2 கொரி 10

10
பவுலின் ஊழியம்
1உங்களுடன் நேருக்கு நேராகப் பேசும்போது தாழ்மையுடனும், உங்களைவிட்டுத் தூரமாய் இருக்கும்போது கடுமையாகவும் பேசுகின்ற பவுலாகிய நான், கிறிஸ்துவினுடைய சாந்தத்தோடும், தயவுடனும் உங்களை வேண்டிக்கொள்வதாவது: 2நாங்கள் உலக வழக்கத்தின்படி நடக்கின்றோம் என்று எண்ணுகின்ற சிலருக்கு எதிராக, நான் அங்கு வரும்போது உறுதியுடன் கடுமையான நடவடிக்கை எடுக்க அவசியம் இல்லாதவாறு நடந்துகொள்ள உங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 3நாங்கள் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும், நாங்கள் உலகத்தாரைப் போல் போராடுகின்றவர்கள் அல்ல. 4எங்களுடைய போராட்டத்தில் நாங்கள் உபயோகிக்கும் ஆயுதங்கள் உலகத்து ஆயுதங்கள் அல்ல, மாறாக அவை அரண்களை அழிக்கக் கூடிய இறைவனுடைய வல்லமை பொருந்தியவையாய் இருக்கின்றன. 5அவற்றினால் நாம் விவாதங்களையும், இறைவனைப் பற்றிய அறிவை அடைவதற்கு எதிராக இருக்கும் எல்லா அகங்காரமான எண்ணங்களையும் தகர்த்தெறிந்து, அனைத்து சிந்தனைகளையும் சிறைப்படுத்தி கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் செய்கின்றோம். 6நீங்கள் முழுமையாக கீழ்ப்படிந்த பின்பு, கீழ்ப்படியாத அனைத்துக்கும் தண்டனை கொடுக்க ஆயத்தமாய் இருக்கின்றோம்.
7நீங்கள் வெளித் தோற்றத்தின்படி பார்க்கின்றீர்கள். ஒருவன் தான் கிறிஸ்துவுக்குரியவன் என்று நம்பினால், அவனைப் போலவே நாங்களும் கிறிஸ்துவுக்கு உரியவர்கள் என்பதை அவன் நினைவில்கொள்ளட்டும். 8கர்த்தர் எங்களுக்குக் கொடுத்திருக்கின்ற அதிகாரம் குறித்து நான் அளவுக்கதிகமாய் பெருமிதம் கொண்டாலும், அந்த அதிகாரம் உங்களைக் கட்டியெழுப்பவே அன்றி உங்களை அழித்து விடுவதற்காக அல்ல. எனவே அதைக் குறித்து நான் வெட்கத்துக்குள்ளாக மாட்டேன். 9நான் என் கடிதங்களினால் உங்களைப் பயமுறுத்துவதாக உங்களுக்குக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. 10ஏனெனில், “அவனுடைய கடிதங்கள் கடுமையும், கண்டிப்புமானவை. ஆனால் நேரில் அவனது தோற்றத்தில் கம்பீரம் இல்லை, அவனுடைய பேச்சும் அர்த்தமுள்ளதாக இல்லை” என்று சிலர் சொல்கின்றார்கள். 11நாங்கள் உங்கள் அருகாமையில் இல்லாதபோது கடிதத்தின் மூலமாய் சொல்வதையே உங்களுடன் இருக்கும்போதும் செயலில் காட்டுவோம் என்பதை அப்படிப்பட்டவர்கள் புரிந்துகொள்ளட்டும்.
12உங்கள் மத்தியில் தங்களை உயர்வாய்க் காட்டிக்கொள்கின்றவர்களுடன், எங்களை இணைத்துப் பார்க்கவோ அல்லது ஒப்பிட்டுப் பார்க்கவோ நாங்கள் துணிவதில்லை. அவர்கள் தங்கள் சொந்த அளவீடுகளினால் தங்களை மதிப்பீடு செய்து, தங்களை ஒருவரோடு ஒருவர் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கின்றபடியால், புத்தியில்லாதவர்களாய் இருக்கின்றார்கள். 13ஆனால் நாங்களோ, எல்லைகளை மீறி பெருமிதம்கொள்வதில்லை. இறைவன் எங்களுக்கு நியமித்த அவரது பணியின் அளவுக்கு உள்ளடங்கியே பெருமிதம்கொள்கின்றோம், அதற்குள் நீங்களும் உள்ளடங்கலாய் இருக்கின்றீர்கள். 14நாங்கள் எல்லை மீறிப் போகவில்லை. நாங்கள் உங்களிடம் வராதிருந்தால் நாங்கள் எல்லை மீறிய பெருமை கொண்டவர்களாக இருந்திருப்போம். ஆனால் நீங்கள் இருக்கும் இடம் வரைக்கும் கிறிஸ்துவின் நற்செய்தியுடன் நாங்களே முதலில் வந்தோம். 15மற்றவர்கள் செய்த வேலையை நாங்கள் செய்ததாக சொல்லி, எல்லை மீறி பெருமைகொள்ளவில்லை. ஆனால், உங்களுடைய விசுவாசம் பெருகும்போது உங்கள் மத்தியில் ஊழியத்துக்கான எங்கள் செல்வாக்கும் பெரிய அளவில் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு எமக்கு உண்டு. 16அப்போது உங்களுக்கு அப்பால் உள்ள பகுதிகளுக்கும் நாங்கள் நற்செய்தியை பிரசங்கிக்கலாம். மற்றவர்களால் செய்யப்பட்ட ஊழியத்தைக் குறித்து பெருமிதம்கொள்ள எங்களுக்கு அவசியமில்லை. 17வேதவசனம் சொல்கின்றபடி, “பெருமை பாராட்ட விரும்புகின்றவன், கர்த்தரிலேயே பெருமை பாராட்டட்டும்.”#10:17 எரே. 9:24 18ஏனெனில் தன்னைத் தானே பாராட்டிக்கொள்கின்றவன் அல்ல, கர்த்தருடைய பாராட்டைப் பெறுகின்றவனே ஏற்றுக்கொள்ளப்பட்டவன்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

2 கொரி 10: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்