பிலிப்பியர் 4:1-7
பிலிப்பியர் 4:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆகையால் நான் அன்பாயிருக்கிற எனக்கு பிரியமானவர்களே, என் நண்பர்களே, அப்படியே நீங்களும் கர்த்தரில் உறுதியாய் நிற்கவேண்டும். நீங்களே நான் காண விரும்புகிற என் மகிழ்ச்சியும், என் கிரீடமுமானவர்கள். கர்த்தரில் ஒரே மனதுள்ளவர்களாய் இருக்கும்படி, எயோதியாளிடமும் சிந்திகேயாளிடமும் கேட்டுக்கொள்கிறேன். ஆம், என் உண்மையுள்ள உடன் கூட்டாளியே, உன்னிடமும் கேட்கிறேன். இந்தப் பெண்களுக்கு உதவிசெய். இவர்கள் கிலெமெந்தோடும், மற்ற எனது உடன் ஊழியரோடும் சேர்ந்து, என்னுடன் நற்செய்திக்காக போராடினார்கள். இவர்கள் எல்லோருடைய பெயர்களும் ஜீவப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. எப்பொழுதும் கர்த்தரில் மகிழ்ச்சியாய் இருங்கள். நான் மீண்டும் உங்களுக்குச் சொல்கிறேன்: மகிழ்ச்சியாயிருங்கள்! உங்கள் கனிவான குணம் எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்திருக்கட்டும். கர்த்தர் விரைவில் வருகிறார். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் எல்லாவற்றிலும் நன்றி செலுத்துவதோடு, உங்கள் விண்ணப்பங்களை, மன்றாட்டினாலும், வேண்டுதலினாலும் இறைவனிடம் அர்ப்பணியுங்கள். அப்பொழுது, விளங்கிக்கொள்ளும் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட இறைவனுடைய சமாதானமும், அமைதியும் உங்கள் இருதயங்களையும், மனங்களையும் கிறிஸ்து இயேசுவில் காத்துக்கொள்ளும்.
பிலிப்பியர் 4:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஆகவே, எனக்குப் பிரியமும் வாஞ்சையுமான சகோதரர்களே, எனக்குச் சந்தோஷமும் கிரீடமுமானவர்களே, பிரியமானவர்களே, இப்படியே கர்த்தருக்குள் நிலைத்து நில்லுங்கள். கர்த்தருக்குள் ஒரே சிந்தையாக இருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்திசொல்லுகிறேன். அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாக இருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடும் நற்செய்தியை அறிவிப்பதில் என்னோடு அதிகமாக உழைத்தார்கள், அவர்களுடைய பெயர்கள் ஜீவபுத்தகத்தில் இருக்கிறது. கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள்; சந்தோஷமாக இருங்கள் என்று மீண்டும் சொல்லுகிறேன். உங்களுடைய சாந்தகுணம் எல்லா மனிதர்களுக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் அருகில் இருக்கிறார். நீங்கள் எதைக்குறித்தும் கவலைப்படாமல், எல்லாவற்றையும்குறித்து உங்களுடைய விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்களுடைய இருதயங்களையும் உங்களுடைய சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவிற்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
பிலிப்பியர் 4:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)
என்னுடைய அன்பான சகோதர சகோதரிகளே! நான் உங்களை நேசிக்கிறேன். உங்களைப் பார்க்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தீர்கள். உங்களைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். நான் சொன்னதைப் போன்று நீங்கள் கர்த்தரைத் தொடர்ந்து பின்பற்றி வாழுங்கள். கர்த்தருக்குள் ஒரே சிந்தையாய் இருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்தி சொல்லுகிறேன். ஏனென்றால் நீங்கள் என்னோடு உண்மையாய்ப் பணிபுரிகிறீர்கள். எனது நண்பர்களே! அப்பெண்களுக்கு உதவுமாறு உங்களை வேண்டிக்கொள்கிறேன். அவர்கள் நற்செய்தியை மக்களிடம் பரப்பிட உதவினார்கள். அவர்கள் கிலேமந்தோடும் மற்றவர்களோடும் சேர்ந்து எனக்கு உதவினார்கள். அவர்களின் பெயர்கள் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. எப்பொழுதும் கர்த்தருக்குள் முழுமையான மகிழ்ச்சியோடு இருங்கள். நான் மீண்டும் கூறுகிறேன். முழு மகிழ்ச்சியோடு இருங்கள். நீங்கள் சாந்தமும் கருணையும் கொண்டவர்கள் என்பதை மக்கள் எல்லாரும் தெரிந்துகொள்ளட்டும். கர்த்தர் விரைவில் வருவார். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு வேண்டிய எல்லாவற்றுக்காகவும் தேவனிடம் பிரார்த்தனை செய்து கேளுங்கள். நீங்கள் பிரார்த்தனை செய்யும் பொழுதெல்லாம் நன்றி செலுத்துங்கள். தேவனுடைய சமாதானம், உங்கள் இதயத்தையும் மனதையும் இயேசு கிறிஸ்துவுக்குள் பாதுகாக்கும். தேவன் தரும் சமாதானம் மிக உயர்ந்தது. நம்மால் புரிந்துகொள்ள முடியாதது.
பிலிப்பியர் 4:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஆதலால், எனக்குப் பிரியமும் வாஞ்சையுமான சகோதரரே, எனக்குச் சந்தோஷமும் கிரீடமுமானவர்களே, பிரியமானவர்களே, இந்தப்படியே கர்த்தருக்குள் நிலைத்திருங்கள். கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்திசொல்லுகிறேன். அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷவிஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது. கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன். உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார். நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.