யோர்தான் நதியில் இருந்து இயேசு திரும்பினார். அவர் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார். ஆவியானவர் இயேசுவை வனாந்தரத்திற்குச் செல்ல ஏவினார். அங்கு பிசாசு இயேசுவை நாற்பது நாட்கள் சோதனைக்கு உட்படுத்தினான். அந்நாட்களில் இயேசு எதையும் உண்ணவில்லை. சோதனைக் காலமான அந்த நாட்கள் கழிந்த பின்னர், இயேசுவுக்கு மிகுந்த பசி உண்டாயிற்று. பிசாசு இயேசுவை நோக்கி, “நீர் தேவனுடைய குமாரனானால், இந்தக் கல்லுகளை அப்பங்களாகும்படி சொல்லும்” என்றான். அதற்கு இயேசு, “வேதவாக்கியங்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “‘மக்களை உயிரோடு பாதுகாப்பது அப்பம் மட்டுமல்ல,’” என்றார். அப்போது பிசாசு அவரை உயரமான ஓர் இடத்துக்கு அழைத்துக்கொண்டு போய் ஒரு நொடிக்குள் உலகின் எல்லா இராஜ்யங்களையும் காண்பித்தான். பிசாசு இயேசுவை நோக்கி, “உனக்கு இந்த எல்லா இராஜ்யங்களையும், அதிகாரங்களையும், அவற்றின் மகிமையையும் கொடுப்பேன். அவை எல்லாம் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நான் கொடுக்க விரும்புகிறவனுக்கு அவற்றைக் கொடுக்கமுடியும். நீர் என்னை வணங்கினால் இவை அனைத்தையும் உமக்குக் கொடுப்பேன்” என்று கூறினான். பதிலாக இயேசு, “வேதவாக்கியங்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது, “‘உங்கள் தேவனாகிய கர்த்தரை மட்டும் வழிபடுங்கள்; அவருக்கு மட்டுமே சேவை செய்யுங்கள்.’” என்றார். பின் பிசாசு இயேசுவை எருசலேமுக்கு அழைத்துச் சென்றான். தேவாலயத்தின் உயர்ந்த இடத்தில் இயேசுவை நிற்க வைத்தான். அவன் இயேசுவிடம், “நீர் தேவனுடைய குமாரனானால் கீழே குதியும், “‘தேவன் தம் தூதர்களுக்கு உம்மைக் காக்கும்படியாகக் கட்டளையிடுவார். உமது பாதங்கள் பாறையில் இடித்துவிடாதபடிக்கு அவர்கள் தம் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்’ என்று வேதவாக்கியங்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது” என்றான். அவனுக்கு இயேசு, “‘உன் தேவனாகிய கர்த்தரைச் சோதிக்காதே’ என்றும் கூட வேதவாக்கியங்கள் சொல்கிறதே” என்று பதில் சொன்னார். பிசாசு இயேசுவை எல்லா வகையிலும் சோதித்து முடித்தான். இன்னும் தகுந்த காலம் வரும் வரைக்கும் காத்திருக்க முடிவு செய்து அவரிடமிருந்து விலகிச் சென்றுவிட்டான். பரிசுத்த ஆவியானவரின் வல்லமையோடு இயேசு கலிலேயாவுக்குத் திரும்பினார். இயேசுவைப் பற்றிய செய்திகள் கலிலேயா தேசத்தைச் சுற்றியுள்ள எல்லா பகுதிகளிலும் பரவின. இயேசு யூதர்களின் ஜெப ஆலயங்களில் போதிக்க ஆரம்பித்தார். எல்லா மக்களும் அவரைப் புகழ்ந்தனர். தான் வளர்ந்த இடமாகிய நாசரேத்திற்கு இயேசு பயணம் செய்தார். யூதர்களின் ஓய்வு நாளில் அவர் வழக்கம் போல் ஜெப ஆலயத்திற்குச் சென்று வாசிப்பதற்காக எழுந்து நின்றார். ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் அவருக்குக் கொடுக்கப்பட்டது. இயேசு புத்தகத்தைத் திறந்து கீழ்வரும் பகுதி எழுதப்பட்டிருப்பதைக் கண்டார்: “தேவனுடைய ஆவி என்னிலுள்ளது. ஏதுமற்ற மக்களுக்கு நற்செய்தியைப் போதிப்பதற்கு தேவன் என்னைத் தேர்ந்தார். கைதிகள் விடுதலை பெறவும் குருடர்கள் மீண்டும் பார்வை பெறவும் அம்மக்களுக்குப் போதிக்கும்படியாக தேவன் என்னை அனுப்பினார். தங்கள் துன்பத்தினின்று பலவீனர்கள் விடுதலை பெறும்பொருட்டு தேவன் என்னை அனுப்பினார். மக்களுக்கு தேவன் இரக்கம் காட்டும் காலத்தை அறிவிக்கும்படியாக தேவன் என்னை அனுப்பினார்” என்பதை இயேசு வாசித்துவிட்டு புத்தகத்தை மூடினார். அவர் புத்தகத்தை திருப்பித் தந்துவிட்டு உட்கார்ந்தார். ஜெப ஆலயத்திலிருந்த ஒவ்வொருவரும் இயேசுவைக் கூர்ந்து நோக்கினர்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் லூக்கா எழுதிய சுவிசேஷம் 4
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: லூக்கா எழுதிய சுவிசேஷம் 4:1-20
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்