2 தெசலோனிக்கேயர் 3

3
மன்றாடுதலுக்கான வேண்டுகோள்
1இறுதியாக பிரியமானவர்களே, கர்த்தருடைய செய்தி உங்களிடையே விரைவாகப் பரவி மகிமைப்பட்டது போல, அது எங்கும் பரவ வேண்டும் என எங்களுக்காக மன்றாடுங்கள். 2கொடியவர்களும், தீயவர்களுமான இத்தகைய மனிதரிடமிருந்து நாங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் மன்றாடுங்கள். ஏனெனில், எல்லோரிடமும் விசுவாசம் இல்லை. 3ஆனால், கர்த்தர் உண்மையுள்ளவர். அவர் உங்களைப் பலப்படுத்தி, தீயவனிடமிருந்து பாதுகாப்பார். 4நாங்கள் கட்டளையிடுகின்ற காரியங்களை நீங்கள் செய்கின்றீர்கள் என்றும், தொடர்ந்து செய்வீர்கள் என்றும் நாங்கள் கர்த்தரில் மனவுறுதி உடையவர்களாய் இருக்கின்றோம். 5கர்த்தர் தாமே உங்கள் இருதயங்களை இறைவனுடைய அன்புக்குள்ளாகவும், கிறிஸ்துவின் மனவுறுதிக்குள்ளாகவும் நடத்துவாராக.
சோம்பேறிகளாய் இருப்பவர்களுக்கான எச்சரிக்கை
6பிரியமானவர்களே, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரில் நாங்கள் உங்களுக்குக் கட்டளையிடுகின்றதாவது: சோம்பேறிகளாய் வாழும் ஒவ்வொரு சகோதரரையும்விட்டு விலகியிருங்கள். எங்களிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்டதன்படி நடந்துகொள்ளாதவர்களை விட்டு விலகியிருங்கள். 7எங்களுடைய முன்மாதிரியை எவ்விதமாய் பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுடன் இருந்தபோது நாங்கள் சோம்பேறிகளாய் இருந்ததும் இல்லை, 8யாரிடமும் நாங்கள் இலவசமாய் உணவைப் பெற்று உண்டதும் இல்லை. மாறாக, இரவும் பகலும் பாடுபட்டு உழைத்தோம். ஆகவே, உங்களில் யாருக்கும் நாங்கள் பாரமாய் இருந்ததில்லை. 9இவ்விதமான உதவியை உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள எங்களுக்கு உரிமை இல்லை என்பதனால் அல்ல. மாறாக, நீங்கள் பின்பற்றுவதற்கு நாங்கள் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அப்படிச் செய்தோம். 10ஏனெனில், நாங்கள் உங்களுடன் இருந்தபோது, “வேலை செய்ய விருப்பம் இல்லாத ஒருவன் உண்ணவும் கூடாது” என்ற கட்டளையையே உங்களுக்குக் கொடுத்தோம்.
11உங்களில் சிலர் சோம்பேறிகளாய் இருக்கின்றார்கள் என்று நாங்கள் கேள்விப்படுகிறோம். அவர்கள் ஒரு வேலையும் செய்வதில்லை, மற்றவர்களின் வேலையில் தலையிடுவதே அவர்களின் வேலையாகி விட்டது. 12அப்படிப்பட்டவர்கள், ஒரு வேலையில் நிலைத்திருந்து தங்களின் உணவை தாங்களே உழைத்து உண்ண வேண்டும் என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நாங்கள் கட்டளையிட்டு வேண்டிக்கொள்கிறோம். 13பிரியமானவர்களே, நீங்களோ நல்லதைச் செய்வதில் ஒருபோதும் சோர்வடைய வேண்டாம்.
14இந்தக் கடிதத்திலுள்ள அறிவுறுத்தலுக்கு யாராவது கீழ்ப்படியாவிட்டால், அப்படிப்பட்டவனைக் குறித்துவைத்துக்கொள்ளுங்கள். அவன் வெட்கத்துக்குள்ளாகும்படி அவனோடு கூடிப் பழகாதிருங்கள். 15ஆனாலும், அவனை ஒரு பகைவனாக எண்ணாமல், ஒரு சகோதரனைப் போல் எண்ணி எச்சரியுங்கள்.
இறுதி வாழ்த்துரை
16சமாதானத்தின் கர்த்தர் எப்போதும் எல்லாவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைக் கொடுப்பாராக. கர்த்தர் உங்கள் எல்லோருடனும் இருப்பாராக.
17பவுலாகிய நான் இந்த வாழ்த்துதலை என்னுடைய சொந்தக் கைப்பட எழுதுகிறேன். இதுவே எனது கடிதங்கள் அனைத்துக்கும் அடையாளம். நான் எழுதும் முறையும் இதுவே.
18நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் எல்லோருடனும் இருப்பதாக. ஆமென்.#3:18 சில மொழிபெயர்ப்புகளில், ஆமென் என்ற சொல் காணப்படுவதில்லை.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

2 தெசலோனிக்கேயர் 3: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்