1 பேதுரு 4
4
இறைவனுக்காக வாழ்வது
1எனவே கிறிஸ்து தமது சரீரத்தில் துன்பத்தை அனுபவித்ததனால், நீங்களும் அதேவிதமான மனநிலை உடையவர்களாய் இருங்கள். ஏனெனில், சரீரத்தில் துன்பப்படுகின்றவர்கள் பாவத்துடனான தொடர்பைத் துண்டித்துக்கொள்கின்றார்கள். 2அதனால் அவர்கள் பூமியிலே எஞ்சியுள்ள தமது வாழ்நாட்களிலே பாவ மனித இயல்பில் எழும் தீய ஆசைகளுக்காக வாழாமல், இறைவனுடைய விருப்பத்திற்காகவே வாழ்வார்கள். 3இறைவனை அறியாத மக்கள் செய்யும் செயல்களில் ஈடுபட உங்களுக்கு கடந்த காலத்தில் கிடைத்த நேரம் போதுமானதாக இருந்ததே! அக்காலத்தில் சிற்றின்ப வெறித்தனங்களிலும், பேராசைகளிலும், மதுவெறியிலும், ஒழுக்கக்கேடான கேளிக்கைகளிலும், மதுபான விருந்துகளிலும், அருவருப்பான விக்கிரக வழிபாட்டிலும் வாழ்ந்தீர்கள். 4உங்கள் பழைய நண்பர்களோ, நீங்கள் இப்போது தொடர்ந்தும் அதேவிதமான சீர்கேடு நிறைந்த வாழ்க்கையில் அவர்களுடன் இணைந்து மூழ்காதிருப்பதைக் கண்டு வியப்படைகிறார்கள். அதனால் அவர்கள் உங்களைக் குறித்து அவதூறாய் பேசுகிறார்கள். 5ஆனால் உயிர் வாழ்கின்றவர்களையும், மரணித்தவர்களையும் நியாயம் தீர்க்க ஆயத்தமாய் இருப்பவருக்கு அவர்கள் கணக்குக் கொடுக்க வேண்டும். 6இதன் காரணமாகவே இறந்தவர்களுக்கும் நற்செய்தி பிரசங்கிக்கப்பட்டது. அதனால் அவர்களின் உடலைப் பொறுத்தவரையில், எல்லா மனிதருக்கும் ஏற்படுகின்ற நியாயத்தீர்ப்பை அவர்கள் பெற்றிருந்தாலும், ஆவியைப் பொறுத்தவரையில் அவர்கள் இறைவனுடைய விருப்பத்தின்படி வாழ முடியும்.
7அனைத்துக்கும் முடிவு நெருங்கிவிட்டது. ஆகையால் நீங்கள் மன்றாடுவதற்கு ஏற்றவாறு மனத் தெளிவு உடையவர்களாயும், தன்னடக்கமுடையவர்களாயும் இருங்கள். 8எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவரில் ஒருவர் ஆழ்ந்த அன்பு செலுத்துங்கள். ஏனெனில் அன்பு, அநேக பாவங்களை மூடுகிறது. 9நீங்கள் ஒருவர் மீது ஒருவர் குறை கூறாமல் ஒருவரையொருவர் உபசரித்து நடவுங்கள். 10வெவ்வேறு விதங்களில் அமைந்திருக்கின்ற இறைவனுடைய கிருபை வரங்களின் உண்மையான நிர்வாகிகளாக, நீங்கள் ஒவ்வொருவரும் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட வரத்தை உபயோகித்து, ஒருவருக்கொருவர் பணி செய்யுங்கள். 11செய்தியைப் பேசுகின்ற வரத்தையுடையவன், இறைவனுடைய சொந்த வார்த்தைகளை பேசுபவனாகவே பேச வேண்டும். பணிவிடை செய்கின்றவன், இறைவன் கொடுக்கும் பலத்தின்படியே அதைச் செய்ய வேண்டும். அப்போது எல்லாக் காரியங்களிலும் இயேசு கிறிஸ்துவின் மூலமாக இறைவன் துதிக்கப்படுவார். அவருக்கே மகிமையும் வல்லமையும் என்றென்றும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
கிறிஸ்துவுக்காக அனுபவிக்கும் துன்பம்
12பிரியமானவர்களே! நீங்கள் பரீட்சிக்கப்படும்படி அனுபவிக்கும் சுட்டெரிக்கின்றதான துன்பங்களைக் குறித்து, ஏதோ விசித்திரமான ஒரு காரியம் உங்களுக்கு நடந்துவிட்டதென எண்ணி வியப்படைய வேண்டாம். 13கிறிஸ்துவினுடைய துன்பங்களில் நீங்கள் எந்தளவு பங்குகொள்கின்றீர்களோ அந்தளவு சந்தோஷப்படுங்கள். அப்போது அவருடைய மகிமை வெளிப்படுகையில் நீங்கள் சந்தோஷமும் அதிக மனமகிழ்ச்சியும் அடைவீர்கள். 14கிறிஸ்துவின் பெயருக்காக நீங்கள் அவமதிக்கப்பட்டால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனெனில் இறைவனின் ஆவியானவர், அதாவது மகிமையின் ஆவியானவர் உங்களில் தங்கி வாழ்கிறாரே. 15ஆனால் நீங்கள் அனுபவிக்கின்ற வேதனையானது, ஒரு கொலைகாரராக அல்லது கள்வராக அல்லது வேறு ஏதும் குற்றம் செய்தவராக அல்லது தேவையின்றி மற்றவருடைய விடயத்தில் தலையிட்டவராக இருந்ததால் வந்ததாக இருக்கக் கூடாது. 16மாறாக கிறிஸ்துவைப் பின்பற்றும் காரணத்திற்காக நீங்கள் வேதனையை அனுபவித்தால் அதைக் குறித்து வெட்கமடைய வேண்டாம். கிறிஸ்துவைப் பின்பற்றுபவன் என்ற பெயர் உடையவர்களாய் நீங்கள் இருப்பதைக் குறித்து இறைவனைத் துதியுங்கள். 17ஏனெனில், நியாயத்தீர்ப்பு தொடங்கும் காலம் வந்துவிட்டது. அது இறைவனுடைய குடும்பத்தினரிடமே முதலில் தொடங்கும். நியாயத்தீர்ப்பு நம்மிடத்தில் தொடங்குமானால், இறைவனுடைய நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னவாயிருக்கும்!
18வேதவசனத்தின்படி,
“நீதியுள்ளவர்கள் இரட்சிக்கப்படுவதே கடினமானது என்றால்,
இறைபக்தியற்றவர்களதும், பாவிகளதும் முடிவு என்னவாகும்?”#4:18 நீதி. 11:31
19ஆகவே இறைவனுடைய திட்டத்திற்கு இணங்க துன்பம் அனுபவிக்கின்றவர்கள், தங்களைப் படைத்த உண்மையுள்ளவரான இறைவனிடம் தங்களை ஒப்புக்கொடுத்து, தொடர்ந்து நன்மை செய்ய வேண்டும்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
1 பேதுரு 4: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.