எபேசியர் 1
1
1இறைவனுடைய விருப்பப்படி கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாக இருக்கும் பவுல்,
எபேசு பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் உள்ளவர்களாய் இருக்கின்ற பரிசுத்தவான்களுக்கு எழுதுகின்றதாவது:
2நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
கிறிஸ்துவில் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்
3நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிதாவும், இறைவனுமாய் இருக்கின்றவர் துதிக்கப்படுவாராக. அவர் பரலோகத்தில் உள்ள எல்லா ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினாலும் கிறிஸ்துவில் இணைந்திருக்கின்ற நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். 4நாம் இறைவனுடைய பார்வையிலே பரிசுத்தமுள்ளவர்களாயும், குற்றமற்றவர்களாயும் இருக்க வேண்டும் என்பதற்காக உலகம் படைக்கப்படுவதற்கு முன்னதாகவே அவர் நம்மை கிறிஸ்துவுக்குள் தெரிவு செய்தார். இறைவன் தம்முடைய அன்பின் காரணமாக, 5இயேசு கிறிஸ்துவின் மூலமாய் அவருடைய சொந்த பிள்ளைகளாக தத்தெடுத்துக்கொள்ள நம்மை முன்கூட்டியே நியமித்தார். இதை அவர் தமது சித்தத்தின்படியும், விருப்பத்தின்படியும் செய்தார். 6தாம் அன்பு செலுத்திய கிறிஸ்துவில் நமக்குத் தாராளமாக வழங்கப்பட்டுள்ள இந்த மகிமையான கிருபையின் காரணமாக, அவர் புகழப்படும்படியாக இதைச் செய்தார். 7இறைவனுடைய அளவற்ற மிகுந்த கிருபையின்படி, கிறிஸ்து சிந்திய இரத்தத்தின் மூலமாக அவராலேயே நமக்கு மீட்பு கிடைக்கிறது. அதனூடாக பாவங்களுக்கான#1:7 பாவங்களுக்கான – கிரேக்க மொழியில் மீறுதல்களுக்கான என்றுள்ளது. மன்னிப்பைப் பெறுகிறோம். 8இறைவன் அந்தக் கிருபையை எல்லா ஞானத்துடனும், புரிந்துகொள்ளும் ஆற்றலுடனும் சேர்த்து நமக்கு நிறைவாகக் கொடுத்து, 9தமது திட்டத்தின் மறைபொருளை நமக்குத் தெரியப்படுத்தினார். அத்திட்டமானது தமது விருப்பத்தின்படி கிறிஸ்துவுக்குள்ளாக அவர் செய்ய இருந்த அவருடைய நோக்கமாக இருந்தது. 10அதன்படி, காலங்கள் நிறைவேறும்போது பரலோகத்திலும் உலகத்திலும் உள்ள எல்லாவற்றையும் கிறிஸ்துவின் தலைமையின் கீழ் ஒன்றுசேர்ப்பதே அந்தத் திட்டம்.
11தம்முடைய திட்டத்தின் நோக்கத்திற்கு ஏற்ப எல்லாவற்றையும் நிறைவேற்றுகின்ற இறைவனுடைய தீர்மானத்தின்படியே நாமும் முன்கூட்டியே நியமிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்கூடாக உரிமைச் சொத்தொன்றைப் பெற்றிருக்கிறோம். 12இதனால், கிறிஸ்துவில் முதன்முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள்#1:12 நாங்கள் – யூதர்களாகிய நாங்கள் என்றும் மொழிபெயர்க்கலாம் இறைவனுடைய மகிமைக்குப் புகழ் உண்டாக்குகின்றவர்களாய் இருக்க வேண்டுமென்று அவர் விரும்பினார். 13அப்படியே, நீங்களும்#1:13 நீங்களும் – யூதர்கள் அல்லாத நீங்கள் என்றும் மொழிபெயர்க்கலாம் சத்திய வார்த்தையை, அதாவது உங்களுக்கு மீட்பைக் கொடுக்கின்ற நற்செய்தியைக் கேட்டு கிறிஸ்துவை விசுவாசித்தபோது, வாக்குறுதி அளிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவராலே அவரில் முத்திரை#1:13 முத்திரை – இது இறைவனுக்கு சொந்தமானவர்கள் என்பதற்கு அடையாளம் அடையாளம் இடப்பட்டீர்கள். 14இறைவனுக்கு உரியவர்களாகிய நாம் மீட்கப்பட்டு நமக்குரிய உரிமைச் சொத்தை அடையும் வரை, பரிசுத்த ஆவியானவரே நாம் அதை அடைவதற்குரிய உத்தரவாதமாய்#1:14 உத்தரவாதமாய் – பெற்றுக்கொண்ட ஆரம்பத் தொகையாக இருக்கின்றார். இறைவனுடைய மகிமைக்கு புகழ் உண்டாகவே இப்படிச் செய்தார்.
நன்றி செலுத்துதலும் மன்றாடுதலும்
15இக்காரணத்தினாலே ஆண்டவர் இயேசுவில் நீங்கள் வைத்திருக்கின்ற விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லோர் மீதும் உங்களுக்கிருக்கின்ற அன்பையும் குறித்து நான் கேள்விப்பட்டதிலிருந்து, 16உங்களை என் மன்றாடுதல்களில் நினைவுகூர்ந்து உங்களுக்காக இடைவிடாமல் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். 17நீங்கள் நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இறைவனாயிருக்கின்ற மகிமையுள்ள பிதாவை இன்னும் அதிகமாய் அறிந்துகொள்ள அவர் ஞானத்தையும் வெளிப்படுத்துதலையும் கொடுக்கும் ஆவியை உங்களுக்குத் தர வேண்டும் என மன்றாடுகிறேன். 18உங்கள் மனக்கண்கள் தெளிவடைய வேண்டும் என்றும் மன்றாடுகிறேன். அப்பொழுதே, இறைவன் உங்களை அழைத்திருக்கின்ற அந்த எதிர்பார்ப்பையும், பரிசுத்தவான்களால் அவருக்குக் கிடைக்கின்ற மகிமையான உரிமைச் சொத்தின் உயர்மதிப்பையும், 19அத்துடன் எந்த வல்லமையை கிறிஸ்துவில் செயற்படுத்தி, அவரை மரணித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பி, பரலோக அரசிலே தமது வலது பக்கத்தில் இறைவன் உட்கார வைக்க பயன்படுத்தினாரோ, 20அதே பெரிதான, அளவிட முடியாத வல்லமையை விசுவாசிக்கின்றவர்களாகிய நமக்கும் இறைவன் கொடுத்திருக்கின்றார் என்பதையும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். 21இவ்விதமாகவே, இந்தக் காலத்துக்கு மட்டுமல்ல இனி வரப்போகும் காலத்துக்கும் உரிய எல்லா ஆளுகைக்கும் அதிகாரத்துக்கும் வல்லமைக்கும் அரசாட்சிக்கும், மற்றும் பெயரிடப்பட்டிருக்கும் எல்லாப் பெயர்களுக்கும்#1:21 எல்லாப் பெயர்களுக்கும் – எல்லாத் தலைமைத்துவ பெயர்களுக்கும் என்றும் மொழிபெயர்க்கலாம். மேலாக இறைவன் கிறிஸ்துவை#1:21 கிறிஸ்துவை – அவரை உயர்த்தினார். 22மேலும், எல்லாவற்றையும் கிறிஸ்துவினுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, திருச்சபையின் நலனுக்காக அனைத்தையும் ஆளுகை செய்கின்ற தலைமையாக அவரை நியமித்தார். 23அவரே எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகின்றவர்; அவருடைய உடலாகிய திருச்சபை அவரால் முழுநிறைவடைகிறது.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
எபேசியர் 1: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.