2 கொரி 2

2
1ஆகவே, நான் உங்களுக்கு வேதனையை உண்டாக்கும் விதத்தில் இன்னொரு தடவை வருகை தரக் கூடாதென்று மனதில் தீர்மானித்தேன். 2என்னுடைய வருகையால் நான் உங்களைத் துக்கப்படுத்துவேனாகில், என்னை மகிழ்விக்கக் கூடியவர் யார்? என்னால் துக்கப்படுத்தப்பட்ட நீங்கள்தானே என்னை மகிழ்விக்கக் கூடியவர்கள். 3நான் உங்களிடம் வரும்போது என்னை மகிழ்விக்க வேண்டியவர்களால் எனக்குத் துக்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே உங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு கடிதத்தை முன்னர் எழுதினேன். ஏனெனில் என்னுடைய மகிழ்ச்சியே உங்கள் அனைவரதும் மகிழ்ச்சியாயிருக்கும் என்று, உங்கள் எல்லோரையும் குறித்த நிச்சயம் எனக்கு இருக்கின்றது. 4நான் உங்களைத் துக்கப்படுத்துவதற்காக அல்ல, உங்கள் மீது வைத்திருக்கும் எனது அன்பின் ஆழத்தை நீங்கள் அறிந்துகொள்ளும்படியாக மிகுந்த துக்கத்தோடும், உள்ளத்தின் வேதனையோடும், அதிக கண்ணீரோடும் உங்களுக்கு அந்தக் கடிதத்தை எழுதினேன்.
பாவிக்கு மன்னிப்பு
5யாராவது ஒருவன் துக்கத்தை ஏற்படுத்தி இருந்தால் அவன் என்னை மட்டுமல்ல, ஓரளவு உங்கள் எல்லோரையும் துக்கப்படுத்தியிருக்கிறான். ஆனாலும் இதை நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை. 6அப்படிப்பட்டவனுக்கு உங்களில் அநேகரிடமிருந்து கிடைத்த தண்டனையே போதுமானது. 7அவன் அதிக துக்கத்தில் ஆழ்ந்து விடாதபடி நீங்கள் அவனை மன்னித்து ஆறுதல்படுத்துங்கள். 8ஆனபடியால், நீங்கள் அவனுக்கு உங்கள் அன்பை மீண்டும் உறுதிப்படுத்தும்படி நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். 9நீங்கள் எப்படிப்பட்டவர்கள், நீங்கள் எல்லாவற்றிலும் கீழ்ப்படிதல் உள்ளவர்களா என்று பரிசோதித்துப் பார்க்கவே என் கடிதத்தில் அவ்வாறு எழுதியிருந்தேன். 10நீங்கள் யாரையாவது மன்னித்தால், நானும் அவனை மன்னிக்கிறேன். நான் எதையாவது மன்னித்திருந்தால், அதை கிறிஸ்துவின் பிரசன்னத்தில் உங்களுக்காகவே மன்னித்திருக்கிறேன். 11சாத்தான் நம்மைத் தனது தந்திரத்தால் வஞ்சிக்காதபடி அவ்வாறு செய்தேன். ஏனெனில் சாத்தானின் வஞ்சகத் திட்டங்களை நாம் அறியாதவர்கள் அல்லர்.
புது உடன்படிக்கையின் ஊழியர்
12நான் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காகத் துரோவா பட்டணத்துக்குப் போனபோது கர்த்தரால் எனக்கு ஒரு கதவு திறக்கப்பட்டிருந்தது. 13ஆனாலும், அங்கே என் சகோதரன் தீத்துவைக் காணாதபடியால் என் உள்ளத்தில் சமாதானம் இல்லாதிருந்தது. ஆதலால், நான் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப் போனேன்.
14கிறிஸ்துவின் வெற்றிப் பவனியிலே எம்மை கண்காட்சி ஊர்வலமாய் கொண்டு சென்று, எல்லா இடங்களிலும் கிறிஸ்துவைப் பற்றிய அறிவின் நறுமணத்தை எமக்கு ஊடாக பரவச் செய்கின்ற இறைவனுக்கே நன்றி. 15ஏனெனில், மீட்கப்படுகின்றவர்கள் மத்தியிலும், அழிந்து போகின்றவர்கள் மத்தியிலும் நாம் இறைவனுக்கு கிறிஸ்துவின் நறுமணமாயிருக்கிறோம். 16ஒரு சாராருக்கு மரணத்தை ஏற்படுத்தும் துர்நாற்றமாகவும் மறு சாராருக்கு வாழ்வளிக்கும் நறுமணமாகவும் இருக்கின்றோம். இப்படிப்பட்ட பணியை செய்யும் ஆற்றலுள்ளவன் யார்? 17ஆதலால், இலாப நோக்கத்துக்காக இறைவனுடைய வார்த்தையை வியாபாரப் பொருளாக்கி, அதை மாற்றிப் பேசுகின்ற அநேகரைப் போல் இராமல், இறைவனால் அனுப்பப்பட்டவர்களும், நேர்மையானவர்களும் இறைவனின் பார்வையில் கிறிஸ்துவுக்குள் பேசுகின்றவர்களுமாக இருக்கின்றோம்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

2 கொரி 2: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்