பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 4:1-7

பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 4:1-7 TAERV

என்னுடைய அன்பான சகோதர சகோதரிகளே! நான் உங்களை நேசிக்கிறேன். உங்களைப் பார்க்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தீர்கள். உங்களைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். நான் சொன்னதைப் போன்று நீங்கள் கர்த்தரைத் தொடர்ந்து பின்பற்றி வாழுங்கள். கர்த்தருக்குள் ஒரே சிந்தையாய் இருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்தி சொல்லுகிறேன். ஏனென்றால் நீங்கள் என்னோடு உண்மையாய்ப் பணிபுரிகிறீர்கள். எனது நண்பர்களே! அப்பெண்களுக்கு உதவுமாறு உங்களை வேண்டிக்கொள்கிறேன். அவர்கள் நற்செய்தியை மக்களிடம் பரப்பிட உதவினார்கள். அவர்கள் கிலேமந்தோடும் மற்றவர்களோடும் சேர்ந்து எனக்கு உதவினார்கள். அவர்களின் பெயர்கள் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. எப்பொழுதும் கர்த்தருக்குள் முழுமையான மகிழ்ச்சியோடு இருங்கள். நான் மீண்டும் கூறுகிறேன். முழு மகிழ்ச்சியோடு இருங்கள். நீங்கள் சாந்தமும் கருணையும் கொண்டவர்கள் என்பதை மக்கள் எல்லாரும் தெரிந்துகொள்ளட்டும். கர்த்தர் விரைவில் வருவார். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு வேண்டிய எல்லாவற்றுக்காகவும் தேவனிடம் பிரார்த்தனை செய்து கேளுங்கள். நீங்கள் பிரார்த்தனை செய்யும் பொழுதெல்லாம் நன்றி செலுத்துங்கள். தேவனுடைய சமாதானம், உங்கள் இதயத்தையும் மனதையும் இயேசு கிறிஸ்துவுக்குள் பாதுகாக்கும். தேவன் தரும் சமாதானம் மிக உயர்ந்தது. நம்மால் புரிந்துகொள்ள முடியாதது.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 4:1-7