கலாத்தியர் 1
1
1மனிதர்களிடமிருந்தோ அல்லது எந்தவொரு மனிதன் ஊடாகவோ அனுப்பப்படாமல், இயேசு கிறிஸ்துவின் ஊடாகவும், மரணித்தோரிலிருந்து அவரை உயிருடன் எழுப்பிய பிதாவாகிய இறைவனின் ஊடாகவும் அப்போஸ்தலனாக அனுப்பப்பட்ட பவுலாகிய நானும், 2என்னுடன் இருக்கும் எல்லா சகோதரர்களும் இணைந்து,
கலாத்தியா நாட்டில் உள்ள திருச்சபைகளுக்கு எழுதுவதாவது:
3நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. 4இயேசுவே, நம்முடைய பிதாவாகிய இறைவனுடைய திட்டத்தின்படி, இத்தீமையான தற்காலத்திலிருந்து#1:4 தற்காலத்திலிருந்து – வரவிருக்கும் இறையரசுக்குரிய நற்காலத்தின் எதிர்ச் சொல் நம்மைத் தப்புவிப்பதற்காக நம்முடைய பாவங்களுக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்தவர். 5அவருக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
வேறு நற்செய்தி இல்லை
6கிறிஸ்துவினுடைய கிருபையினாலே உங்களை அழைத்தவரைக் கைவிட்டு, இவ்வளவு விரைவாக நீங்கள் வேறொரு நற்செய்தியின் பக்கமாக திரும்புவதை என்னால் நம்பக்கூட முடியவில்லை. 7உண்மையில் அந்த வேறொரு செய்தி நற்செய்தியே அல்ல. சிலர் உங்களைக் குழப்பமடையச் செய்து, கிறிஸ்துவினுடைய நற்செய்தியைத் திரித்துக் கூற முயலுகின்றார்களே அல்லாமல் வேறொன்றும் இல்லை. 8நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியைவிட, மாறுபட்ட ஒரு நற்செய்தியை வானத்திலிருந்து வந்த ஒரு தூதனோ அல்லது அதை நாங்களே அறிவித்தாலும்கூட நாம் சபிக்கப்பட்டவர்களாகவே இருப்போம். 9நாங்கள் ஏற்கெனவே சொல்லியிருந்ததை இப்போது நான் மீண்டும் உங்களுக்கு சொல்கிறேன்: நீங்கள் ஏற்றுக்கொண்ட நற்செய்தியைவிட மாறுபட்ட ஒரு செய்தியை எவராயினும் உங்களுக்கு அறிவித்தால், அவன் சபிக்கப்பட்டவனாக இருக்கட்டும்.
10இப்போது நான் பெற முயற்சிப்பது மனிதருடைய அங்கீகாரத்தையா அல்லது இறைவனுடைய அங்கீகாரத்தையா? அல்லது நான் மனிதருடைய ஆதரவைத்தான் நாடித் தேடுகின்றேனா? நான் இன்னும் மனிதருடைய ஆதரவைப் பெற முயற்சிக்கின்றவனாய் இருந்தால், நான் கிறிஸ்துவினுடைய ஊழியனாய் இருக்கவே முடியாது.
இறைவனால் அழைக்கப்பட்ட பவுல்
11பிரியமானவர்களே, நீங்கள் ஒன்றை அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன், நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியானது மனிதரின் ஆக்கம் அல்ல என்பதே அது. 12நான் அந்த நற்செய்தியை எந்தவொரு மனிதனிடத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளவும் இல்லை, எந்தவொரு மனிதனும் அதை எனக்குப் போதிக்கவும் இல்லை. மாறாக இயேசு கிறிஸ்து எனக்குத் தெரியப்படுத்திய வெளிப்பாட்டின் மூலமாகவே நான் அதைப் பெற்றுக்கொண்டேன்.
13நான் யூத மதத்தை பின்பற்றியபோது, முன்பு நான் எப்படி வாழ்ந்தேன் என்பதைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். இறைவனுடைய திருச்சபையை நான் எவ்வளவு கொடுமையாய் துன்புறுத்தி அதை அழிக்க முயன்றேன் என்பதும் உங்களுக்குத் தெரியும். 14அத்தோடு யூத மதத்தை பின்பற்றுவதில் எனது சமகால யூதர்களைவிட நானே அதிக தேர்ச்சி பெற்று இருந்ததோடு, நம்முடைய தந்தையர்களின் பாரம்பரியங்களைக் கைக்கொள்வதிலும் தீவிர ஆர்வம் உடையவனாக இருந்தேன். 15ஆனால் நான் தாயின் கருப்பையில் இருக்கும்போதே என்னை வேறு பிரித்த இறைவன், தம்முடைய கிருபையினால் என்னை அழைத்து, 16கிறிஸ்துவை வெளிப்படுத்த#1:16 வெளிப்படுத்த – கிரேக்க மொழியில் என்னில் வெளிப்படுத்த அல்லது எனக்கு வெளிப்படுத்த என்றும் அர்த்தம்கொள்ளலாம். பிரியம் கொண்டார். தம்முடைய மகனின் நற்செய்தியை யூதரல்லாத மக்களுக்கு நான் அறிவிப்பதற்காகவே இப்படிச் செய்தார். அப்போது அதைக் குறித்து நான் எந்த மனிதனிடமும் ஆலோசனை கேட்கவுமில்லை, 17எனக்கு முன்னர் அப்போஸ்தலர்களாய் இருந்தவர்களைச் சந்திப்பதற்காக நான் எருசலேமுக்குப் போகவுமில்லை. மாறாக உடனே அரேபியாவுக்குச் சென்று, பின்பு தமஸ்கு பட்டணத்துக்குத் திரும்பினேன்.
18மூன்று வருடங்களுக்குப் பின்பு நான் கேபாவைச்#1:18 கேபாவை – இது பேதுருவைக் குறிக்கிறது. சந்தித்து அறிமுகமாவதற்காக எருசலேமுக்குப் போனபோது அவனுடன் பதினைந்து நாட்கள் தங்கினேன். 19ஆனால் ஆண்டவருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர மற்ற அப்போஸ்தலர்களில் வேறு ஒருவரையும் நான் அப்போது சந்திக்கவில்லை. 20நான் உங்களுக்கு இப்போது எழுதுகின்றவை பொய்யல்ல என்பதை இறைவனுக்கு முன்பாக உறுதியாகக் கூறுகிறேன்.
21பின்பு நான் சீரியா மற்றும் சிலிசியா என்ற பிரதேசங்களுக்கு போனேன். 22ஆனால் அப்போதும்கூட யூதேயா நாட்டிலிருக்கின்ற கிறிஸ்துவோடு இணைந்துள்ள திருச்சபைகளுக்கு நான் அறிமுகமற்றவனாகவே இருந்தேன். 23“முன்பு எங்களைத் துன்புறுத்திய இவன், இப்பொழுது, தான் முன்பு அழிக்க முயன்ற விசுவாசத்தை பிரசங்கிக்கிறான்” என்று சொல்லப்படுவதை மட்டுமே அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். 24அதனால், எனக்காக அவர்கள் இறைவனைத் துதித்தார்கள்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
கலாத்தியர் 1: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.