3 யோவான் 1

1
1மூப்பராகிய நான்,
சத்தியத்தின்படி நான் நேசிக்கின்ற, என் அன்பான நண்பன் காயுவுக்கு எழுதுகின்றதாவது:
2பிரியமானவனே! உன் ஆத்துமா ஆரோக்கியமாக இருப்பது போல், நீ உன் உடல் நலத்திலும், மற்றெல்லாவற்றிலும் ஆரோக்கியமாய் இருக்கும்படி நான் உனக்காக மன்றாடுகிறேன். 3சில சகோதரர்கள் வந்து, நீ சத்தியத்துக்கு உண்மையாயிருப்பதையும், அதன்படி தொடர்ந்து நடப்பதையும் சாட்சியாக சொன்னபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். 4எனது பிள்ளைகள் சத்தியத்தில் நடக்கின்றார்கள் என்று கேள்விப்படுவதைவிட, பெரிதான மனமகிழ்ச்சி எனக்கு இல்லை.
5அன்பான நண்பனே, உன்னிடம் வருகின்ற சகோதரர்கள் உனக்கு அறிமுகம் அற்றவர்களாக இருந்தும், நீ அவர்களுக்கு உதவி செய்வதில் உண்மையுள்ளவனாய் இருக்கின்றாய். 6அவர்கள் உன்னுடைய அன்பைக் குறித்து, திருச்சபைக்குச் சாட்சி சொல்லி இருக்கின்றார்கள். நீ இறைவனுக்கு ஏற்றவிதத்தில் அவர்களை வழியனுப்பி வைப்பாயாக. 7ஏனெனில் அவர்கள் அவிசுவாசிகளிடமிருந்து#1:7 அவிசுவாசிகளிடமிருந்து என்பது யூதர் அல்லாதோர். எவ்வித உதவியையும் பெற்றுக்கொள்ளாமல், கிறிஸ்துவின் பெயருக்காக புறப்பட்டுச் சென்றார்கள். 8எனவே நாம் சத்தியத்துக்காக பங்களிப்புடன் பணியாற்றும்படி, அப்படிப்பட்டவர்களை உபசரிக்க கடமைப்பட்டவர்களாய் இருக்கின்றோம்.
9இதை நான் திருச்சபைக்கு எழுதினேன். ஆனால் தியோத்திரேப்பு, தான் முதல்வனாயிருக்க விரும்பியதால் எங்கள் அதிகாரத்தை ஏற்கவில்லை. 10எனவே, நான் அங்கு வரும்போது அவன் செய்வதைக் குறித்து எடுத்துச் சொல்வேன், அவன் எங்களைப்பற்றி அவதூறாய்ப் பேசித் திரிகிறான். அத்துடன் அவன் திருப்தியடையாமல், மற்ற சகோதரர்களை வரவேற்கவும் மறுக்கின்றான். அவர்களை வரவேற்கின்றவர்களையும் தடுத்து திருச்சபையிலிருந்து அவர்களை வெளியேற்றவும் செய்கின்றான்.
11அன்பான நண்பனே, தீமையைப் பின்பற்றாமல் நன்மையைப் பின்பற்று. நன்மை செய்கின்றவன் இறைவனால் உண்டானவன். தீமை செய்கின்றவன் இறைவனைக் கண்டதில்லை. 12தேமேத்திரியு எல்லோராலும் நற்சாட்சி பெற்றவன். சத்தியமும் அதற்கு சாட்சியாக இருக்கின்றது. நாங்களும் அவனைக் குறித்து நற்சாட்சி கொடுக்கின்றோம், எங்கள் சாட்சி உண்மையாய் இருக்கின்றது என்பதை நீ அறிவாய்.
13நான் உனக்கு எழுதுவதற்கு அநேகம் உள்ளன. ஆனால் நான் அவற்றை மையினால் காகிதத்தில் எழுத விரும்பவில்லை. 14உன்னை விரைவில் சந்திக்க எதிர்பார்க்கின்றேன். அப்போது நாம் நேருக்கு நேராகப் பேசலாம்.
15உனக்கு சமாதானம் உண்டாவதாக.
இங்குள்ள நண்பர்களும் வாழ்த்துகிறார்கள். நண்பர்களை பெயர்பெயராக வாழ்த்துவாயாக.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

3 யோவான் 1: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்