லூக்கா எழுதிய சுவிசேஷம் 6:27-49

லூக்கா எழுதிய சுவிசேஷம் 6:27-49 TAERV

“என் போதனைகளைக் கேட்கிற மக்களே உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் பகைவர்களை நேசியுங்கள். உங்களை வெறுக்கிற மக்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களிடம் தீயவற்றைக் கூறுகிற மக்களை ஆசீர்வதிக்குமாறு தேவனை வேண்டுங்கள். உங்களை இழிவாக நடத்துகிறவர்களுக்காகப் பிரார்த்தனை பண்ணுங்கள். ஒருவன் உங்களை ஒரு கன்னத்தில் அடித்தால் அவனை மறு கன்னத்திலும் அடிக்க அனுமதியுங்கள். உங்கள் அங்கியை யாரேனும் ஒருவன் எடுத்தால் உங்கள் சட்டையையும் அவன் எடுத்துக்கொள்ள அனுமதியுங்கள். உங்களிடம் கேட்கிறவனுக்குக் கொடுங்கள். உங்களுக்குரிய பொருளை ஒருவன் எடுத்துக்கொண்டால் அதைத் திரும்பக் கேட்காதீர்கள். உங்களுக்குப் பிறர் எதைச் செய்ய விரும்புகிறீர்களோ அதையே பிறருக்கும் செய்யுங்கள். “உங்களை நேசிக்கிறவர்களையே நீங்களும் நேசித்தால் அதற்காக உங்களைப் புகழ வேண்டியது தேவையா? இல்லை. பாவிகளும் தங்களை நேசிக்கிறவர்களிடம் அன்பு காட்டுகிறார்களே! உங்களுக்கு நல்லதைச் செய்பவர்களுக்கு நீங்களும் நன்மை செய்தால், அவ்வாறு செய்வதற்காக உங்களைப் புகழ வேண்டுமா? இல்லை. பாவிகளும் அதைச் செய்கிறார்களே! திருப்பி அடைத்துவிட முடிந்தவர்களுக்கு நீங்கள் கடன் கொடுத்தால், உங்களை அதற்காகப் புகழக் கூடுமா? இல்லை. பாவிகளும் கூட பிற பாவிகளுக்கு அதே தொகையைத் திரும்பப் பெறும்படியாக கடன் உதவி செய்கிறார்களே! “எனவே, பகைவர்களிடம் அன்பு காட்டுங்கள். அவர்களுக்கு நன்மை செய்யுங்கள். திரும்பக் கிடைக்கும் என்கிற நம்பிக்கை சிறிதும் இல்லாவிடினும் கூட கடன் கொடுங்கள். நீங்கள் இந்தக் காரியங்களைச் செய்தால் அதற்கு மிகுந்த பலனைப் பெறுவீர்கள். மகா உன்னதமான தேவனின் பிள்ளைகள் ஆவீர்கள். ஆம், ஏனெனில் பாவிகளுக்கும், நன்றியற்ற மனிதர்களுக்கும் தேவன் நல்லவர். உங்கள் தந்தை அன்பும் இரக்கமும் உடையவராக இருப்பது போலவே, நீங்களும் அன்பும் இரக்கமும் உடையவர்களாக இருங்கள். “மற்றவர்களை நியாயம் தீர்க்காதிருங்கள். இதனால் நீங்கள் நியாயம் தீர்க்கப்படமாட்டீர்கள். மற்றவர்களைப் பழிக்காதீர்கள். இதனால் நீங்களும் பழிக்கு ஆளாகமாட்டீர்கள். பிறரை மன்னியுங்கள். இதனால் நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள். பிறருக்குக் கொடுங்கள். நீங்களும் பெறுவீர்கள். உங்களுக்கு மிகுதியாக அளிக்கப்படும். உங்கள் கைகளில் கொள்ளமுடியாதபடிக்கு உங்களுக்கு அள்ளி வழங்கப்படும். உங்கள் மடிகளில் கொட்டும்படிக்கு மிகுதியாக உங்களுக்குத் தரப்படும். நீங்கள் பிறருக்குக் கொடுக்கிறபடியே தேவனும் உங்களுக்குக் கொடுப்பார்” என்றார். இயேசு அவர்களுக்கு ஓர் உவமையைக் கூறினார். “ஒரு குருடன் இன்னொரு குருடனுக்கு வழிகாட்ட முடியுமா? இல்லை. இருவரும் குழிக்குள் விழுவார்கள். ஆசிரியரைக் காட்டிலும் மாணவன் நன்கு கற்றுத் தேர்ந்தபோது, தனது ஆசிரியரைப்போல் விளங்குவான். “உன் கண்ணில் இருக்கிற பெரிய மரத்துண்டைக் கவனிக்க முடியாதபோது, உன் சகோதரன் கண்ணில் இருக்கிற சிறு தூசியை நீ கவனிப்பது ஏன்? நீ உன் சகோதரனை நோக்கி, ‘சகோதரனே! உன் கண்ணில் இருக்கிற சிறு தூசியை எடுத்துப் போடட்டுமா?’ என்கிறாய். ஏன் இதைச் சொல்கிறாய்? நீ உன் கண்ணில் இருக்கிற பெரிய மரத்துண்டைப் பார்ப்பதில்லை. நீ வேஷமிடுகின்றாய். முதலில் உன் கண்ணில் இருக்கும் மரத்துண்டை எடுத்துவிடு. அப்போது உன் சகோதரன் கண்ணிலிருக்கும் தூசியை எடுத்துப்போடுவதற்கு நீ தெளிவாகப் பார்க்க முடியும். “ஒரு நல்ல மரம் கெட்ட பழத்தைக் கொடுக்காது. அவ்வாறே ஒரு கெட்ட மரமும் நல்ல பழத்தைக் கொடுக்காது. ஒவ்வொரு மரமும் அது கொடுக்கிற பழத்தினால் அறியப்படும். முட்செடிகளில் இருந்து மக்கள் அத்திப் பழங்களைச் சேர்ப்பதில்லை. புதர்களிலிருந்து திராட்சைப் பழங்களை அவர்கள் பெறுவதில்லை. நல்ல மனிதனின் இதயத்தில் நல்ல காரியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். எனவே அவன் இதயத்தில் இருந்து நல்ல காரியங்களையே வெளிப்படுத்துவான். ஆனால், தீய மனிதனின் இதயத்தில் தீய காரியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். எனவே அவன் தீய காரியங்களை வெளிப்படுத்துவான். ஏனெனில் ஒருவனின் வாய் வழியே வெளிப்படும் வார்த்தைகள் அவனுடைய இதயத்தில் இருப்பவற்றின் வெளிப்பாடே ஆகும். “நான் கூறுவதை நீங்கள் செய்யாமல் என்னை ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என்று ஏன் அழைக்கிறீர்கள்? என்னிடம் வந்து, என் போதனைகளைக் கேட்டு, அதன்படி கீழ்ப்படிகிற ஒவ்வொரு மனிதனும், வீட்டைக் கட்டுகிற ஒரு மனிதனைப் போல் இருக்கிறான். அவன் ஆழமாகத் தோண்டி, உறுதியான பாறையின் மீது அவனுடைய வீட்டைக் கட்டுகிறான். வெள்ளப்பெருக்கின்போது, அவ்வீட்டை வெள்ளம் அடித்துச் செல்ல முற்படும். ஆனால் வெள்ளப்பெருக்கு அவ்வீட்டை அசைக்க முடியாது. ஏனெனில் அவ்வீடு உறுதியாகக் கட்டப்பட்டுள்ளது. “ஆனால் என் வார்த்தையைக் கேட்டு, அவற்றின்படி செய்யாத ஒவ்வொரு மனிதனும் பாறையின் மேல் தன் வீட்டைக் கட்டாத மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறான். வெள்ளப் பெருக்கின்போது அவ்வீடு எளிதில் இடிந்து போகும். அவ்வீடு முழுக்க நாசமாகிவிடும்” என்றார்.