எபிரேயர் 8
8
புதிய உடன்படிக்கையின் தலைமை மதகுரு
1இவ்வாறான ஒரு தலைமை மதகுரு ஒருவர் நமக்கு இருக்கின்றார் என்பதே நாங்கள் சொல்கின்றதான முக்கியமான கருத்து. அவர் பரலோகத்தில் உன்னதமான இறைவனுடைய அரியணையின் வலது பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். 2கிறிஸ்துவாகிய இவர், அங்கே பரலோகத்திலுள்ள பரிசுத்த இடத்தில் ஊழியம் செய்கின்றார். அது கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட உண்மையான இறைபிரசன்னக் கூடாரம். அது மனிதரால் ஏற்படுத்தப்பட்டதல்ல.
3காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காகவே, ஒவ்வொரு தலைமை மதகுருவும் நியமிக்கப்படுகிறான். எனவே இயேசுவும் இப்படியாக இறைவனுக்கு அளிக்கும்படி ஏதோ ஒன்றைத் தம்மிடத்தில் வைத்திருக்க வேண்டியிருந்தது. 4அவர் பூமியில் இருந்திருந்தால் ஒரு மதகுருவாய் இருந்திருக்க மாட்டார். ஏனெனில், நீதிச்சட்டத்தில் குறிப்பிட்டிருக்கின்றபடி காணிக்கைகளைச் செலுத்துகின்ற மதகுருக்கள் ஏற்கெனவே பூமியில் இருக்கின்றார்கள். 5ஆனால் அவர்கள் பூமியில் இருக்கின்ற ஒரு பரிசுத்த இடத்திலேயே பணி செய்கின்றார்கள். அது பரலோகத்தில் உள்ள உண்மையான பரிசுத்த இடத்தின் மாதிரியும் நிழலும் மட்டுமே. இதனாலேயே மோசே அந்த இறைபிரசன்னக் கூடாரத்தை அமைக்கத் தொடங்கும் முன்னர் இறைவன் அவரிடம், “மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட அந்த மாதிரியின்படியே எல்லாவற்றையும் செய்யும்படி நீ கவனமாயிரு”#8:5 யாத். 25:40 என்று எச்சரிக்கை கொடுத்தார். 6முன்னைய காலத்தில் மதகுருக்கள் செய்த ஊழியத்தைவிட இயேசு பெற்றுக்கொண்ட ஊழியம் மிக உயர்ந்தது. ஏனெனில், இயேசுவை நடுவராகக் கொண்ட புதிய உடன்படிக்கை, மேன்மையான வாக்குறுதிகளைக்கொண்டு ஏற்படுத்தப்பட்டது. அதனால், அது பழைய உடன்படிக்கையைப் பார்க்கிலும் சிறந்ததாயிருக்கிறது.
7ஆகவே முதலாவது உடன்படிக்கையானது குறையற்றதாய் இருந்திருந்தால், இரண்டாவது உடன்படிக்கை ஒன்றை உருவாக்க அவசியம் ஏற்பட்டிருக்காது. 8ஆனால், இறைவனோ மக்களில் குறைபாட்டைக் கண்டதனாலேயே,
“கர்த்தர் அறிவிக்கின்றதாவது:
இஸ்ரயேல் குடும்பத்தோடும்,
யூதா குடும்பத்தோடும்
நான் புதிய உடன்படிக்கையை நிறைவாக்கும் நாட்கள் வருகின்றன.
9நான் அவர்களுடைய முற்பிதாக்களை என்னுடைய கரத்தினால்
எகிப்திலிருந்து வெளியே வழிநடத்திக்கொண்டு வந்தபோது,
நான் அவர்களுடன் செய்த உடன்படிக்கையைப் போல் இருப்பதில்லை.
ஏனெனில், அவர்கள் என் உடன்படிக்கையில் நிலைத்திருக்கவில்லை.
அதனால்தான் நான் அவர்களைப் புறக்கணித்தேன்
என்று கர்த்தர் அறிவிக்கிறார்.
10அந்த நாட்களுக்குப் பின்பு, நான் இஸ்ரயேல் குடும்பத்துடன் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே
என்று கர்த்தர் அறிவிக்கிறார்.
நான் எனது சட்டங்களை அவர்களுடைய மனங்களில் வைப்பேன்.
அவற்றை அவர்களுடைய இருதயங்களில் எழுதுவேன்.
நான் அவர்களுடைய இறைவனாய் இருப்பேன்.
அவர்கள் எனது மக்களாய் இருப்பார்கள்.
11இனிமேல் ஒருவன் தன்னுடைய அயலானுக்கோ,
அல்லது தனது சகோதரனுக்கோ, ‘கர்த்தரை அறிந்துகொள்’ என்று போதிக்க வேண்டியிருக்காது.
ஏனெனில், சிறியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை எல்லோரும்
என்னை அறிந்துகொள்வார்கள்.
12நான் அவர்களுடைய அநியாயங்களை மன்னிப்பேன்.
அவர்களுடைய பாவங்களை இனி ஒருபோதும் நினைவில்கொள்வதில்லை.”#8:12 எரே. 31:31-34
13இந்த உடன்படிக்கையை “புதியது” என்று சொல்கின்றதனாலே, அவர் முதலாவது உடன்படிக்கையை காலாவதியாக்கினார். காலாவதியாகிக் கொண்டிருக்கும் எதுவும், பழைமையாகிக் கொண்டிருக்கும் எதுவும் விரைவில் மறைந்து போய்விடும்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
எபிரேயர் 8: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.