அப்போஸ்தலருடைய நடபடிகள் 21

21
பவுல் எருசலேமுக்குப் பிரயாணமாகுதல்
1நாங்கள் அவர்களைவிட்டுப் பிரிந்து, கப்பல் மூலமாகப் புறப்பட்டு ஒரு நேர் திசையில் பயணம் செய்து கோஸ் தீவைச் சென்றடைந்தோம். மறுநாள் அங்கிருந்து ரோதுவுக்குப் போனோம். பின்பு அங்கிருந்து, பத்தாரா பட்டணத்திற்குப் போனோம். 2அங்கிருந்து பெனிக்கேயாவுக்கு ஒரு கப்பல் போவதைக் கண்டு, அதில் ஏறிப் பயணமானோம். 3நாங்கள் சீப்புரு தீவைக் கண்டு, தெற்குப் பக்கமாக அதைக் கடந்து சென்று சீரியாவுக்குக் கப்பலில் பயணமாகி தீரு பட்டணத்தில் கரையிறங்கினோம். ஏனெனில் அங்கே கப்பலிலிருந்து பொருட்களை இறக்க வேண்டியிருந்தது. 4அங்கே சீடர்கள் இருப்பதைக் கண்டு அவர்களுடன் ஏழு நாட்கள் தங்கினோம். அவர்கள் ஆவியானவரின் ஏவுதலினால் எருசலேமுக்குப் போக வேண்டாம் எனப் பவுலைக் கெஞ்சிக் கேட்டார்கள். 5ஆனால் நாங்களோ அங்கே தங்க வேண்டிய காலம் முடிந்ததும், அவ்விடத்தைவிட்டு எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். அப்போது அங்கேயிருந்த சீடர்கள் எல்லோரும், தங்கள் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பட்டணத்தைவிட்டு வெளியே வந்து, எங்களுடனே வந்தார்கள். நாங்கள் எல்லோரும் கடற்கரையில் முழந்தாழிட்டு மன்றாடினோம். 6பின்பு ஒருவருக்கொருவர் பிரியாவிடை பெற்று நாங்கள் கப்பலேறினோம். அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போனார்கள்.
7நாங்கள் தீரு பட்டணத்திலிருந்து தொடர்ந்து பயணம் செய்து பித்தொலோமாய் பட்டணத்தில் கரையிறங்கினோம். அங்கே சகோதரர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆசி கூறி, அவர்களுடனே ஒரு நாள் தங்கினோம். 8மறுநாள் நாங்கள் புறப்பட்டு செசரியா பட்டணத்தைப் போய்ச் சேர்ந்தோம். அங்கே நற்செய்தியாளனான பிலிப்புவின் வீட்டில் தங்கினோம். இவன் முன்பு உணவு பரிமாறும் பணிக்காகத் தெரிந்தெடுக்கப்பட்ட அந்த ஏழு பேரில் ஒருவன். 9அவனுக்கு திருமணமாகாத நான்கு மகள்மார் இருந்தார்கள். அவர்கள் இறைவாக்கு உரைப்பவர்கள்.
10அங்கே நாங்கள் சில நாட்கள் தங்கியிருக்கையில், அகபு என்னும் பெயருடைய இறைவாக்கினன் யூதேயாவிலிருந்து வந்தான். 11அவன் எங்களிடம் வந்து பவுலின் இடைப்பட்டியை எடுத்து அதனால் தனது கைகளையும் கால்களையும் பிணைத்துக்கொண்டு, “இந்த இடைப்பட்டிக்குச் சொந்தமானவனை எருசலேமிலுள்ள யூதர்கள் இவ்விதமாய் கட்டி, அவனை யூதரல்லாத மக்களிடம் கையளிப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்கின்றார்” என இறைவாக்கு உரைத்தான்.
12இதை நாங்கள் கேட்டபோது எருசலேமுக்குப் போக வேண்டாமென்று நாங்களும் அங்கிருந்த மக்களும் பவுலைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டோம். 13அப்போது பவுல் எங்களிடம், “நீங்கள் ஏன் அழுது என் இருதயத்தை கலங்கப் பண்ணுகிறீர்கள்? ஆண்டவர் இயேசுவின் பெயரால் நான் எருசலேமில் கட்டி வைத்து சிறையிடப்படுவதற்கு மட்டுமல்ல, மரணிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன்” என்றான். 14நாங்கள் சொல்லியும் பவுல் கேட்காததனால், “கர்த்தருடைய திட்டத்தின்படி நடக்கட்டும்” என்று கூறி, நாங்கள் பேசாமல் இருந்தோம்.
15இதன்பின் நாங்கள் பயணத்திற்கு ஆயத்தமாகி எருசலேமுக்குப் புறப்பட்டோம். 16செசரியாவிலிருந்து சில சீடர்கள் எங்களுடனேகூட வந்து, நாங்கள் தங்குவதற்கு எங்களை மினாசோனுடைய வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அவன் சீப்புரு தீவைச் சேர்ந்தவனும், ஆரம்ப கால சீடர்களில் ஒருவனுமாய் இருந்தான்.
எருசலேமில் பவுல்
17நாங்கள் எருசலேமுக்கு வந்து சேர்ந்தபோது அங்கிருந்த சகோதரர்கள் எங்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். 18மறுநாள் பவுலும் நாங்களும் யாக்கோபைச் சந்திப்பதற்குப் போனோம். எருசலேம் திருச்சபையின் மூப்பர்கள் அனைவரும் அங்கே இருந்தார்கள். 19பவுல் அவர்களுக்கு ஆசி கூறி தனது ஊழியத்தின் மூலமாய் இறைவன் யூதரல்லாதவர் மத்தியில் செய்தவற்றைக் குறித்து விபரமாய் எடுத்துக் கூறினான்.
20அவர்கள் இதைக் கேட்டபோது இறைவனைத் துதித்தார்கள். பின்பு அவர்கள் பவுலிடம், “சகோதரனே, யூதர்களில் ஆயிரக் கணக்கானோர் விசுவாசிகளாய் ஆகிருக்கிறார்கள் என்பதை நீ அறிந்திருக்கிறாய். அவர்கள் எல்லோரும் நீதிச்சட்டத்தைக் குறித்து வைராக்கியம் உள்ளவர்களாய் இருக்கின்றார்கள். 21ஆனால், யூதரல்லாதவர்களின் மத்தியில் வாழும் யூதர்களிடம் அவர்கள் மோசேயின் நீதிச்சட்டத்தைக் கைக்கொள்வதை விட்டுவிட வேண்டும் என்று நீ போதிப்பதாக இங்குள்ள யூதருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவர்களுடைய பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்யக் கூடாது என்றும், யூத முறைகளைக் கைக்கொள்ளக் கூடாது என்றும் நீ போதிக்கின்றதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 22ஆகவே நாம் செய்யக் கூடியது என்ன? நீ இங்கே வந்திருப்பதை அவர்கள் நிச்சயமாய் கேள்விப்படுவார்கள். 23எனவே நாங்கள் உனக்குச் சொல்வதைச் செய். இங்கே நேர்த்திக்கடன் செய்திருக்கின்ற நான்கு பேர் எங்களிடம் இருக்கின்றார்கள். 24இவர்களை அழைத்துக்கொண்டு போய் இவர்கள் செய்யும் சம்பிரதாய சுத்திகரிப்பு முறைமைகளில் நீயும் கலந்துகொள். இவர்களின் மொட்டையடிப்பதற்கான செலவையும் நீயே செலுத்து. அப்போது உன்னைப் பற்றித் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட காரியங்களில் எவ்வித உண்மையும் இல்லையென்றும், நீயும் நீதிச்சட்டத்திற்குக் கீழ்ப்படிந்தே வாழ்கின்றாய் என்றும் எல்லோரும் அறிந்துகொள்வார்கள். 25அதேவேளை, யூதரல்லாத விசுவாசிகளைக் குறித்த எங்கள் தீர்மானத்தை நாங்கள் அவர்களுக்கு எழுதியிருக்கிறோம். அவர்கள் விக்கிரகங்களுக்குப் பலியிடப்பட்ட உணவைத் தவிர்க்க வேண்டும் என்றும், இரத்தத்தைச் சாப்பிடக் கூடாது என்றும், நெரித்துக் கொல்லப்பட்ட மிருகத்தின் இறைச்சியை சாப்பிடக் கூடாது என்றும், பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடக் கூடாது என்றும் எழுதியிருக்கிறோம்” என்றார்கள்.
26மறுநாள் பவுல் அந்த மனிதர்களை அழைத்துக்கொண்டு போய், தானும் அவர்களுடனே சம்பிரதாய முறைப்படி தன்னைச் சுத்திகரித்துக் கொண்டான். பின்பு அவன் சுத்திகரிப்புக்கான நாட்கள் எப்போது முடிவடையும் என்றும், அவர்கள் ஒவ்வொருவருக்குமான காணிக்கை எப்போது செலுத்தப்படும் என்றும் அறிவிப்பதற்கு ஆலயத்திற்குச் சென்றான்.
பவுல் கைது செய்யப்படல்
27அந்த ஏழு நாட்கள் நிறைவுறும் அந்தக் காலத்தில் ஆசியா மாகாணத்தைச் சேர்ந்த சில யூதர்கள் பவுலை ஆலயத்தில் கண்டு, அங்கு கூடியிருந்த மக்களைத் தூண்டிவிட்டு பவுலைப் பிடித்தார்கள். 28அவர்கள் சத்தமிட்டு, “இஸ்ரயேலரே, எங்களுக்கு உதவி செய்யுங்கள்! நமது மக்களுக்கும், நீதிச்சட்டத்திற்கும், இந்த இடத்திற்கும் விரோதமாக எல்லா இடங்களிலும் எல்லா மக்களுக்கும் போதிக்கின்றவன் இவன்தான். இதைவிட, ஆலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கொண்டுவந்து, இவன் இந்தப் பரிசுத்த இடத்தைத் தூய்மைக்கேடாக்கி விட்டான்” என்றார்கள். 29ஏனெனில், அவர்கள் எபேசியனான துரோபீமும்#21:29 எபேசியனான துரோபீமு – இவன் யூதனல்லாத ஒருவன் பவுலுடனே பட்டணத்தில் இருந்ததை முன்பு கண்டிருந்தார்கள். இதனால் பவுல், அவனையும் ஆலயத்திற்குள் கொண்டுவந்திருப்பான் என்று அவர்கள் நினைத்தார்கள்.
30முழுப்பட்டணமும் குழப்பமடைந்தது. எல்லாப் பகுதிகளிலும் இருந்த மக்கள் அங்கு ஓடி வந்தார்கள். அவர்கள் பவுலைப் பிடித்து, ஆலயத்திலிருந்து இழுத்துக்கொண்டு போனார்கள். உடனே ஆலயத்தின் கதவுகள் பூட்டப்பட்டன. 31அவர்கள் அவனைக் கொலை செய்ய முயற்சிக்கையில் எருசலேம் நகரம் முழுவதும் குழப்பம் அடைந்திருக்கிறது என்ற செய்தி ரோமப் படைத்தளபதிக்கு எட்டியது. 32அவன் உடனடியாகச் சில அதிகாரிகளையும் இராணுவ வீரர்களையும் அழைத்துக்கொண்டு மக்கள் கூட்டத்தை நோக்கி ஓடி வந்தான். குழப்பம் விளைவித்தவர்கள் படைத்தளபதியையும் இராணுவ வீரர்களையும் கண்டபோது, பவுலை அடிப்பதை நிறுத்திவிட்டார்கள்.
33படைத்தளபதி வந்து அவனைக் கைது செய்து, அவனை இரண்டு சங்கிலிகளினால் கட்டும்படி உத்தரவிட்டான். பின்பு, அவன் யார் என்றும் அவன் என்ன செய்தான் என்றும் விசாரித்தான். 34மக்கள் கூட்டத்திலிருந்த சிலர் சத்தமிட்டு, ஏதோ ஒன்றைச் சொன்னார்கள், மற்றவர்களோ வேறு எதையோ சொன்னார்கள். ஏற்பட்டிருந்த குழப்பத்தின் காரணமாக தளபதியினால் உண்மையை அறிய முடியவில்லை. எனவே பவுலைப் படையினரின் முகாமுக்குக் கொண்டுசெல்லும்படி உத்தரவிட்டான். 35பவுல் படிக்கட்டுகளினருகே வந்தபோது, கலகக்காரரை அடக்க முடியாதிருந்ததால் இராணுவ வீரர்கள் பவுலைத் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. 36பின்னாலே சென்ற மக்கள் கூட்டத்தினரோ, “அவனைக் கொல்லுங்கள்” என்று சத்தமிட்டார்கள்.
மக்கள் கூட்டத்தினரிடம் பவுல் பேசுதல்
37இராணுவ வீரர்கள் பவுலை முகாமுக்குள் கொண்டுசெல்ல முயலுகையில், அவன் தளபதியிடம், “நான் உம்முடன் கொஞ்சம் பேசலாமா?” என்று கேட்டான்.
அதற்கு அவன், “உனக்கு கிரேக்க மொழி தெரியுமா? 38சிறிது காலத்துக்கு முன் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி, நாலாயிரம் பயங்கரவாதிகளை பாலைநிலத்திற்கு வழிநடத்திச் சென்ற எகிப்தியன் நீதானா?” என்று கேட்டான்.
39அதற்குப் பவுல், “நான் ஒரு யூதன், சிலிசியா நாட்டைச் சேர்ந்த தர்சு பட்டணத்தைச் சேர்ந்தவன். ஒரு பிரபலமான பட்டணத்தின் குடிமகன். தயவுசெய்து இந்த மக்களுடன் பேச எனக்கு அனுமதி தர வேண்டும்” என்றான்.
40தளபதியின் அனுமதியைப் பெற்று, பவுல் படிக்கட்டுகளில் நின்று கூடியிருந்த மக்களுக்கு சைகை காட்டினான். அவர்கள் எல்லோரும் அமைதியடைந்தபோது அவன் எபிரேய மொழியில் அவர்களுடன் பேசத் தொடங்கினான்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்