்த உலகத்தில் அதற்கென்று ஒரு பரிசுத்த இடமும் இருந்தன. 2அங்கே இரு பகுதிகளைக் கொண்ட ஒரு கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் முன் பகுதி பரிசுத்த இடம் என்று அழைக்கப்பட்டது. அதனுள்ளேயே குத்துவிளக்கும், மேசையும், அதன்மீது படைக்கப்பட்ட விசேட அப்பங்களும் இருந்தன. 3அங்கிருந்த இரண்டாவது திரைக்குப்#9:3 இரண்டாவது திரைக்கு – அங்கிருந்த முதலாவது திரை, கூடாரத்தின் வாசலில் இருந்தது. பின்னால் மகா பரிசுத்த இடம் என்று அழைக்கப்பட்ட மற்றைய பகுதி இருந்தது. 4அங்கே தங்கத்தால் செய்யப்பட்ட தூபபீடமும், தங்கத்தால் மூடப்பட்ட உடன்படிக்கைப் பெட்டகமும் இருந்தன. இந்தப் பெட்டகத்தினுள்ளே மன்னா உணவு வைக்கப்பட்ட தங்கச் சாடியும், ஆரோனின் தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும்#9:4 கற்பலகைகளும் என்பது பத்துக்கட்டளை எழுதப்பட்டவைகள் வைக்கப்பட்டிருந்தன. 5அந்த பெட்டகத்தின் மேலாக மகிமையின் கேரூபீன்கள்#9:5 கேரூபீன்கள் – தங்கத்தினால் செய்யப்பட்ட இறக்கைகளைக் கொண்ட சிற்பத்தைக் குறிக்கிறது. கிருபையின் ஆசனத்தை#9:5 கிருபையின் ஆசனத்தை – பாவம் மன்னிக்கப்படுகிற இடத்தைக் குறிக்கிறது. நிழலிட்டுக் கொண்டிருந்தன. ஆனால் இவை எல்லாவற்றையும் விரிவாய் சொல்ல இப்போது இயலாது.
6இவ்விதமாக அங்குள்ள பொருட்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த போது, மதகுருக்கள் தங்களுடைய ஊழியத்தை செய்வதற்காக அந்த வெளியறைக்குள் வழக்கமாக செல்வார்கள். 7ஆனால் மகா பரிசுத்த இடமான உள்அறைக்குள்ளே தலைமை மதகுரு மாத்திரம், அதுவும் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் செல்வார். பலிகளின் இரத்தத்தை எடுத்துச் செல்லாமல் அவர் அதற்குள் போகவே முடியாது. இப்படியாக எடுத்துச் சென்று தனக்காகவும், மக்கள் அறியாமல் செய்த பாவங்களுக்காகவும் அவர் அதைச் செலுத்துவார். 8முன்மாதிரியாக முதல் வந்த இறைபிரசன்னக் கூடாரம் இருக்கும் வரைக்கும் மகா பரிசுத்த இடத்திற்கான வழி இன்னும் திறக்கப்படவில்லை என்பதை பரிசுத்த ஆவியானவர் இதன் மூலமாக காண்பிக்கிறார். 9இந்தக் கூடாரம் தற்காலத்தைக் குறிப்பிட்டுக் காண்பிக்கின்ற ஒரு மாதிரியே. செலுத்தப்பட்ட காணிக்கைகளும், பலிகளும் வழிபடுகின்றவர்களின் மனசாட்சியை தூய்மையடையச் செய்ய இயலாதவை என்பதையே இவை தெளிவுபடுத்துகின்றன. 10இவை உண்பது பற்றியும், குடிப்பது பற்றியும், பல்வேறுபட்ட பாரம்பரிய சுத்திகரிப்புகள் பற்றியும் கொடுக்கப்பட்ட சரீரத்திக்கேற்ற சடங்கு விதிமுறைகளே. புதிய முறை ஏற்படுத்தப்படும் காலம் வரைக்குமே இவை செல்லுபடியானதாய் இருந்தன.
கிறிஸ்துவின் இரத்தம்
11இப்போது நமக்குக் கிடைக்கப் பெற்றுள்ள பெருநன்மைகளை அருளுகின்ற தலைமை மதகுருவாய் கிறிஸ்து வருகை தந்தபோது, அவர் மனிதனின் கரங்களினால் செய்யப்படாத அதாவது இவ்வுலகப் படைப்பின் ஒரு பகுதியாய் இல்லாத மேலானதும் நிறைவானதுமான இறைபிரசன்னக் கூடாரத்தின் ஊடாகவே சென்றார். 12அவர் முதலும் முடிவுமாக ஒரே தடவை மகா பரிசுத்த இடத்திற்குள் பிரவேசித்து வெள்ளாடுகள், இளங்காளைகள் ஆகியவற்றின் இரத்தத்தினால் அன்றி, தமது சொந்த இரத்தத்தினாலேயே இவ்வாறாக நித்திய மீட்பை நமக்காகப் பெற்றுக் கொடுத்தார். 13வெள்ளாடுகள், காளைகள் ஆகியவற்றின் இரத்தம், சடங்கு முறைப்படி அசுத்தமாயிருந்தவர்கள்மீது தெளிக்கப்பட்டது. எரிக்கப்பட்ட இளம் பசுவின் சாம்பலும் அவர்கள்மீது தூவப்பட்டது. இது அவர்களை வெளி அசுத்தத்திலிருந்து சுத்திகரித்தது. 14அப்படியானால், தம்மைத் தாமே நித்திய ஆவியானவர் மூலமாக, இறைவனுக்கு மாசற்றவராய் ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவின் இரத்தம் எவ்வளவு அதிகமாக நம்முடைய மனசாட்சிகளை மரணித்த செயல்களிலிருந்து தூய்மைப்படுத்தி, வாழும் இறைவனை நாம் ஆராதித்து, அவருக்குப் பணி செய்யக் கூடியவர்களாக்கும்.
15இவ்வாறு முதலாவது உடன்படிக்கையின் கீழிருந்தபோது, மக்கள் செய்த பாவங்களிலிருந்து அவர்களை மீட்கின்ற பலியாக இயேசுவின் மரணம் நிறைவேறியது. இதனூடாக அழைக்கப்பட்டவர்கள் எல்லோரும் இறைவனால் வாக்குறுதியளிக்கப்பட்ட நித்தியமான உரிமைச் சொத்தைப் பெற்றுக்கொள்ளும்படி, அவர் ஒரு புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இருக்கின்றார்.
16ஒரு சட்டபூர்வ கடைசி விருப்பப் பத்திரத்தைப்#9:16 விருப்பப் பத்திரத்தை – கிரேக்க மொழியில், உயில் அல்லது மரண சாசனம் என்று பொருள் பொறுத்தவரையில், அதை ஏற்படுத்தியவர் இறந்துவிட்டார் என்பதை நிரூபிப்பது அவசியமாகும். 17அதை எழுதியவர் உயிரோடிருக்கும் வரை அது நடைமுறைக்கு வருவதில்லை; அவர் இறந்த பின்பே அது நடைமுறைக்கு வரும். 18இதனாலேயே முதல் உடன்படிக்கையும் இரத்தம் சிந்துதல்#9:18 இரத்தம் சிந்துதல் – இது பலி மரணித்துவிட்டது என்பதை உறுதிப்படுத்தியது. இல்லாமல் செயற்படுத்தப்படவில்லை. 19முதல் உடன்படிக்கை அறிமுகம் செய்யப்பட்டபோது மோசே எல்லாக் கட்டளைகளையும் இஸ்ரயேல் மக்களுக்கு அறிவித்தார். அதற்குப் பின்பு அவர் இளங்காளைகள், வெள்ளாடுகள் ஆகியவற்றின் இரத்தத்தைத் தண்ணீருடன் கலந்து, அதை சிவப்புக் கம்பளித் துணியையும் ஈசோப்பு செடியையும்கொண்டு, அந்தப் புத்தகச் சுருளின் மேலும் எல்லா மக்களின் மேலும் தெளித்தார். 20தெளிக்கையில் அவர், “நீங்கள் கைக்கொள்ளும்படி, இறைவன் கட்டளையிட்டுக் கொடுத்த உடன்படிக்கையின் இரத்தம் இதுவே”#9:20 யாத். 24:8 என்று சொன்னார். 21அவ்விதமாகவே மோசே அந்த இரத்தத்தை இறைபிரசன்னக் கூடாரத்தின் மேலும் அதன் வழிபாட்டில் உபயோகிக்கப்பட்ட எல்லாவற்றின் மேலும் தெளித்தார். 22உண்மையாகவே, நீதிச்சட்டத்தின்படி எல்லாமே இரத்தம் சிந்துதலால் சுத்திகரிக்கப்பட வேண்டும். அதன்படி, இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவங்களுக்கு மன்னிப்பே இல்லை.
23உலகில் இருந்த பரலோகக் காரியங்களின் நகல்களை இவ்விதமாய் பலிகளினால் சுத்திகரிப்பது அவசியமாயிருந்தது என்றால், பரலோகத்தில் அசலாக இருப்பது இதைவிட அதிமேன்மையான பலிகளினாலே சுத்திகரிக்கப்பட வேண்டும் அல்லவா? 24உண்மையான இடத்தை ஒத்திருந்ததும், வெறும் நகலானதுமான மனித கைகளால் செய்யப்பட்ட ஒரு பரிசுத்த இடத்துக்குள் கிறிஸ்து செல்லவில்லை. மாறாக அவர் இறைவனின் முன்னிலையில் எமது சார்பாக தோன்றுவதற்காக இப்போது பரலோகத்திற்கு உள்ளேயே பிரவேசித்துவிட்டார். 25தலைமை மதகுரு, ஒவ்வொரு வருடமும் மிருகங்களின் இரத்தத்தோடு மகா பரிசுத்த இடத்திற்குள் செல்வது போல கிறிஸ்துவும் திரும்பத் திரும்ப தம்மை பலியாகச் செலுத்தும்படி பரலோகத்திற்குள் பிரவேசிக்க வேண்டிய அவசியமில்லை. 26அப்படியிருக்குமானால் உலகம் படைக்கப்பட்டதிலிருந்து கிறிஸ்து அநேக தடவைகள் இப்படியாக பாடு அனுபவிக்க வேண்டியிருந்திருக்கும். ஆனால் அவரோ, இப்போது எல்லா யுகங்களும் முடிவுறும் காலத்தில் தம்மைத் தாமே பலியாகச் செலுத்துவதன் மூலமாய், பாவத்தை நீக்கும்படி முதலும் முடிவுமான ஒரே தடவை தோன்றியிருக்கிறார். 27ஒரு தடவை இறப்பதும், பின்பு நியாயத்தீர்ப்புக்கு உள்ளாவதும் மனிதனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. 28அவ்விதமாக அநேக மக்களுடைய பாவங்களை நீக்கும்படியாக கிறிஸ்துவும் ஒரு தடவை பலியாகச் செலுத்தப்பட்டார். அவர் இரண்டாம் தடவை வரவிருக்கிறார், ஆனால் மீண்டும் பாவத்தைச் சுமக்கும்படியாக அன்றி, அவருக்காகக் காத்திருப்போருக்கு இரட்சிப்பைக் கொண்டுவருவதற்காகவே அவர் வருவார்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
எபிரேயர் 9: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.