2 கொரி 1

1
1இறைவனுடைய விருப்பப்படி கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனான பவுலாகிய நானும், நம்முடைய சகோதரனாகிய தீமோத்தேயுவும்,
கொரிந்து பட்டணத்திலுள்ள இறைவனுடைய திருச்சபையினர், மற்றும் அகாயா நாடு முழுவதிலும் உள்ள பரிசுத்தவான்கள் அனைவருக்கும் எழுதுகின்றதாவது:
2நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
ஆறுதலின் இறைவன்
3நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிதாவும், இறைவனுமாய் இருப்பவருக்கு துதி உண்டாவதாக. அவரே இரக்கங்களின் பிதாவும், எல்லாவிதமான ஆறுதல்களின் இறைவனுமாக இருக்கின்றார். 4நாம் இறைவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட ஆறுதலினாலே, எத்தகைய துன்பங்களை அனுபவிப்பவர்களையும் நாம் ஆறுதல்படுத்தும்படியாக, அவரே நம்முடைய எல்லா துன்பங்களிலும் நம்மை ஆறுதல்படுத்துகின்றவர். 5ஏனெனில், நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் வேதனைகளில் நாம் அதிகமதிகமாய் பங்குகொள்வது போல, கிறிஸ்துவின் மூலமாக நமக்குக் கிடைக்கின்ற ஆறுதலும் அதிகமதிகமாய் பெருகி வழிகின்றது. 6நாங்கள் துன்பப்பட்டால், அது உங்கள் ஆறுதலுக்கும் மீட்புக்குமே. நாங்கள் ஆறுதலடைந்தால், அது உங்கள் ஆறுதலுக்காகவே. அந்த ஆறுதலானது, எங்களுக்கு ஏற்பட்ட துன்பம் உங்களுக்கும் ஏற்படும்போது அதைப் பொறுமையுடன் சகித்துக்கொள்ள உங்களுக்கு உதவி செய்யும். 7துன்பம் அனுபவிப்பதில் நீங்கள் எங்களுடன் பங்குள்ளவர்களாக இருப்பது போலவே ஆறுதல் அடைவதிலும் பங்குள்ளவர்களாக இருப்பீர்கள் என்பதை நாங்கள் அறிந்திருப்பதனால், உங்களைக் குறித்து உறுதியான எதிர்பார்ப்போடு இருக்கின்றோம்.
8பிரியமானவர்களே, ஆசியாவில் நாங்கள் அனுபவித்த வேதனைகளைக் குறித்து நீங்கள் அறியாமல் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கை அற்றுப் போகத்தக்கதாக எங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட அழுத்தங்களுக்கு முகம் கொடுத்தோம். 9உண்மையிலேயே எங்களுக்கு மரணத் தீர்ப்பு வந்துவிட்டதாகவே நாங்கள் எண்ணியிருந்தோம். ஆனால் நாங்கள் எங்கள் மீது அல்லாமல் இறந்தோரை எழுப்புகின்ற இறைவன் மீது நம்பிக்கைகொள்ளும்படியே இவ்வாறு நடந்தது. 10அத்தகைய மரண ஆபத்திலிருந்தும் அவர் எங்களை விடுவித்தார். மீண்டும் அவரே எங்களை விடுவிப்பார். அப்படியே அவர் எங்களைத் தொடர்ந்தும் விடுவிப்பார் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு இருக்கின்றது. 11ஆதலால் நீங்களும் உங்களுடைய மன்றாடுதலினால் எங்களுக்கு உதவ வேண்டும். அப்போது பலருடைய மன்றாடுதலின் பலனாக இறைவன் எங்களுக்குக் கொடுத்திருக்கும் இந்த கிருபையுள்ள தயவுக்காக, அநேகர் எங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவார்கள்.
பவுலின் திட்டங்களில் மாற்றம்
12நாங்கள் பெருமிதம் அடைவதற்குக் காரணம் உண்டு: உலக வாழ்க்கையிலும், குறிப்பாக உங்களோடும் நாங்கள் உலக ஞானத்தோடு நடந்துகொள்ளாமல், இறைவனுடைய கிருபையினாலே பரிசுத்தமாகவும் உண்மையாகவும் நடந்தோம் என்று எங்கள் மனசாட்சி உறுதி செய்வதே அந்தக் காரணமாகும். 13அப்படிப்பட்ட நடத்தையின் காரணமாகவே, உங்களால் வாசிக்கவோ புரிந்துகொள்ளவோ முடியாத எதையும் எங்கள் கடிதங்களில் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை. 14நாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நீங்கள் ஓரளவே புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் உங்களைக் குறித்துப் பெருமிதம்கொள்வது போலவே நீங்களும் எங்களைக் குறித்துப் பெருமிதம்கொள்ளும் அளவுக்கு, ஆண்டவர் இயேசுவின் நாளில் நீங்கள் எங்களை முழுமையாய் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பு ஆகும்.
15அது நடக்கும் என்ற நிச்சயத்துடன் நான் இருந்தபடியால், நீங்கள் இரு முறை கிருபையை அனுபவிக்கும் பொருட்டு என் பயணத்தில் முதலாவதாக உங்களிடம் வருவதற்கே திட்டமிட்டேன். 16அதன்படி, மக்கெதோனியாவுக்குப் போகும் வழியில் உங்களைச் சந்திக்கவும், பின்பு மக்கெதோனியாவிலிருந்து திரும்பி வரும் வழியில் உங்களிடம் வந்து உங்களால் யூதேயாவுக்கு வழியனுப்பி வைக்கப்படவும் விரும்பினேன். 17எனவே, நான் தடுமாறுகின்ற அரை மனதுடன் இப்படித் திட்டமிட்டேன் என நினைக்கிறீர்களா? அல்லது, நான் ஒரே மூச்சில், “ஆம்” என்றும், அதே மூச்சில், “இல்லை” என்றும் மாற்றிச் சொல்லும் விதத்தில் மனித சிந்தனையில் திட்டங்களை வகுக்கின்றவனோ?
18இறைவன் நம்பகமானவராக இருப்பது போலவே, நாங்கள் உங்களுக்கு அறிவித்த செய்தியும், “ஆம்” என்றும் “இல்லை” என்றும் ஒரே மூச்சில் சொல்வதாக இருக்கவில்லை. 19இறைவனின் மகனான இயேசு கிறிஸ்துவை, நானும் சீலாவும் தீமோத்தேயுவும் உங்கள் மத்தியில் பிரசங்கித்தோமே, அவர் “ஆம்” என்றும் “இல்லை” என்றும் இராமல், எப்போதும் “ஆம்” என்றே இருக்கின்றார். 20இதனாலேயே இறைவனின் வாக்குறுதிகள் எல்லாம், கிறிஸ்துவில் “ஆம்” என்று இருக்கின்றன. அதனால் நாங்கள் இறைவனுக்கு மகிமையுண்டாக கிறிஸ்துவின் மூலமாக, “இது உண்மையிலும் உண்மை#1:20 இது உண்மையிலும் உண்மை – கிரேக்க மொழியில் ஆமென்” என்று சொல்கின்றோம். 21இப்போதும் இறைவனே எங்களையும், உங்களையும் கிறிஸ்துவுக்குள் நிலைப்படுத்தி, நம்மை அபிஷேகம் பண்ணி, 22நம்மீது தமது முத்திரை#1:22 முத்திரை – இது இறைவனுக்கு சொந்தமானவர்கள் என்பதற்கு அடையாளம் அடையாளத்தைப் பதித்து, நமது இருதயங்களில் ஆவியானவரை உத்தரவாதமாய்#1:22 உத்தரவாதமாய் – பெற்றுக்கொண்ட ஆரம்பத் தொகையாக கொடுத்திருக்கிறார்.
23ஆனாலும் நான் முதலில் திட்டமிட்டபடி கொரிந்துவுக்கு வரவில்லை.#1:23 வாசிப்பவர்கள் புரிந்துகொள்வதற்காகச் சேர்க்கப்பட்டுள்ள இச் சொற்றொடரானது மூலமொழியில் காணப்படுவதில்லை. ஏனெனில் என்னுடைய கண்டிப்பு உங்களுக்கு துன்பத்தைத் தந்துவிடக் கூடாது என்பதற்காகவே, கொரிந்துவுக்குத் திரும்பி வராமல் இருந்தேன். இதற்கு இறைவனை என் உயிர்மேல் சாட்சியாக அழைக்கின்றேன். 24இப்படியாக, நாங்கள் உங்களது விசுவாசத்தின்மீது ஆதிக்கம் செலுத்துகின்றவர்களாக இல்லாமல், நீங்கள் உங்களது விசுவாசத்தில் உறுதியாக இருப்பதால், உங்களுடன் இணைந்து, உங்கள் மனமகிழ்ச்சிக்காகச் செயற்படுகின்றவர்களாகவே இருக்கின்றோம்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

2 கொரி 1: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்